‘‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்'': - அண்ணா

பதவியேற்பதற்கு முன் தந்தை பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அண்ணா!

 நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வரலாற்றுரை

சென்னை, மார்ச் 10 ‘‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்'' என்று சொன்னவர் அறிஞர் அண்ணா. பதவியேற்பதற்குமுன் தந்தை பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல்கள் வெளியீட்டு விழா

5.3.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் இயக்க நூல்களை வெளியிட்டு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இன்றைக்கு விவசாயிகள் டில்லியில் நூறு நாள் களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 56 இஞ்சுக்கு அனுதாபமே இல்லை. அகலம், நீளத்தைப் பார்க்க வேண்டாம்; உள்ளத்தின் ஆழத்தைப் பார்க்கவேண்டும்.

குடிசெய்வார்க்கில்லை பருவம் என்பதற்கொப்ப முதலில் பனி, குளிர் போன்றவற்றை தாங்கினார்கள் விவசாயிகள்; பனி மலையில் நின்று போராடுகின்ற அந்தப் போராட்டக்காரன் யார்?

ஜெய் ஜவான் என்று நீங்கள் சொன்னீர்கள்; ஜெய் கிசான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு - உங்கள் மொழியில் சொல்கிறோம். என்னடா, திடீரென்று ஹிந்திக்கு மாறிவிட்டாரே? என்று நினைக்கவேண்டாம்.

அண்ணா அவர்கள் முதல் உரையில் சொல்லிய வற்றை தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நடைமுறைப்படுத்தினார்.

திராவிட ஆட்சியின் தொடர்ச்சியான கலைஞர் ஆட்சியில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலப் பட்டா கொடுத்தார்.

மணலி கந்தசாமி

மணலி கந்தசாமி சொல்கிறார், ‘‘கலைஞர் அவர்கள் சிறு துளி மையில் உத்தரவுப் போட்டார். நிலமற்ற விவசாயிகளுக்கெல்லாம் பட்டா கிடைத்தது'' என்றார்.

திராவிட இயக்கம் என்ன செய்தது என்பதற்கு இதுதான் ஆவணம்.

முப்பெரும் சாதனைகளுடைய தேவைகள் என்ன என்பதற்கு நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜீவானந்தம், பெரியாரைவிட்டுப் போனவர். கம்ப இராமாயணத்தில் சமதர்மத்தைத் தேடியவர். கருத்து முறைகளில், அணுகுமுறைகளில் வித்தியாம் உண்டு.

கொள்கை மாறுபாடுகளால் - வேறுபாடுகளால் போனால், திரும்பவும் வரவேண்டிய அவசியமில்லை

 அவர் செய்த தொண்டு - கொள்கை - ஏனென்றால், எப்பொழுதுமே ஓர் இயக்கத்தைவிட்டுப் போகிற வர்களில்கூட, கருத்து வேறுபாடுகளில் போனவர்களாக இருந்தால், மீண்டும் வந்து இணைவார்கள். ஆனால், கொள்கை மாறுபாடுகளால் அல்லது பச்சை சுயநலத் திற்காக - கொள்கை வேறுபாடுகளால் போனால், திரும்பவும் வரவேண்டிய அவசியமில்லை. வந்தாலும், அவர்களை இணைக்கவேண்டிய அவசியம் இல்லை.

பகுத்தறிவாளர் கழகத்தில் நமது வழக்குரைஞர் அருணாசலம் அவர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளார்.  மணவிழா நடைபெற்ற மணமகன் இன்றைக்கும் இருக்கிறார்.

பெரியார் மாளிகையில், அய்யா அவர்கள் ஓடி ஆடி பணி செய்கிறார். (1967).

அதை அண்ணா அவர்கள் சொல்கிறார்,

17 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய கூட்டத்தில், பெரியார்தான் என்னுடைய தலைவர் என்று முதலமைச்சரான ஆன பிறகு பேசுகிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியாரும் - அண்ணாவும் சந்தித்த படமும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறோம். இதற்குப் பிறகுதான் சுயமரியாதை மாநாட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நூல் வரலாற்று ஆவணம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால்,

பதவியேற்பதற்கு முன் தந்தை பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அண்ணா!

6.3.1967 இல்தான் அண்ணா அவர்கள் பதவியேற் கிறார். அதற்கு முன்பாக 2.3.1967 இல் காரை எடுக்கச் சொல்லி, அண்ணா கிளம்பினார். ராஜ்பவனுக்குத்தான் அண்ணா போகிறார், மந்திரி பட்டியலுடன் என்று ஓட்டுநரும் நினைத்தார். ராஜ்பவனையும் தாண்டி கார் செல்கிறது. காஞ்சிபுரம் தான் செல்கிறார் என்று நினைத்தால், அங்கேயும் செல்லவில்லை.

நேரே காரை செலுத்து என்று ஓட்டுநரிடம் சொல்கிறார் அண்ணா.

எங்கே போகிறார் அண்ணா ஒன்றும் புரியவில்லையே என்று ஓட்டுநர் நினைக்கிறார்.

200 மைல்கள் சென்ற அந்த கார், திருச்சி பெரியார் மாளிகையின்முன் வந்து நின்றது.

இங்கே அறிவுக்கரசு அதைப்பற்றியெல்லாம் மிகத் தெளிவாகச் சொன்னார்.

இதுவரையில் ஆரியம் திராவிடத்தை ஏமாற்றி வெற்றி கண்டது பழைய வரலாறு.

என்றைக்கும் என்னுடைய தலைவர் தந்தை பெரியார் என்றார் அண்ணா

ஆரியத்தையே பதம் பார்த்த வரலாறு - அண்ணாவின் சாமர்த்தியம்; குல்லுகப் பட்டர், குல்லுகப் பட்டர் என்று அவரே ஏமாந்தார் இவரிடம்.

என்றைக்கும் என்னுடைய தலைவர் தந்தை பெரியார் என்றார் அண்ணா. ராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கிடைத்தார்; அவரை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று சொன்னார்.

ஆரியத்தைப் பயன்படுத்துவது வேறு; ஆரியத் திற்குப் பயன்படுவது வேறு.

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

பக்குவம் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்; அந்தப் பாடம்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு நிலைத்திருக்க காரணமே!

நாம் பயன்படவில்லை; நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

பயன்படுகிறவர்கள் பயப்படவேண்டும்; பயன் படுத்துகிறவர்கள் பயப்படவேண்டிய அவசிய மில்லை.

பெரியார் பிறந்த நாள்விடுதலை ' மலருக்காக அண்ணாவிடம் கட்டுரை கேட்டோம்.

‘‘அந்த வசந்தம்'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்கிறார்.

கண்டதும் என்று சொல்வது சரி; ஆனால், அவர் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை இருக்கிறதே, அது மிகவும் முக்கியம்.

ஏனென்றால், இன்றைக்கு அரசியல் நடத்த வருகின்றவர்கள் - பெரியாருக்கு உரிய மரியா தையை அண்ணா அவர்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் - அனைவருக்கும் உரியார்!

பெரியாரை, ஊறுகாய் போன்று நினைக்க முடியாது; படத்தில் மட்டும் போட்டு விட்டுவிடலாம் என்று நினைக்க முடியாது.

பெரியார் - அனைவருக்கும் உரியார்; நரியாரைத் தவிர அனைவருக்கும் உரியார்.

அண்ணா அவர்கள் பேசுகிறார்:

‘‘தமிழ்போல் என்றும் இளமை குன்றாது வாழ வேண்டும்; எந்தக் குழந்தையும் தப்பிப் போகாமல் பாதுகாக்கவேண்டும் அவர் என்னுடைய தலைவர். நானும், அவரும் பிரிகிறபோதுகூட, நான் அவரையே தான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை. அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டதுபோல, இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகிறேன்'' என்றார்.

இதற்குப் பிறகுதான் பெரியார் பிறந்த நாள் விடுதலை மலருக்கு கட்டுரை கொடுக்கிறார்.

அதில்,

‘‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்'' என்று எழுதியிருந்தார்.

கண்டது தலைவர் என்பது புரிகிறது. ஆனால், கொண்டது என்கிற வார்த்தை சாதாரணமானதல்ல.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு,

‘‘கொண்டவன் சரியாக இருந்தால், கண்டவன் கையைப் பிடித்து இழுப்பானா?'' என்று!

கொண்டவன் சரியாக இருக்கவேண்டும்; இப் பொழுது பிரச்சினையே அதுதான்.

அரசியலிலும் அதுதான்; பொருளாதாரத்திலும் அதுதான்.

அண்ணா நாசூக்காக சொன்னார்,

நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்' என்றார்.

கொண்டதும் என்கிற வார்த்தைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் அர்த்தம் சொல்லலாம்.

அண்ணா அவர்கள் வேறொரு உரையில்,

பெரியாரும் - அண்ணாவும் பிரிந்திருந்தார்கள், பிரிந்திருந்தார்கள் என்று நாகரசம்பட்டியில் இராஜாராம் பேசும்பொழுது சொன்னார்,

என் உள்ளத்தில் பெரியார் இருப்பார்; பெரியாருடைய உள்ளத்தில் நான் இருப்பேன்!

‘‘என் உள்ளத்தில் பெரியார் இருப்பார்; பெரியாருடைய உள்ளத்தில் நான் இருப்பேன்; நாங்கள் எப்பொழுதும் பிரிந்தே போகவில்லையே'' என்றார்.

தந்தை பெரியாருக்கும் - அண்ணாவிற்கும் கொள்கை உறவு; லட்சியப் பிணைப்பு. அந்தப் பிணைப்புதான் இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமான சாதனையாகும்.

எனவே, இந்தப் புத்தகம் ஆய்வுக்குரிய புத்தகமாகும். முப்பெரும் சாதனைகள் என்று சொன்னார்கள் அல்லவா - அந்த முப்பெரும் சாதனைகளைப்பற்றிய விளக்கம் வேண்டுமானால் - அண்ணா அவர்கள் ஆற்றிய உரைகள் - இந்தக் கொள்கைக்கு எது அடித்தளம்?

அதுமட்டுமல்ல, ஆட்சி எதற்காக? இந்த லட்சி யங்களைச் செய்வதற்காகத்தான் ஆட்சி - வெறும் காட் சிக்காகவா - சுரண்டலுக்கா? கொள்ளையடிப்பதற்காகவா? வாய்ப்புகளைப் பெறுவதற்காகவா? ஊழல் செய்வ தற்காக? என்றால், அல்ல!

அண்ணாவினுடைய தத்துவம் என்னவென்றால், தந்தை பெரியாருடைய லட்சியங்களை செயல்படுத்த வேண்டும். தன்னை ஆளாக்கிய தலைவருக்கு, தன் னுடைய ஆட்சியை காணிக்கையாக்கி, தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்ட சூழலில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில் சந்திக்கின்றார் அண்ணா அவர்கள்.

நாகரசம்பட்டியில் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத் திறப்பு விழாவிற்கு அண்ணா அவர்களை அழைத்தேன்  விடுதலை' ஆசிரியர் என்ற முறையில்  அந்த விழாவிற்கு நான் தலைமை தாங்கினேன்.

முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் ‘‘பெரியார் இராமசாமி கல்விக்கூடத்தை'' திறக்கிறார். மறைந்த நண்பர் நாகரசம்பட்டி சம்பந்தம் மற்ற நண்பர்களுடைய ஏற்பாட்டில். அந்த விழாவில் அய்யா, அண்ணா, நான் எல்லோரும் உரையாற்றி முடித்தோம். அண்ணா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

பெரியாரால் போர்த்தப்பட்ட பொன்னாடைதான்

எனக்குப் போர்த்தப்பட்டது!

அய்யா அவர்கள் எழுந்து நின்று, முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கு பொன்னாடையைப் போர்த்துகிறார். அண்ணா அவர்கள் மிகவும் அதிர்ந்து, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று சொல்கிறார், ‘‘நண்பர்களே, இதுவரை நான் பதவிக்கு வந்து எனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடைகளின் எண்ணிக்கை 300-க்கும் மேற்பட்டவை. ஆனால், பெரியார் அவர்கள் போர்த்திய இந்தப் பொன்னாடைக்கும் - இதற்கு முன் பலர் போர்த்திய பொன்னாடைகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இதற்கு முன் போர்த்தப்பட்ட பொன்னாடை எனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை அல்ல; என் பதவிக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை.  இது ஒன்றுதான், என் ஆசானால்  எனக்குப் போர்த்தப் பட்டப் பொன்னாடை'' என்றார்!

அண்ணாவின் கோரிக்கையும் -

பெரியாரின் பதிலும்!

மேலும் அண்ணா அவர்கள்,

‘‘நான் என்னதான் செய்தாலும், ஓரளவுதான் செய்ய முடிகிறது; ஏனென்றால், முழு அதிகாரம் இல்லை. ஆகவேதான், இந்தப் பதவியை விட்டுவிட்டு, மறுபடியும் பிரச்சாரம் செய்ய உங்கள் பின் வரவா? அல்லது இந்தப் பணியையே செய்யவேண்டும் என்று நீங்கள் சொல் கிறீர்களா? நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ, அதை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

பெரியார் என்ன சொன்னார் என்றால்,

‘‘ஒரு நிமிடம்கூட முதலமைச்சர் பதவியை விட்டு வரக்கூடாது; அந்தப் பணியை செய்வது உங்கள் வேலை. இந்த வேலையை செய்வது எங்கள் பணி'' என்றார்.

ஆகவே, நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து ஒரு காலத்தில் வேலை செய்ததோ - அதேபோன்று திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து பணியாற்றுகிறது என்பதற்கு பெரிய வியாக்கியானம் - விளக்கம் இந்தப் புத்தகத்தில், அரசியல் ஆவணத்தில் இருக்கிறது.

எனவே, நண்பர்களே! இந்த ஆவணத்தை நீங்கள் ஆழ்ந்து படியுங்கள்; சிறப்பான முறையில் பரப்புங்கள்! இந்தக் கருத்துகள்தான் நமக்கு வலிமை தரக்கூடியவை. அந்த வலிமையை உருவாக்கவேண்டும்.

ஆட்சிகள் மாறும் - காட்சிகள் மாறும் என்பது முக்கியமல்ல - ஆனால், லட்சியங்கள் எப்பொழுதுமே அடிப்படையில் தெளிவாக இருக்கவேண்டும் என்று சொல்லி,

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மகளிருக்கு என்ன பாதுகாப்பு?

இறுதியாக ஒரு கருத்தைச் சொல்கிறேன்.

மார்ச் 8 ஆம் தேதி பன்னாட்டு மகளிர் உரிமை நாள்; இந்த நாளில் எல்லோரும் அறிக்கை விடுவது முக்கிய மல்ல.  உள்ளபடியே இன்றைக்கு நம் நாட்டு மகளிருக்கு இரண்டு சோதனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மகளிருக்கு என்ன பாதுகாப்பு?

ஒரு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஒரு பெண் அதிகாரிக்கே, மேலதிகாரியின் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். சாதாரண மனிதன் செய்தால், உடனே சட்டம்  அவர்மீது பாய்கிறது. ஆனால், காவல்துறை உயரதிகாரி என்றால், வாய்மூடி கிடக்கிறது. உடனே அந்த காவல்துறை உயரதி காரியை பதவியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல், கண்துடைப் புக்காக அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக் கிறார்கள்.

உயர்நீதிமன்றமே முன்வந்து அந்த வழக்கை கண்காணிக்கும் என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். அவர் பாராட்டத்தகுந்த நீதிபதியாவார்.

அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில், யார் அந்தப் பெண்ணை வன்புணர்ச்சி செய்தானோ, அவனையே திருமணம் செய்துகொள் என்று ஒரு நீதிபதி சொல்கிறார். அவர் என்ன நீதிபதியா? கட்டப் பஞ்சாயத்து செய்பவரா? இன்றைக்கு மக்கள் எல்லாம் கொதித்துப் போயிருக்கிறார்கள். அந்த நீதிபதி பதவி விலகவேண்டும் என்று மகளிர் எல்லாம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

திராவிடர் கழக மகளிரணி,

மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட இரண்டு பிரச்சினைகளையும் மய்யமாக வைத்து, திராவிடர் கழக மகளிரணி, மார்ச் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அந்தப் போராட்டத்தில் அனைத்து மகளிரும் பங்கேற்கவேண்டும்.

ஒரு காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் புகார் கொடுப்பதற்காக பெரம்பலூரிலிருந்து செங்கற்பட்டு வருகிறார்கள். அங்கே நூற்றுக்கும்  மேற்பட்ட அதிரடிப் படையினரை வைத்து அவரைத் தடுக்கிறார் ஒரு காவல்துறை உயரதிகாரி.

அதிரடிப் படை எதற்கு? குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு அதிரடிப் படையா? குற்றவாளிமீது புகார் கொடுக்காதே என்று சொல்வதற்கு அதிரடிப் படையா? இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் அல்லவா!

இதையெல்லாம் விளக்கி எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நம்முடைய தோழர்கள் நடத்துவார்கள். திராவிடர் கழக மகளிர் அந்தப் போராட்டத்தை நடத்துவார்கள். காவல்துறை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னால், அதையும் மீறி போராட்டம் நடத்தி கைதாவோமே!

ஏனென்றால், இந்த நாட்டில் நீதி கேட்டுப் போராட வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. 130 கோடி மக்கள் தொகையில், 65 கோடி எண்ணிக்கையாக உள்ள பெண்களின் கதி என்னாவது? தமிழ்நாட்டு பெண் களுடைய நிலை என்ன? பொள்ளாச்சி, பொள்ளாச்சி என்று சொன்னார்கள், பொள்ளாச்சி எல்லாம் வெறும் சிறிய கோடாக ஆகிவிட்டது.

தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. பெரியார் பூமி என்று சொல்லி பெருமைபடுகின்ற பூமியில், 113 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த ஒரு மண்ணில், இன்றைக்கு எப்படிப்பட்ட அவலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை யெல்லாம் அந்தப் போராட்டத்தின்மூலம் சுட்டிக்காட்ட வேண்டும்.

நீதிக்குப் போராடுவோம்நியாயத்திற்குப் போராடுவோம்!

எனவேதான், நாம் நீதிக்குப் போராடுவோம் - நியாயத்திற்குப் போராடுவோம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி, இந்த அருமையான நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து, இங்கே புத்தகங்களை வாங்கிய தோழர்களுக்கும், பரப்பிய தோழர்களுக்கும், பரப்புகின்ற பணியை ஏற்றுக் கொண்டிருக்கின்ற தோழர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரி வித்து விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

Comments