பாராட்டத்தக்க செயல் - காணொலிமூலம் கோரிக்கை விடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி

லக்னோ, மார்ச். 18  உத்தரப்பிரதேசத்தில் படிக்க ஆசைப்பட்ட சிறுமியை  திருமணம் செய்துவைக்க முயன்ற தந்தையின் மீது காணொலிமூலம் பேசி காவல்துறை உதவி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஒரு சிறுமி. உத்திரப் பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டிலேயே கல்வி கற்றுவரும் அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து அவர் தான் மேற்படிப்பு படிக்கவேண்டும், இப்போது திருமணம் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார், ஆனால் அவரை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் அடித்து துன்புறுத்தியும் வந்தார். இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார்களும் வந்து சிறுமியை மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.  இதனை அடுத்து சிறுமி ஆன்லைனில் படிக்க வைத்திருந்த அலைபேசியில் ஒரு காணொலியை பதிவு செய்தார். அதில் தான் படிக்க விரும்புவதாகவும், தன்னை தனது தந்தை மற்றும் மாப்பிள்ளை அவரது பெற்றோர்கள் மிரட்டுகிறார்கள் என்று காட்சிப் பதிவை தனது நண்பி ஒருவருக்கு அனுப்பினார். இதனை அடுத்து அவர் காவல்துறைக்கு அந்த விடியோவை அனுப்பி யுள்ளார்.    காவல்துறை இந்த காணொலி  தொடர்பாக விசாரணை நடத்தியது, பின்னர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தையைக் கைதுசெய்தது, மேலும் மாப்பிள்ளை வீட்டார் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாஜக அதிகார அத்துமீறலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை,மார்ச்18- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் பாஜக - அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும், பெற வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்கியுள்ளது. ஆளும் கட்சியினர் இந்த நிலையில் தொழில் நிறுவனங்களை மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கவும், எதிர்க்கட்சியினரை மிரட்டி பணிய வைக்கவும், தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரை பயன்படுத்தி வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் கவின் நாகராஜ் மற்றும் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகரன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் மற்றொரு கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு முன்னணி சிமெண்ட் நிறுவனத்திலும் இதனைத் தொடர்ந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பழனி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. நியாயமான தேர்தல் நடைமுறைக்கு எதிரான பாஜகவின் அதிகார அத்துமீறல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடைமுறை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

Comments