சட்டமன்ற தேர்தல் என்பதை விட கொள்கை ரீதியான போராட்டம்: தமிழ் மண்ணில் திராவிட நெறிக்கு எதிரான சக்தி வெற்றி பெற முடியாது

இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்

சென்னை, மார்ச் 28- சட்டமன்ற தேர்தல் என்பதை விட கொள்கை ரீதியான போராட்டம், தமிழ் மண்ணில் திராவிட நெறிக்கு எதிரான சக்தி வெற்றி பெற முடியாது என இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

அவர்  26.3.2021 அன்று செய்தியாளருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு,

கேள்வி: தமிழகத்தில் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் சொல்கிறதே?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோகமான வெற்றியை பெறும். எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு காரணம் 10 ஆண்டு காலமாக தமிழ கத்தை ஆண்ட அதிமுக கொள்கையை இழந்து இருக் கிறது. நாட்டை அடகு வைத்திருக்கிறது. பொருளாதார சிதைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களுடைய நலவாழ்வை பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறதுஆகவே வரக் கூடிய தேர்தலில் 10 ஆண்டு கால ஆட்சி நடந்தது போதும். இனி வெற்றி பெற முடியாது. ஆட்சி மாற்றம் தான் வேண்டும். கலைஞர் 2006 முதல் 2011 வரை எப்படி ஒரு அற்புதமான ஆட்சியை தந்தாரோ, அதை விட சிறந்த ஆட்சி தமிழகத்துக்கு வேண்டும் என்பது தான். திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இது நாட்டுமக்களின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது.

கேள்வி: மக்களிடம் எதிர்ப்பு உள்ள நிலையில் வாக்குகளை பணம் கொடுத்து பெற்று விடலாம் என்று அதிமுக நினைக்கிறதே?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: தமிழகத்தில்

6 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், பணம், பணத்துக்காக ஓட்டு போடுவது, ஓட்டை விற்பது 4 சதவீதத்துக்கு மேலே இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தலில் பணம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே செல்லுபடியாகுமே தவிர தமிழகம் முழுவதும் பணம் கொடுத்து ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்கி விட முடியாது. அது சரித்திரம் இல்லை. தமிழக மக்கள் பணத்துக்காக வாக்களிப்ப தில்லை. தமிழக மக்கள் ஓட்டை விற்க தயாராக இல்லை. ஓட்டை பணத்துக்காக விற்று விட்டு இன்னும் 5 ஆண்டு காலம் துன்பப்பட தயாராக இல்லை. 10 ஆண்டுகள் துன்பப்பட்டது போதும். ஆட்சி மாற்றம் வேண்டும். அதுவும் கலைஞர் ஆட்சி போல நல்லாட்சி வரவிருக் கிறது. பணத்தை வேண்டுமென்றால் அவர்கள் தரலாம். ஆனால், அவர்களிடம் ஓட்டை மட்டும் பெற முடியாது.

கேள்வி: அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டி திருப்பி அனுப்புகிறார்களே?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: அதிமுக அரசின் சார்பாக அறிவிப்புகள் ஆயிரக்கணக்கில் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், அதனை சாதனைகள் ஆக்கிய பட்டியல் பூஜ்ஜியமாக உள்ளது. இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து ஆங்காங்கே விரட்டுகிறார்கள். நானும் பல கிராமத்திற்கு சென்றுள்ளேன். கலைஞர் ஆட்சிக் காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் அற்புதமாக போடப்பட்டிருக்கும். இப்போது பெரும் பாலான கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாகத் தான் இருக்கிறது. அந்த அவலத்தை பார்க்கக் கூடிய கிராம மக்கள், அதையும் செய்யாமல் ஓட்டுக் கேட்டு வந்து இருக்கிறீர்கள் என்று தான் விரட்டி அடிக்கின்றனர். ஊர்கள் தோறும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்யவில்லை. விவசாய நிலங்களை பாழ் படுத்தி இருக்கிறார்கள். விவசாயத்துக்கு செல்லக்கூடிய வாய்க்கால், கால்வாய் தூர்வாரப்படாமல் மோசடி தான் நடந்து இருக்கிறது. சில இடங்களில் ஊருணிகளை மட்டும் தூர்வாரி விட்டு, பெரும்பாலான நீர்ப்பாசனம் நடக்க கூடிய ஏரிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. இதை கண்கூடாக பார்க்கும் மக்கள் தங்களை ஏமாற்றி இவர்கள் வாழ்கிறார்களே தவிர தங்களது வாழ்க்கைக்கு வழி பிறக்கவில்லை என்று தான் விரட்டி அடிக்கின்றனர்.

கேள்வி: அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, அடுத்து வரும் அரசிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துமா?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடந்த ஊழலை பற்றி திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் மிகப்பெரிய பட்டியலை போட்டு ஆளுநரிடம்  கொடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக ஆட்சி வந்தவுடன் விசாரணை நடக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறதா?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: தேர்தல் ஆணையம் நிறைய சட்டங்களை போடுகிறார்கள். அவர்கள் போடும் சட்டத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்களாக தான் இருக்கின்றனர். தவறு செய்பவர்கள் யாரும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரியவில்லை

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறதே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: பல முனை போட்டி போன்ற தோற்றம் ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட் டுள்ளது. உண்மையில் தமிழகத்தில் உள்ள போட்டி திராவிட நெறியை பின்பற்றக்கூடிய இயக்கங்களுக்கும், அதை எதிர்த்து நிற்க கூடிய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த தேர்தல். சட்டமன்ற தேர்தல் என்பதை விட கொள்கை ரீதியான போராட்டம் என்றே நான் நினைக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெரியவர்கள், காமராஜர், காயிதே மில்லத் போன்ற நல்லவர்கள் தமிழகத்தில் எந்த  ஜனநாயகத்தை நிலைநாட்டப் பாடுபட்டார்களோ, மாதிரியான மக்கள் நலத்திட்டங்களை வகுத்து தரப் பாடுபட்டு வந்திருக்கிறார்களோ அவற்றிற்கு எதிராக, ஒரு மதரீதியான கொள்கையை புகுத்தி, மத ரீதியிலேயே சிந்தித்து, மதத்தையே அரசியலாக்கி அதற்காக கச்சை கட்டிக் கொண்டிருக்கிற எதிர்ப்பு சக்தியான பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திராவிட நெறியை எதிர்த்து நிற்கக்கூடிய சக்திக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டத்தில் தமிழ் மண்ணில் திராவிட நெறிக்கு எதிரான சக்தி வெற்றி பெற முடியாது. எனவே, நாலுமுனை, அய்ந்து முனை என்பது உண்மை யல்ல. திமுக கூட்டணி கட்சிக்கும்-திராவிட நெறியை எதிர்க்கும் அதிமுக- _ பாஜ கூட்டணிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான்.

 கேள்வி: இந்த தேர்தலில்  இளம் வாக்காளர்கள் எந்த பக்கம் வாக்காளிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

கே.எம்.காதர் மொய்தீன் பதில்: இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். வயதானவர்களை விடவும், மத்திய வயதினை உடையவர்களை விடவும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இளைஞர்கள் இப்போது மிக நுட்பமானவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும், வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாகவும் இருக்கி றார்கள். அவர்கள் நாட்டு நடப்பை பார்க்கிறார்கள். திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் எவ்வளவு உழைக்கிறார் என்று பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக திமுக வெளியிட்டிருக்கக்கூடிய தேர்தல் அறிக்கை அவர்களது வாழ்வுக்கு, வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஏழை எளிய மாணவர்கள், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நலம் பயக்கும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஆட்சி மாற்றத்திற்காகவும், திமுக தலைமையிலான அரசு ஏற்பட வேண்டும் என்று வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை பற்றி சந்தேகப்பட தேவையில்லை. அவர்கள் நம்மவர்கள். நாட்டை பாதுகாக்க கூடியவர்கள். திராவிட நெறியை தூக்கி நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்ற தீரர்கள்.

-நன்றி: 'தினகரன்' இணையம், 27.3.2021 

Comments