அய்நா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா - மியான்மா அகதிகள் கதி என்னாகும்?

 யங்கூன், மார்ச். 30- மியான்மா ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியாவில் குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது.

மியான்மா நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் அதை எதிர்த்து போராடுவோர் கண்மூடித்தனமாகச் சுட்டு வீழ்த்தப்படு கின்றனர்.   அச்சமடைந்த பலர் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகக் குடியேறி வருகின்றனர்.  தற்போது இந்தியாவுக்கு ஓடி வரும் மியான்மா அகதிகள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகிறது. 

மியான்மா நாட்டு எல்லைப்பகுதிகளில் இந்தியாவின் மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அமைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான கி.மீ. எல்லையை மியான்மாவுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது.  இதில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே போன்ற நகரங்களுக்கு விசா இல்லாமலே மியான்மா மக்கள் வந்து செல்ல முடியும். தற்போது மியான்மாவில் ராணுவ ஆட்சி அமலில் உள்ளதாலும் அங்கு போராட்டங்கள் கடுமையாக உள்ளதாலும், மத்திய அரசு எல்லை களை மூடி வைத்துள்ளது.   அத்துடன் மியான்மாவில் இருந்து இந்தியா வுக்கு அகதிகள் வருவதைத் தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆனால் மிசோரம் மாநில முதல்வர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனிதாபிமான அடிப் படையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மிசோரம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1000 மியான்மா அகதிகள் தஞ்சம் புகுந்ததாகச் சொல்லப்படுகிறது.  இதில் மியான்மா எல்லையை ஒட்டிய சம்பாய் மாவட்டத்தில் மட்டும் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.   இதைப் போல் மணிப்பூர் மாநிலமும் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வரு கிறது.    துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியவர்களும் காயம் அடைந்தோரும் மோரோ நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அய்.நா. சபையின் அகதிகள் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்து இடவில்லை.  எனவே மாநில அரசு மற்றும் மக்கள் மியான்மா அகதிகளுக்கு ஆதரவு அளித்தாலும் மத்திய அரசு அவர்களை மீண்டும் மியான்மாவுக்கு நாடு கடத்தும் அபாயம் உள்ளது.    மியான்மாவின் மற்றொரு அண்டை நாடான தாய்லாந்தும் அகதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் அங்குக் குடி புகுந்துள்ள மியான்மா அகதிகளுக்கும் இதே அச்சம் உள்ளது.

Comments