காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால். மார்ச் 16- காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், காரைக்கால் தமிழ் பழச்சாறு நிலையத்தில் 7.3.2021 அன்று புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காரைக்கால் மண்டல தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மண்டல இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் தொடக்கவுரை ஆற்றினார்.

தலைமையுரையாற்றிய புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி அவர்கள்:- கழகத்தில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு திராவிட கழகம் பற்றிய வரலாறுகளையும், கழகத்தில் இளைஞர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். “திராவிடம் வெல்லும்என்பதையும், இந்த கருத்தியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி நாம் மக்களிடம் திண்ணைப் பிரச்சாரமாகவும், தெருமுனை கூட்டங்களாகவும், தேவைப்பட்டால் பொதுக்கூட்டம் வாயிலாகவும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை விளக்கினார்.

தற்போது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் சங்பரிவாரங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலூன்றுவதை நாம் அரசியல் ரீதியாக தடுக்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். குடந்தைபொதுக்குழுவில் தமிழர் தலைவர் அறிவிக்கும் பிரகடனத்தை ஏற்று நாம் அதன் வழியில் செயல்பட்டு திராவிடம் வெல்வதற்கும் சமூக நீதி வெல்வதற்கும், சமூக அநீதி, சனாதனம் தோற்கடிக்கப்படுவதற்கும் நாம் களப்பணி ஆற்ற வேண்டும் என விளக்கமாக பேசினார்.

அனைவரும்விடுதலை'யை வாங்கிப் படிக்க வேண்டும். ‘விடுதலை' சந்தா சேர்ப்பு பணி தொடர்ந்து செய்ய வேண்டும். குடந்தை பொதுக்குழுவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இறுதியில் மோ.மோகன்ராஜ் நன்றியுரை கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விபரம்:

சிவ.வீரமணி, குரு.கிருஷ்ணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம், மு.பி.பெரியார் கணபதி, இரா.இராமலிங்கம், கி.ராசரத்தினம், .பன்னீர்செல்வம், .கிருட்டிணசாமி, .அன்பானந்தம், .லூயிஸ் பியர், கி.கார்த்திகேயன், .வேல்முருகன்.ஜெ.செந்தமிழன், கா.ராம்குமார், பூ.தேவேந்திரன், மோ.மோகன்ராஜ்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) 13.3.2021 அன்று குடந்தைபொதுக்குழுவில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் அறிவிக்கும் அறிவிப்பினை ஏற்று கழகத் தோழர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

2) அனைவரும் விடுதலையை வாங்கிப் படிக்க வேண்டும். ‘விடுதலை' சந்தா பணியில் தீவிரம் காட்ட வேண்டும் சமூக ஊடகங்கள் வாயிலாக விடுதலையை பரப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) புதுச்சேரியில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியை, தனது அதிகார பலத்தாலும், பணபலத்தாலும் கலைத்த பி.ஜே.பி. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

4) குடந்தை பொதுக்குழுவில் தமிழர் தலைவர் அறிவிக்கும் பிரகடனத்தை ஏற்று புதுச்சேரியில் மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி அமைந்திட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது எனவும், இதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) புதுச்சேரியின் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு பேர அரசியலை கண்டித்து, நமது தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் உரிய நேரத்தில் விடுவிக்கப்பட்ட அறிக்கையினை  துண்டறிக்கைகளாக பொதுமக்களிடமும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் கொண்டு சேர்க்கப்பபட்டது.

6) மதவாத சக்திகளை கண்டித்தும், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட பி.ஜே.பி. அதன் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து உரிய நேரத்தில் அறிக்கை வெளியிட்டு அதை துண்டறிக்கைகளாகவும் தயார் செய்து கொடுத்த தலைமை கழகத்திற்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

7) தேர்தலை காரணங்காட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த உலகத் தலைவர் பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையை மறைத்ததை அறிந்த புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி அறிவுறுத்தலின் படியும், காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளர் மேனாள் அமைச்சர் .எம்.எச்.நாஜீம் அவர்களின் ஆதரவோடு, காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு, சிலையை மறைத்து இருந்த துணி அகற்றப்பட்டது. விரைவாக செயல்பட்ட மண்டல தலைவர், செயலாளர், காப்பாளர், இளைஞரணி தலைவர் இவர்களின் செயல்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

8) குடந்தை பொதுக்குழுவில் கழகத் தோழர்கள் அனைவரும் வேனில் சென்று கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் கன்னக்கல் என்ற ஊரில் 10 வயது சிறுமி ஆயிஷாவை, சோதிடர் பேச்சைக் கேட்டு பெற்றோர்களே தீயிட்டுக்கொளுத்தி நரபலி கொடுத்துள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மூடப்பழக்கங்களுக்கு ஆளாகாமல் பெற்றோர்கள் பிள்ளைகளை அறிவியல் மனப்பான்மையோடு வளர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10) உடனடியாக அந்தப் பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சார கூட்டங்களை நான்கு இடங்களில் நடத்திட, திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்திற்கு ஆணையிட்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

Comments