அதிரடி அன்பழகன், பெரியார் செல்வன் போன்றவர்களின் சிறப்பான பிரச்சாரத்தின்மூலம் நாடெலாம், ஊரெலாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒளிவீசுகின்றது!

..இளமதி- இரா.வீரமணி மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 4-  அதிரடி அன் பழகன்,  பெரியார் செல்வன்,  போன்றவர்களின் சிறப்பான பிரச்சாரத்தின் மூலம்  நாடெலாம், ஊரெலாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒளிவீசுகின்றது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

..இளமதி- இரா.வீரமணி

கடந்த 24.1.2021 அன்று காலை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர். திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நூலக இயக்குநர் நர்மதா ஆகியோரின் மகள் ..இளமதிக்கும், அத்தி வெட்டி தி.மு.. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரின் மகன் இரா.வீரமணிக்கும் நடைபெற்ற வாழ்க்கை இணையேற்பு  விழாவில் காணொலிமூலம்  வாழ்த்துரை வழங்கினார்  திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாடெலாம், ஊரெலாம் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஒளிவீசச் செய்கின்றார்கள்!

அவருடைய தயாரிப்புதான் அதிரடி அன்பழகன் அவர்கள். படிப்படியாக வளர்ந்து முன்னேறினார். அத்திவெட்டி என்றால், இன்றைக்கு மாவட்டத் தலைவர் வீரையன் அவர்கள் அத்திவெட்டியில்தான் இருக்கிறார். அத்திவெட்டியில்தான் நம்முடைய கழகப் பேச்சாளர் பெரியார்செல்வன் இருக்கிறார். அத்திவெட்டி என்றால், முரட்டு சுபாவம் உடையவர்கள் என்றெல்லாம் பெயர் இருக்கக்கூடியவர்கள், வெறும் ஆயுதம் ஏந்தக்கூடிய வர்கள் என்று பெயர் இருந்த ஓரிடத்தில், முழுக்க முழுக்க அறிவாயுதத்தை ஏந்தக் கூடியவர்கள், அதுவும் பகுத் தறிவு ஆயுதத்தை ஏந்தக் கூடிய பெருமை அந்தக் கிராமத்திற்கு, அந்தப் பகுதிக்குக் கிடைத்தது மட்டுமல்ல - அவர்கள் நாடெலாம், ஊரெலாம் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஒளிவீசச் செய்கின்றார்கள்.

அதிரடி அன்பழகன் ஆனாலும், பெரியார் செல்வன் ஆனாலும்,  மற்ற நண்பர்களானாலும் அந்த ஊரிலே அவ்வளவு சிறப்பான பணியை செய்யக்கூடிய அள விற்கு, திராவிடர் கழகத்தினுடைய வித்து அங்கே விழுந்ததின் காரணமாகத்தான் மிகப்பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டது.

இது ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்ட மாறுதல். அதுதான் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது; அதுதான் இன்றைக்கு உலகத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது.

நண்பர் அன்பழகன் -நர்மதா இணையர்

அதேபோல, இளமதி அவர்களுடைய பெற்றோர்; இவர்களைப் பொறுத்தவரையில் இன்னொரு சிறப்பு உண்டு.

என்ன அந்த சிறப்பு என்று சொன்னால், கொள்கைக் குடும்பத்தவர்கள். அதையும் தாண்டி, நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் அருட் கொடையினால், அன்னை மணியம்மையார் அவர் களுடைய அரும் திறத்தினாலும், அறக்கொடையி னாலும் உருவாக்கப்பட்டு இருக்கின்ற பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக நூலகத்தில் இயக்குநராக நம்முடைய நர்மதா அவர்கள் இருக்கிறார். அன்பழகன் அவர்களும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அதற்கு முன் அவர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அனுபவம் பெற்றவர்.

திராவிடர் இயக்கம்

தோன்றியிருக்காவிட்டால்...

அந்த வகையில், கல்விக் குடும்பத்தையும் சார்ந்த வர்கள் அவர்கள். எனவே, மூன்று வகைகளில் அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நம்முடையக் குடும்பம் - கொள்கைக்  குடும்பம் - கல்விக் குடும்பம். அதைவிட அவர் ஒரு சிறந்த பேச்சாளர். கிராமத்திலிருந்து வந்த இருவரும் படித்து பட்டதாரிகளாகி இருக்கிறார்கள் என்றால், ஒரு கணம் நீங்கள் எண்ணிப்பாருங்கள் நண்பர்களே,

திராவிடர் இயக்கம் தோன்றியிருக்காவிட்டால், நானோ, மணமேடையில் இருக்கக்கூடிய பட்டதாரி களான  நண்பர்களோ அல்லது வழக்குரைஞர்களோ, மருத்துவர்களோ படித்திருக்க முடியுமா?

ஓர் அமைதியான புரட்சி - அதற்காக ஒரு துளி ரத்தம்கூட சிந்தவில்லை. இந்த மணவிழாவிற்கு இவ் வளவு நண்பர்கள் வந்து பாராட்டுகிறார்கள். மணவிழா எவ்வளவு எளிமையாக நடைபெறுகிறது என்று வியக் கிறார்கள். காணொலிமூலமாக சென்னையிலிருந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றிக் கொண்டிருக்கின் றேன். உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அறிவியல் வாய்ப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? பகுத்தறிவுதான். இதைத்தான் இனிவரும் உலகம் என்பதில் தந்தை பெரியார் சொன்னார். அந்தப் பிரச்சாரத்தை, எளிய கிராமமான அத்திவெட்டியில் பிறந்தவர்கள், இன்றைக்கு உலகம் முழுவதும் அதனை செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர்களாக - பட்டதாரி களாக - பேராசிரியர்களாக - வழக்குரைஞர்களாக வந் திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இன்னும் தெளிவாக இங்கே சொல்லவேண்டுமானால் -மணமகன்  நண்பர் வீரமணி அவர்கள் பி..பிடி.அய்.எஸ். நெகோஷ் யு.கே. - மணமகள் இளமதி பொறியாளர்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' 

அதுதான் சமூகநீதி!

இந்தியாவிலேயே தலைசிறந்த ஒரு பெரிய தொழில் நிறுவனம் இருக்கிறது என்றால், அது லார்சன் அண்ட் டியூப்ரோ - அந்த நிறுவனத்தில் மணமகன் வீரமணி அவர்கள் துணை மேலாளராக இருக்கிறார் என்று சொல்லும்பொழுது, ஓர் எளிய கிராமத்தில் பிறந்தவர்கள், படித்து, எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது - தகுதிக்குக் குறைவில்லை எங்களுக்கு -திறமைக்குப் பஞ்சமில்லை எங்களுக்கு - நாங்கள் உழைத்திருக்கின்றோம் - அறிவினால், ஆற்றலினால் நாங்கள் உயர்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்கள். வாய்ப்புதான் நம் மக்களுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் தானே சமூகநீதி.

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் பொழுது நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இரண்டே வார்த்தையில் சொன்னார் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்றார். அதுதான் சமூகநீதி!

இன்றைக்கு நடைபெறுகின்ற போராட்டம் யார் யாருக்கிடையே நடைபெறுகிறது?

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது ஓர் அணி.

எங்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும்; உங் களுக்குக் கிடைக்கக் கூடாது; காரணம், நீங்கள் கீழ்ஜாதி.

 நாங்கள் மனுதர்மத்தை நம்புகிறோம்; நீங்கள் திருக்குறளை நம்புகிறீர்கள்.

நாங்கள் ஆரியத்தை மேன்மை என்ற அளவில் வைத்திருக்கிறோம்; நீங்கள் திராவிடத்தை தலையில் வைத்திருக்கிறீர்கள்.

இப்படி இரு வேறு பண்பாடுகள்; இந்தப் பண் பாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது அரசியலில் தேர்தலாக  வடிவெடுக்கிறது.

பொருளாதாரத்தில் ஆண்டான் - அடிமை - வர்க்கம் என்ற பெயரிலே வரும். சமூகத்திலே மேல்ஜாதிக்காரன் - கீழ்ஜாதிக்காரன் என்று வரும்.

தந்தை பெரியார் சொல்லாத கருத்தில்லை - தொடாத பொருள் இல்லை. ‘‘கிராமம் -நகரம் என்று ஏன் பேதம் இருக்கவேண்டும்?''  என்றார்.

நம்முடைய பல்கலைக் கழகத்தில்புரா' என்ற ஒரு திட்டம் உண்டு. அதனை அப்துல்கலாம் அவர்கள், ‘பெரியார் புரா' என்று பெயரிட்டார். 69 கிராமங்களை நாம் தத்தெடுத்திருக்கின்றோம்.

பெரியார் அவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பே, ‘‘கிராமம் -நகரம் என்ற பேதம் இருக்கக்கூடாது. என்னென்ன வசதிகள் நகரத்துக்காரர்களுக்கு இருக் கிறதோ,  அத்தனை வசதியும் கிராமத்துக்காரர்களுக்கும் இருக்கவேண்டும்'' என்றார்.

கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார் கல்வி வள்ளல் காமராசர். ஆச்சாரியார் மூடிய பள்ளிகளையெல்லாம்  திறந்து, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க, பெரியாருடைய போராட்டத்திற்கு இணங்க - திராவிட இயக்கத்தினுடைய அறப்போருக்கு செவிசாய்த்தார். குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால் இன்றைக்கு என்னாகியிருக்கும்?

நூறு சதவிகிதத்தைப் பறித்துக்கொண்டு,

ஏழரை சதவிகிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்!

இன்றைக்குநீட்' தேர்வைப் பார்க்கிறோமே - நூறு சதவிகிதத்தைப் பறித்துக்கொண்டு, பிச்சைப் போடு வதைப்போல, ஏழரை சதவிகிதத்தைக் கொடுத்திருக் கிறார்கள்; அதைக் கொடுப்பது பற்றி எங்களுக்குத் எதுவும் தெரியாது என்று மத்திய அரசு சொல்கிறது; அதைவிட கொடுமை அதுகுறித்த சட்டம் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று சொல்வது இருக்கிறதே, அது மிகப்பெரிய குற்றம்.

ஊரடங்கு அமலில் இருக்கும்பொழுது, நீ ஏன் மீறிப் போனாய் என்று காவல்துறை கேட்டால், எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. அதற்கு மன்னிப்பே கிடையாது. சட்டம் தெரிந்திருக்க வேண்டும் தனி நபருக்கே - ஆனால், ஒரு மத்திய அரசாங்கமே சொல்கிறது பொறுப்பற்று - எங்களுக்கு அப்படியொரு சட்டம்  இருப்பது தெரியாது என்று.

உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொன்ன பிறகும்கூட!

 ‘‘திராவிடம் வெல்லும்'' - வெல்லவேண்டும் என்று நாம் ஏன் சொல்கிறோம்?

எனவேதான், இந்தப் போராட்டம் என்பது - இது தேர்தல் நேரத்திலே வந்தால் - அதில்  யார் எதிரிகள்? யார் நண்பர்கள்? என்று பார்க்கவேண்டிய கட்டமாகும். அதனால்தான், ‘‘திராவிடம் வெல்லும்'' - வெல்ல வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

வெறும் அரசியல் பார்வையல்ல நமக்கு நண்பர்களே - சமூக அநீதிப் போக்கு அப்படியே நீடித்திருந்தால், அன்பழகன் பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க முடியுமா?

இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் - உத்தியோ கத்திற்கு வருவதற்கே பிஎச்.டி., வேண்டும் என்று சொல் லக்கூடிய அளவிற்கு நமக்குக் கதவை சாத்துகிறார்கள். இதனை எதிர்த்துப் பேசுவதற்கு, திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? அருமைப் பெற்றோர்களே, நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இதனைப் பரப்புகின்ற பணியை, நம்முடைய அன்பழகன் போன்றவர்கள், அத்திவெட்டியில் இருந்து கிளம்பிய பெரியார் செல்வன் போன்றவர்கள் மிக அருமையாக செய்கின்ற காரணத்தினால்தான், தமிழ்நாட்டிலே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்ச்சியின் காரணமாகத்தான்,  மக்கள் மத்தியில் ஒரு மனப்புரட்சி ஏற்படவேண்டும்.

ஆகவே, இந்தக் குடும்பம் நம்முடைய குடும்பம், கொள்கைக் குடும்பம் என்று சொல்லுவதற்கு என்ன ஆதாரம் என்பதற்காகத்தான் மேற்கண்டவற்றை சொன்னேனே தவிர, மற்றபடி மணவிழாவை அரசியல் களமாக்கவேண்டும் என்பதல்ல என்னுடைய நோக்கம்.

அதேபோல, "பெண்களை படிக்க வைக்கக்கூடாது - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்று கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு என்ன சூழல்?

ஆழ்வார் மண்ணாக இருந்தபொழுது

மக்கள் மண்ணாகத்தானே இருந்தார்கள்!

இது பெரியார் மண் என்று சொன்னால் - சிலர் புரியாமல், பயித்திக்காரர்கள் இது ஆழ்வார் மண் என்று சொல்லுகிறார்கள் - ஆழ்வார் மண்ணாக இருந்த பொழுது, பெண்கள் மண்ணாகத்தானே இருந்தார்கள். நம்முடைய மக்கள் மண்ணாகத்தானே இருந்தார்கள்.

பெரியார் மண்ணாக இது மாறிய பிறகுதானே, இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடங்கள்; எங்கு பார்த்தாலும் கல்லூரிகள்; எங்கு பார்த்தாலும் பல்கலைக் கழகங்கள். இல்லையானால், அன்பழகன் பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க முடியுமா? அதுபோலத்தான் நம்முடைய நர்மதா -அதுபோலத்தான் நம்முடைய மணமகள் இளமதி பி.., படித்திருக்கிறார். அது போலத்தான் நம்முடைய மணமகன் வீரமணி அவர்கள்.  இங்கிலாந்து நாட்டில் பயின்று தகுதிகளைப் பெறக்கூடிய அளவிற்கு நம்முடைய பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால்,  வாய்ப்புதானே காரணம். அறிவில் நமக்கொன்றும் பஞ்சமில்லையே!  அறிவைத் தடுப்போர் - மானம் கெடுப்போர் யார் என்று பார்க்க வேண்டாமா?

ஆகவே, நண்பர்களே! அந்தப் பணியை செய்யக் கூடிய அற்புதமான ஒரு தொண்டர்கள்தான் - பெரியார் பெருந்தொண்டர்கள் - அவர்களில் ஒரு அருமையான தொண்டர்தான், பிரச்சாரகர்தான் நம்முடைய அதிரடி அன்பழகன் அவர்கள்.

எனவே, அவருடைய இல்லத்து மணவிழா என்றால், அது நம்முடைய இல்லத்து மணவிழா -எங்கள் இல்லத்து மணவிழா - அதுபோலவே, மணமகனாக இருக்கக்கூடிய வீரமணி அவர்களுடைய பெற்றோர் ராமமூர்த்தி - ராணி ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வர்கள் என்று சொல்லும்பொழுது தேன் என இனிக்கிறது.

எனவே, இரண்டு நல்ல குடும்பங்கள் இணைந் திருக்கின்றன. இந்த வாய்ப்பு சாதாரணமானதல்ல. அந்த வகையில், மணமக்கள் மேலும் பல ஆற்றல்களைப் பெறுவார்கள். பெற்று, மேலும் உயர்ந்து, ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்ற அளவிற்கு இவர்கள் சிறப்பாக வாழவேண்டும் - வளரவேண்டும்.

என் சார்பில் மணவிழாவினை

நடத்தி வைக்க கழக துணைத் தலைவர் வந்திருக்கிறார்

இம்மணவிழாவிற்கு அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்கள். இந்த மணவிழாவில் நான் நேரில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லாவிட்டாலும், என் சார்பில் இம்மணவிழாவினை நடத்தி வைக்க கழக துணைத் தலைவர் அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்தக் கடமையை அவர் ஆற்றுவார்.

மணமக்களுக்கு நான் அறிவுரையை அதிகமாக எப்பொழுதுமே சொல்லுவதில்லை. வேண்டுகோளாகத் தான் வைப்பேன். அந்த வேண்டுகோளில் ஒரு சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

முதலாவது, வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும், எவ்வளவுதான் வளமிக்கவர்களாக ஆனாலும் சரி, அளவறிந்து வாழுங்கள்.

பாசத்தோடு வாழுங்கள் - அதுதான் மிக முக்கிய மானது.

பெற்றோருடைய தியாகம் உங்களை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. இனிமேல் நீங்களாக உயர்வீர்கள். அந்தப் பெற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல - அன்பை, பாசத்தை, மரியாதையை, நட்பை  - அதை என்றைக்கும் மறக்காதீர்கள்!

அதைத் சரியாக செய்வதில் நம்முடைய பிள்ளைகள் இருப்பார்கள். என்றாலும்கூட, இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற இளைஞர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகத்தான், மணவிழாக்களில் இதனை நான் இடையறாது சொல்லிக் கொண்டு வருகிறேன்.

அடுத்தபடியாக, அன்பு மணமக்களே,

ஒரு மனதாயினர் தோழி -

திருமண மக்கள் நன்கு வாழி

என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறப்பான வகையில் ஒருமனதாயினர் என்றளவில்  இருக்கக்கூடிய நீங்கள் இருவரும் ஒன்றுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்கின்ற நேரத்தில், ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு கடமையாற்றக்கூடிய அளவிற்கு - ஒருவர் தவறுக்கு, இன்னொருவர் பரிகாரம் தேடக்கூடிய அளவிற்கு, முந்திக்கொண்டு இருக்கக்கூடிய அளவிற்கு உங்களுடைய வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையாக இருக்கட்டும்.

எளிமை நிறைந்த வாழ்க்கையாக இருக்கட்டும்

சிக்கனம் என்றைக்கும், எக்கணமும் தேவை - அது மிக முக்கியமானது.

உங்கள் வாழ்க்கையின் வெற்றி-

இந்தக் கொள்கையின் வெற்றி!

அந்த வகையில், சிறப்பான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்; உங்கள் வாழ்க்கையின் வெற்றி, உங்கள் குடும்பத்தின் வெற்றி மட்டுமல்ல - இந்தக் கொள்கையின் வெற்றி! அதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அந்த வகையில், அன்பழகன் - நர்மதா ஆகி யோருடைய குடும்ப வெற்றி - அவர்களுக்கு அடுத்து வரக்கூடிய பிள்ளைகள், அவர்களைவிட கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்கள்; அவர் களைவிட அறிவுச் செல்வத்தில் அவர்கள் மிஞ்சியிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் பெருமை -  இயக்கத்திற்கும் பெருமை - நமக்கும் பெருமை.

அந்த வகையில், அறிவார்ந்த மணமக்களே, மணமக்களின் பெற்றோர்களே - நான் நேரில் பங்கேற்காமைக்கு என்னை மன்னிக்கவேண்டும். நேரில் உங்கள் எல்லோரையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு விரைவில் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்.

ஓரளவிற்கு நிலைமைகள் சீரடைந்தால் நிச்சய மாக அடுத்தத் திங்களே வெளியே வரக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். அப்பொழுது மணமக்களை - மணமக்களின் பெற்றோரை நான் நேரில் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்புக் கிட்டும்.

உலகம் முழுவதும்

பெரியார் கொள்கை தேவை!

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை நெறி என்பது  - இன்றைக்கு உலகளாவிய நெறியாக இருக்கிறது. உலகம் முழுவதும் பெரியார் கொள்கை தேவை என்ற அளவிற்கு இருக்கிறது.

எதிர்கால நூற்றாண்டுகள் பெரியாருக்கு உரியன - வேறு யாருக்கும் உரியனல்ல.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் - பெண்கள் படிப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன் - அதிகம் சொல்லவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளின் 13 நீதிபதிகளாக பெண்கள் இருக்கிறார்கள்; இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று தலைமை நீதிபதி அவர்கள் ஓய்வு பெற்று செல்லும்பொழுது சொல்லி, வியப்படைந்தார்.

இது எப்படி சாத்தியம்?

சரசுவதி பூஜை கொண்டாடியதினாலா? இல்லை நண்பர்களே!

சரசுவதி பாட்டிகளுக்கு எழுதத் தெரியாது; சரசுவதி பேத்திகள்தான் நீதிபதிகளாக வருகிறார்கள்.

காரணம், பெரியார்! பெரியார்!!

திராவிடம்! திராவிட இயக்க ஆட்சி!

சமூகநீதி!!

இவற்றைப் பாதுகாக்கவேண்டியது மணமக்களாகிய உங்களுடைய கடமையும்கூட!

எதிலும் எச்சரிக்கையாக இருந்து,

சரியான முடிவை எடுங்கள்!

எனவேதான், எச்சரிக்கையாக இருங்கள்!

தேர்தலாக இருந்தாலும் ஏமாந்துவிடக் கூடாது - வாழ்க்கையாக இருந்தாலும் நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது. எதிலும் எச்சரிக்கையாக இருந்து, சரியான முடிவை எடுங்கள்!

சரியான முடிவை எடுக்கத் தவறுவோமேயானால், அதற்குக் கடும் விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி,

திராவிடம் வெல்லும்

மணமக்கள் வெல்வார்கள்

மணமக்கள் வாழ்க!

பெரியார் வாழ்க!!

என்று சொல்லி என்னுடைய வாழ்த்துரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments