ஆசிரியருக்குக் கடிதம் - அசைக்க முடியாத தலைவர்

அய்யா, வணக்கம்.

சேலம் மாவட்டம் (மேட்டூர் கழக மாவட்டம்) தீவட்டிப்பட்டியில் (17.3.2021) தந்தை பெரியாரின் சிலையை துணி போட்டு மூடி இருந்ததை காவல்துறை அலுவலகம் சென்று முறையிட்டு - பின்னர் துணியை அகற்றி சிலையை சுத்தம் செய்து மாலை வாங்கி வரவும், தேநீர் அருந்தவும் அருகில் உள்ள கடைக்குச் சென்று  தேநீர் அருந்தினோம். அந்தக் கடை உரிமையாளரான பெண்மணி நாங்கள் மூவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்ததை பார்த்து அவர் ஏதோ கேட்க எண்ணியதை உணர்ந்து  நான் - "நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிற பெரியார் கட்சியை சார்ந்தவர்கள்.  பெரியார் அவர்கள் பெண்களுக்கு மரியாதை, வாய்ப்பு, சொத்துரிமை, மேலும் குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கே கல்வி கற்க வாய்ப்பு தருவதில் முன்னுரிமை தரவேண்டும் என்று சொன்னவர்" என்று சொன்னவுடன், "அப்படின்னா உங்கள் கட்சி மக்கள் கட்சி" என்று சொல்லுங்கள்" என்று கூறி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அடுத்து பூக்கடையில் மாலை வாங்க  சென்றோம். ரூ.250க்கு ரோஜா மாலையும், ரூ.150க்கு சாமந்தி மாலையும் விலை பேசி முடிவில் சாமந்தி மாலை வாங்கினோம்.பின் அந்தக் கடைப் பெண்மணி 'மாலை எதற்கு' என்று கேட்டார். அதற்கு "அய்யா சிலைக்கு" என்றவுடன், அந்தப் பெண்மணி "ரூ.150 விலைக்கே ரோஜா மாலையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பின் அதற்கு நன்றி சொல்லி "இல்லையம்மா, வெயில் காலமாக இருப்பதால் ரோஜா மாலை சிறிது நேரத்தில் உதிர்ந்து விடும். ஆதலால் தான் சாமந்தி மாலை வாங்கினோம்"  என்று சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்று அய்யா சிலைக்கு மாலை அணிவித்துத் திரும்பினோம்.

இந்த இரு நிகழ்வுகளும் தந்தை பெரியாரின் தத்துவங்களையும், அதை நிலை நிறுத்தி, வழி நடத்தும் திராவிடர் கழகத்தையும் எந்த அதிகார சக்திகளும்  ஆட்டவோ, அசைக்கவோ, அதன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ முடியாது என்பதையே பறைசாற்றுகின்றன.

(சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சி.சுப்பிர மணியன், மேட்டூர் மாவட்டத் தலைவர் .கிருட்டிணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் .ஜெயபால் ஆகியோர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்).

வாழ்க பெரியார்!

திராவிடம் வெல்லும்!!

- பெ.சவுந்திரராசன்

பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்.

 

Comments