சாதனைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.

அம்பிகா  ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணம். எப்படி இது சாத்தியம்?  சிறு வயதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல்துறை காவலருக்கு அம்பிகாவை குழந்தைத் திருமணம் செய்து வைத்தனர் அவரின் பெற்றோர். திருமணம் நடந்தபோது வெளி உலகம் தெரியாத சிறு பெண்.

ஒரு நாள் குடியரசு தின காவல்துறை அணிவகுப்பைக் காண்பதற்கு தன் கணவருடன் சென்றார் அம்பிகா. அங்கு நடந்த பேரணியில் சிறப்பு விருந்தினருக்கு அடுத்தபடியாக ஆய்வாளர் ஜெனரல் (அய்.ஜி), துணை ஆய்வாளர் ஜெனரல் (டி.அய்.ஜி) ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய இரவு கணவரிடத்தில் யார் இவர்கள்? எதற்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்று கேட்டார்.

அய்பிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறையில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை என்று அம்பிகாவுக்கு விளக்கினார் கணவர். அதைக்கேட்ட நொடி முதல் தானும் ஒரு அய்பிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசை அம்பிகாவுக்குள் பிறந்தது.அவருக்கு நடந்தது பால்ய மணம் என்பதால் 10ஆம் வகுப் பைக் கூட அவர் அப்போது முடித்திருக்கவில்லை. தன் விருப்பத்தை கணவரிடத்தில் தெரிவித்து படிப்பை தொடர அனுமதி கேட்டார். அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அம்பிகாவுக்கு உறுதுணையாக இருந்தார்.

கணவர் ஒத்துழைப்போடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், தொடர்ந்து பட்டப் படிப் பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு தன் கனவு பணிக்காக, அய்பிஎஸ் தேர்வு பயிற்சியில் இணைய சென்னைக்கு பயணித்தார். அய்பிஎஸ் பொதுப்பணித் தேர்வை எழுதியவர் அடுத்தடுத்து இரண்டு முறையும் தோல்வியை தழுவினாலும், மனம் தளரவில்லை.

ஆனால் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த நிலையில், மனமுடைந்த அம்பிகாவுக்கு அவர் கணவர் ஆறுதல் கூறி பக்கபலமாய் இருந்து தேற்றினார். கடைசியாக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதாக தன் கணவரிடம் அனுமதி கோரியவர், இந்த முறையும் தோல்வி அடைந்தால் ஊருக்கு திரும்பி அங்கு ஆசிரியர் வேலை செய்து கணவருக்கு உறு துணையாக இருக்க முடிவெடுத்தார். நான்காவது முறை நம்பிக்கையுடன் தேர்வெழுதியதில் வெற்றி கிடைத்தது. அய்பிஎஸ் அதிகாரியாக தேர்வானார் அம்பிகா.

குழந்தைத் திருமணத்தின் சாட்சியாய் இருந்தவர், தன் நிலைக்கு யாரையும் குற்றம் சாட்டாமல், மனம் தளராமல், நம்பிக்கையோடு கடின உழைப்பால், விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டினார்  அம்பிகா அய்பிஎஸ்.

Comments