கரோனா: விழிப்புணர்வூட்டவேண்டிய பிரதமர் மக்களை திரட்டி பிரச்சாரம் செய்வதா?

சிவசேனா கேள்வி

மும்பை, மார்ச். 12- சிவசேனா கட்சி தனதுசாம்னா' நாளிதழில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது,

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டப்படுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாகன அணிவகுப்பு மூலம் மக்களை திரட்டுகிறார். கரோனா காலத்தில் இதுபோன்ற சுதந்திரம் பொதுமக்களுக்கு கிடையாது. கூட்டத்தை திரட்டும் அரசியலில் இருந்து பொதுமக்கள் தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. அந்த மாநிலத்தில் பா.ஜனதா தலைவர்கள் சர்வசாதாரணமாக சென்று வரவும், பிரதமரின் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் இவ்வாறு சுகாதாரத்துறை கூற வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிகளவில் மக்களை திரட்டுவதன் மூலம் கரோனா கிருமி நசுங்கிச் சாகிறதா? கொடூர மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் அரசியல் விளையாட்டு நடத்தப்படுகிறது.

மும்பையில் புறநகர் மின்சார ரயில் காரணமாகவும், டில்லியில் மெட்ரோ ரயில் காரணமாகவும் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. மகாராட்டிராவில் தொற்று பரவல் எண்ணிக்கையை அரசு மூடி மறைக் காமல் பகிரங்கமாக வெளியிடுகிறது. சில இடங்களில் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

26ஆம் தேதி முழு அடைப்புக்கு

விவசாய அமைப்புகள் அழைப்பு

புதுடில்லி, மார்ச். 12- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள் டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகளுடன், மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் வருகிற நாட்களில் விவசாயிகள் பல்வேறு புதிய போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இதில் முக்கியமாக தங்கள் போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்வதையொட்டி வருகிற 26ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதைப்போல பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரயில்வே தனியார் மயம் போன்றவற்றை கண்டித்து வருகிற 15ஆம் தேதி வர்த்தக சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 28ஆம் தேதி விவசாய சட்டங்களின் நகல் எரிப்பை மேற்கொள்ளவும் விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Comments