நடப்பது கார்ப்பரேட் ஆட்சியே!

மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கி வருகிறதுஅவ்வகையில் கடந்த ஆண்டு அகமதாபாத், மங்களூரு, லக்னோ, கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம் மூலம் அளிக்கப்பட்டன.    தற்போது இரண்டாம் கட்ட ஏலம் நடைபெற உள்ளது.

திருச்சி, புவனேஸ்வர், அமிர்தசரஸ், ராய்ப்பூர், இந்தூர் மற்றும்  வாரணாசி ஆகிய ஆறு விமான  நிலையங்கள் இந்தப் பட்டியலில் ஏற்கெனவே உள்ளன.   இந்த ஏலத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்த ஆறு விமான நிலையங்களுடன் குறைந்த வருமானம் ஈட்டும் 7 விமான நிலையங்களையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையத்தையும் இணைத்து ஏலம் விடப்பட உள்ளது.  அதாவது திருச்சி விமான நிலையத்தை ஏலத்தில் எடுக்கும் அதே நிறுவனம் சேலம் விமான நிலையத்தையும் நிர்வகிக்க வேண்டும்.   இது போல் மற்ற விமான நிலையங்களையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி புவனேஸ்வர் விமான நிலையத்துடன் ஜர்சுகுடா விமான நிலையத்தையும், குஷினகர் மற்றும் கயா விமான நிலையங்களை வாரணாசியுடனும், காங்க்ரா விமான நிலையம் அமிர்தசரசுடனும், ஜல்கான் விமான நிலையம் ராய்ப்பூருடனும், ஜபல்பூர் விமான நிலையம் இந்தூருடனும் வளர்ச்சிப் பணிகளுக்காக என்று இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, “இந்த விமான நிலையங்கள் மொத்த முனையப் பகுதி, வருவாயின் வளர்ச்சி விகிதம், ஆக்கிரமிப்பு வீதம், மொத்த இயக்கச் செலவுகள், பயணிகளின் இயக்கச் செலவுகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் செயல்படும். அரசு, தனியார் பங்களிப்பு முறையில் விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி விமானப் போக்குவரத்து இயக்கம், பயணிகளின் எண்ணிக்கை, கையாளப்படும் சரக்கு அளவுகள், எதிர்கால மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்,  பொருளாதார வளர்ச்சி, விமான நிலையம் அமைந்துள்ள நகரின் மக்கள் தொகை, மாநில உள்நாட்டு உற்பத்தி போன்ற அடிப்படை அம்சங்களும் அடங்கும்எனத் தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையங்களை அதானி நிறுவனம் பல்வேறு பெயர்களில் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பா... ஆட்சியா - அதானி, அம்பானி ஆட்சியா? என்று பொது மக்கள் பரவலாக கேள்வி கேட்கும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது, அதே விமானத்தில் அதானியை அழைத்துச் சென்று, அந்த நாட்டில் அதானி தொழில் தொடங்கிட ஆஸ்திரேலிய அரசிடம் பரிந்துரை செய்ததின் மூலம் ஒரு பிரதமர் ஒரு முகவராக மாறிய நிலையை நாடு கண்டது. அது மட்டுமல்ல - அந்தத் தொழிற்சாலையைத் தொடங்கிட - கடன் வழங்கிட வங்கி அதிகாரியையும் உடன் அழைத்துச் சென்ற அத்துமீறலையும் நினைத்துப் பார்த்தால், நாட்டில் நடப்பது நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியல்ல; அதானி, அம்பானி ஆட்சியே - கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள சோசலிசம் என்ற சொல்லையே கருப்பு சாயத்தால் மறைத்து விட்டார்களே - இவர்கள் ஆட்சி தொடரலாமா?

Comments