இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்: வைகோ கண்டனம்

 சென்னை, மார்ச் 21- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

மார்ச் 22ஆம் தேதி, அய்.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை யின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன் மொழிந்துள்ளன.

இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும்.

இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

47 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கும் அய்.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின்மீது கொண்டுவரப்படும் போர்க் குற்றவாளிகள் குறித்து தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

ஆனால், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறிய தாக Ôஇந்துÕ ஆங்கில நாளேடு (19.03.2021) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா... அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்திய அரசு, அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தில் நாளை (22.3.2021) முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments