தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா?

பாரதீய ஜனதா என்பது ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து மத வெறி அமைப்பின் அரசியல் வடிவம்.

பா...வின் பொதுச் செயலாளராக வரக்கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்-சிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும் என்று சட்டத் திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பது அவர்களின் கோட்பாடாகவே உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் - அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், ஒரு பிரதமரே ராமன் கோயில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவதிலிருந்தே அவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.

தேர்தல் பரப்புரைகளில்கூட இந்து, முஸ்லிம்  பிரச்சினை குறித்து விலாவாரியாகப் பேசும் நிலையைப் பார்க்க முடிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராமன், கிருஷ்ணன் அவதாரம் என்று பா...வைச் சேர்ந்த ஒரு முதல் அமைச்சரே (உத்தரகாண்ட்) கூறுகிறார் என்றால்,  நாடு எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.

பிரதமரைக் கிருஷ்ணனாகவும், ராமனாகவும் பிரச்சாரம் செய்யும்நிலையில், அதைப் பற்றிக் கருத்து தெரிவிக்கும் உரிமை இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறதே.

அப்படி விமர்சனம் செய்யும் பட்சத்தில் "அய்யய்யோ! இந்து மதத்தை விமர்சிக்கிறார்களே,  இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்களே" என்று கூக்குரல் போடுவது எவ்வளவு நேர்மையற்ற செயல்.

1971-இல் ராமன் பிரச்சினையையும், 2019 மக்களவைத்  தேர்தலில் கிருஷ்ணன் பிரச்சினையையும் கையில் எடுத்துக் கெண்டு கிளம்பவில்லையா?

தமிழ்நாட்டு மக்கள் அத்தகைய வாதிகளுக்கு வாக்குகள் மூலம் நல்ல அளவிற்கு மரண அடி கொடுத்ததுண்டே!

உங்கள் மதமும், உங்கள் கடவுளும் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்து தொலையட்டும்! குளியல் அறையில் ஒருவனுக்கு உள்ள உரிமை பொது வெளியில் கிடையாது  என்பது ஆரம்பப் பாடம்!

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. விலைவாசி விலா எலும்பை முறித்து விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. ரூபாய் மதிப்பு என்ற ஒன்றைத் திடீர் என்று திணித்து, நாட்டு மக்களை நடுவீதியில் நிறுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி.

எனக்கு 50 நாள் அவகாசம் தாருங்கள் - நாட்டை நிமிர்த் திக் காட்டுகிறேன் என்ற பிரதமரின் வாய்ச் சவடாலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்றெல்லாம் நீட்டி முழக்கினார்களே - நிலைமை என்ன? இருந்த வேலை யையும் இழந்து கைப்பிசைந்து நிற்கும் அவல நிலையே!

இவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும்நோக்கம் தான் - மதவாதப் பிரச்சினை! "ஜப்பான் பாரு - ஜெர்மன் பாரு!" என்று அந்தக் காலத்தில் படவித்தை காட்டுவார்களே - அதேபோல, "முஸ்லிம்களைப் பாருங்கள் - கிறித்தவர்களைப் பாருங்கள்!" என்று உசுப்பி விடும் வேலையில் ஒரு மத்திய அரசே, பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களே உதார் விடுகிறார்கள் என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது.

இப்பொழுது, ஹிந்து முன்னணி என்றும், பூஜாரி பேரவை என்றும் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வீட்டுக்கு வீடு விநியோகம் செய்து கொண்டுள்ளனர்.

தி.மு.. ஹிந்து விரோதக் கட்சி என்று கிளப்பி விடுகிறார் கள். ஹிந்துக் கடவுள் படங்களை அச்சிட்டு, அதில் தாறு மாறாக வாசகங்களையும் பொறித்து, தேர்தல் களத்தையே மதக் களமாக மாற்றி மதக்கலவரங்களை உண்டாக்கலாம் என்று திட்டமிட்டுக் களத்தில் இறங்கிவிட்டனர்.

தேர்தலில் குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி, துண்டு வெளியீடுகளை வழங்கலாமா? தேர்தல் களத்தில் மதப் பிரச்சினையை மய்யப்படுத்திப் பிரச்சாரம் செய்யலாமா?

சட்டம் இதனை அனுமதிக்கிறதா? தேர்தல் ஆணையம் இவற்றைக் கண்காணிக்க கடமைப்படவில்லையா?

கடந்த 15ஆம் தேதி தினமலர் ஏட்டில் பக்கம் 11இல் "ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம் - திமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி" என்ற தலைப்பில் நாலு பத்தி அளவுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளதே!

தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனத்துக்கு இது வர வில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா!

1994இல் மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

"தானே நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து - பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கப்சே என்பவரின் தேர்தல் செல்லத்தக்கது அல்ல என்பது தான் அந்தத் தீர்ப்பு!

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்ஸ் சிங் - இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். விசுவ இந்து பரிஷத்தைச் சார்ந்த சத்விரித் தாம்பரா என்பவரும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பிரமோத் மகாஜன் என்ப வரும் - பா.-. வேட்பாளருக்கு ஆதரவாக - இந்து மத அடிப்படையில் வாக்கு கேட்டார்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்! 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி, விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் - சத்விரிதாம்பரா, இந்து மதத்தின் அடிப்படையில் ஓட்டுகளைக் கேட்டது உண்மை என்றும், அந்த மேடையில் பா.-. வேட்பாளர் ராம்கப்சே வும் இருந்தார் என்றும் உறுதிப்படுத்திய நீதிபதி .சி.அகர் வால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 123(3)க்கு இது எதி ரானது என்று கூறி - தேர்தலை, செல்லாது என்று அறிவித் திருக்கிறார்.

"பா...வைச் சார்ந்த பிரமோத் மகாஜன் என்பவரும் - வேட்பாளர் கப்சேயும், இந்துக்களுக்கு முஸ்லிம்கள் பகைவர்கள் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்துக் களும், முஸ்லிம்களும் நண்பர்களாக வாழும் நிலையில் - இரு சமூகத்தினருக்கு இடையே பகையை உருவாக்குவ தாகும். சத்விரிதாம்பராவும் - பிரமோத் மகாஜனும் கூட்டு சேர்ந்து கொண்டு - மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்: அதற்கு வேட்பாளரும் துணைபோயிருக்கிறார்."

- என்று நீதிபதி அகர்வால் - தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்!

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் பா...வும் சங்பரிவார்களும்  அதன் கிளைகளும் செய்யும் இந்து மதப்பிரச்சாரம் சட்டவிரோதம் மட்டுமல்ல - அப்படிப் பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றா லும் அந்த வெற்றி செல்லாது என்பதே சட்டப்படியான நிலை. தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதம் பேசப்பட்டால் உடனே தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் கடமை யைச் செய்யுங்கள்... செய்யுங்கள்...!

Comments