இயக்க வரலாற்றில் பல தடங்களைப் பதித்த மிக முக்கியமான பாசறை குடந்தை!

.தி.மு.. - பா... கூட்டணிஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடக்கம்!

கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

கும்பகோணம், மார்ச் 20   இயக்க வரலாற்றில் பல தடங்களைப் பதித்த மிக முக்கியமான பாசறை குடந்தை, .தி.மு.. - பா... கூட்டணி - ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்!

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

குடந்தை மாநகரில் இன்றைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுக்கக் கூடிய அளவிற்கு திராவிடர் கழகத்தினுடைய பொதுக் குழு சிறப்பாக நடைபெற்று, அந்தப் பொதுக்குழு முதல் முறையாக குடந்தையில் நடைபெற்றாலும், குடந்தை என்பது இருக்கிறதே, அது பல நேரங்களில் கொள்கைப் போராட்ட பாசறைகளாக விளங்கிய வரலாறு படைத்த குடந்தை என்பதுதான்  மிக முக்கியமானது.

அந்தக் குடந்தையில் இப்படி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்ற திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு நிம்மதி அவர்களே,

வரவேற்புரையாற்றிய குடந்தை கழக மாவட்டச் செயலாளர் அருமை நண்பர் மானமிகு துரைராஜ் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறவனத்தின் துணைத் தலை வருமான அன்பிற்குரிய அய்யா மானமிகு இராசகிரி கோ. தங்கராசு அவர்களே,

திராவிடர் கழகத்தின் காப்பாளர் மானமிகு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஜெயராமன் அவர்களே, தஞ்சை மண்டலத் தலைவர் மானமிகு அய்யனார் அவர்களே, மண்டல செயலாளர் மான மிகு குருசாமி அவர்களே, தஞ்சை மாவட்டத் தலைவர் மானமிகு வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே,தஞ்சை மாவட்டச் செயலாளர் மானமிகு அருணகிரி அவர்களே,

குடந்தை பெருநகரத் தலைவர் மானமிகு கவுதமன் அவர்களே, குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆடிட்டர் சண்முகம் அவர்களே, பொதுக் குழு உறுப்பினர் மானமிகு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இளங்கோவன் அவர்களே, அவருடைய வாழ்விணையர் அவர்களே,பொதுக்குழு உறுப்பினர் அருமை நண்பர் தோழர் விஜயகுமார் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் அவர்களே, குடந்தை கழக மாவட்ட அமைப்பாளர் அழகு வேல் அவர்களே,

பட்டுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளர் வை.சிதம்பரம் அவர்களே,இந்நிகழ்வில் எனக்கு முன்பு  சிறப்பாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் அவர்களே,கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் அவர்களே,கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களே, கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்களே,

கலை நிகழ்ச்சி நடத்திய ராணி குருசாமி அவர்களுடைய அறிவு குழுவினர்களே , குடந்தை கருங்குயில் கணேஷ் அவர்களே, நன்றியுரை கூற விருக்கக்கூடிய குடந்தை பெருநகர செயலாளர் ரமேஷ் அவர்களே, சிறப்பாக குழுமியிருக்கின்ற, பல்வேறு பகுதிகளிலிருந்து, மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்துள்ள  அருமைப் பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடந்தை மாநகரத்தில் திராவிட மாணவர் கழகப் போராட்டம்!

இந்தக் குடந்தை மாநகரத்தில் திராவிட மாணவர் கழகப் போராட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக குடந்தை அரசினர் கல்லூரியில் இரண்டு பானைகள் இருந்ததை வைத்து நடைபெற்றது. ஒரு பானையில் உள்ள தண்ணீரை பார்ப்பனர் மட்டும் குடிக்கலாம்; இன்னொரு பானையில் உள்ள தண் ணீரை பார்ப்பனரல்லாதார், மற்றவர்கள், சூத்திரர்கள், பஞ்சமர்கள் எல்லாம் குடிக்கவேண்டும். இதை வெளிப்படையாகச் சொல்லாமல், தனியாகப் பிரித்து வைத்தார்கள்.

அந்தப் பானையை உடைத்து போராட்டம் நடத்தி, திராவிட மாணவர் கழகம் பிறந்தது. அதன்மூலமாக சமூகநீதி, ஜாதி ஒழிப்பு என்பதிலிருந்துதான் இந்தக் குடந்தை வரலாறு படைத்தது.

அதேபோல, இன்றைக்கு முக்கிய தீர்மானம் நிறைவேற்றியதற்கு குடந்தைக்கு ஒரு அடித்தளம் உண்டு.

144 தடை உத்தரவு போட்டு - பேச்சுரிமையை, எழுத்துரிமையை பழைய அரசு பறித்த நேரத்தில்,  குடந்தையில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந் தது. தந்தை பெரியார் அவர்கள் குடந்தையைத்தான் மிக முக்கியமாக மய்யப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் தொடர் போராட்டமாக நடந்தது

பல தாய்மார்கள் அந்தச் சட்டத்தை மீறுவது - உடனே அவர்கள்மீது தடியடிப் பிரயோகம் உள்பட நடத்துவது. பிறகு அவர்களைக் கைது செய்துகொண்டு போய் விடுவது - இப்படியெல்லாம் நடந்தது 1946-1947 ஆம் ஆண்டு காலகட்டத்தில்.

இயக்கம் ஒன்றாக - திராவிட முன்னேற்றக் கழகம் பிரியாததற்கு முன்பு இருந்த காலகட்டத்தில் இங்கே போராட்டம் மிக முக்கிய அளவிற்கு நடந்தது. அந்தப் போராட்டம் ஒவ்வொரு நாளும் தொடர் போராட்ட மாக நடந்தது.

பேச்சுரிமைக்காக, எழுத்துரிமைக்காக, கருத் துரிமைக்காக மிகப்பெரிய அளவிற்குப் போராட்டம் நடந்த நேரத்தில், அன்றைய அரசு, இந்தப் போராட்டத்தை நசுக்கவேண்டும் என்று முயற்சி எடுத்து, கைது செய்தார்கள்.

இயக்க வரலாற்றில் பல தடங்களைப் பதித்த மிக முக்கியமான பாசறை குடந்தை!

கருவுற்ற தாய்மார்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் - இந்த நகரத்தை ஏன் நாங்கள் பொதுக்குழு நடத்துவதற்குத் தேர்ந்தெடுத்தோம் என்பது இருக்கிறதே -  அது இயக்க வரலாற்றில் பல தடங்களைப் பதித்த மிக முக்கியமான பாசறை குடந்தையாகும்.

ஒரு நாள் அன்னை மணியம்மையார் அவர் கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், அய்யா அவர்களுடைய  அனுமதியோடு.

அம்மா அவர்களைக் கைது செய்து, பாபநாசம் சப்-ஜெயிலில் வைத்திருந்தார்கள். பிறகு அவர்கள் விடுதலையானார்கள்.

அன்றைய காவல்துறை அதிகாரியாக ஆதித்தன் என்பவர் ஒருவர் இருந்தார். கருப்பாக, குண்டாக இருப்பார். நம்முடைய ஆதித்தனார் அவர்களுடைய சொந்தக்காரர். அவர்தான் எஸ்.பி.யாக இருந்தார்.

அவர், இதுபோன்ற தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, அதுவும் பெண்கள் போராட்டம் நடத்துகிறார்களே என்று கொஞ்சம் ஆவேசம் காட்டினார். நாங்கள் அந்தப் போராட்டத்தை நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் பேசிய நேரத்தில்,

திராவிட நாட்டில் ‘‘ஆதித்தன் கனவு''

அண்ணா ஒரு கட்டுரை எழுதினார்திராவிட நாட்டில்' - அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘‘ஆதித்தன் கனவு'' என்பதாகும்.

ஆதித்தன் கனவு என்ற தலைப்பில் மாடர்ன் தியேட்டரில் ஒரு சினிமா வந்தது. அந்தத் திரைப்படம் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டம்.  ஆதித்தன் கனவு என்ற தலைப்பிட்டு அண்ணா அவர்கள் எழுதினார்.

சினிமாவைப்பற்றி அண்ணா அவர்கள் எழுதியி ருக்கிறார் போலிருக்கிறதே என்று நினைத்தார்கள்.

ஆட்சியாளர்களுக்குச் சொல்வதற்காக - காவல்துறை அதிகாரியான ஆதித்தன்மூலம் சொன் னார். ஆதித்தன்களே கனவு காணாதீர்கள், இந்த இயக்கத்தை, இந்தப் பேச்சுரிமையை உங்களால் மட்டுமல்ல, யாராலும் அசைத்துவிட முடியாது - அடக்கிவிட முடியாது என்று எழுதினார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் செயலாளர், பெரியாரின் உதவியாளர், ‘விடுதலை'யின் ஆசிரியர்.

அவர் அய்யாவிடம் அனுமதி வாங்கிக்கொண்டு போனார்கள். இராசகிரி தங்கராசு அய்யா அதற்குச் சாட்சி. ஏனென்றால், வயது முதிர்ந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்களுக்குத் தெரியும்.

எனவே, இந்தக் குடந்தை என்பது இருக்கிறதே, அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இயக்கம் பிரிந்த நேரத்தில்கூட, திராவிடர் கழகத்தினுடைய பிடிமானம் - அவ்வியக்கத்தைப் பின்பற்றி வரக்கூடிய இளைஞர்கள் ஏராளமாக இங்கே உண்டு.

ஆகவே, இந்தக் குடந்தையில், இன்றைக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கல்வி உரிமை, பதவி உரிமை, பெண்ணுரிமை எல்லா உரிமை களையும் பங்கு போட்டுக் கொண்டு பிரிக்கின்ற, பறிக்கின்ற, ஒடுக்குகின்ற ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கின்றன.

.தி.மு.. - பா... கூட்டணி ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடக்கம்!

அதிலே ஓர் ஆட்சி முடிவுக்கு வரவேண்டிய நாள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதி. இன்னும் நாட்கள் எண்ணப்படுகின்றன.

விண்வெளிப் பயணத்திற்குத் தயாரானால், கவுண்ட் டவுன் என்று சொல்வார்கள். எண் ணிக்கை குறைந்துகொண்டே வரும். அது போன்று, .தி.மு.. - பா... கூட்டணி ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடக்கம்.

அதை அறிவிக்கின்றதுதான் திராவிடர் கழகத்தினுடைய குடந்தை பொதுக்குழு என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

எங்களுக்கு என்ன அவ்வளவு ஆத்திரம்? என்னய்யா, திராவிடர் கழகம்தான் தேர்தலில் நிற்காத இயக்கமாயிற்றே? என்று சிலர் கேட்கலாம்.

நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள்தான்; ஆனால், மக்களைப்பற்றி கவலைப்படாதவர்களா? மக்களு டைய வாழ்வுரிமையைப்பற்றி கவலைப்படாத வர்களா?

எதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பயன்படுத்துகின்ற நேரத்தில், பல பிரச்சாரக் களங்களில், எப்படி அன்றைக்குப் போராட்டக் களம் இந்தக் குடந்தையில் கிடைத்ததோ, அதேபோல, இப்போது நடக்கப் போகின்ற தேர்தலும், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில்,

மனிதத்தன்மைக்காகப் போராடுகின்ற இயக்கம்தான் - தேர்தலையும்

ஒரு களமாகக் கருதுகிறது

திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கக் கூடிய ஒரு பணியை செய்துகொண்டிருக்கின்ற  ஒரு தலைவர் - அந்தத் தலைவருடைய கட்டளையை ஏற்று, அந்த அறிவு ஆசான்  வழிப்படுத்திய, வயப் படுத்திய அந்தக் கொள்கைகளை நாட்டினில் நிலை நாட்டக் கூடிய மனிதத்தன்மைக்காகப் போராடுகின்ற இயக்கம்தான் - தேர்தலையும் ஒரு களமாகக் கருது கிறது.

அந்தக் களத்தைப்பற்றி பொதுக்குழுவில் தெளிவாக எடுத்துச் சொன்னோம். அந்தக் களம் எங்களுக்கு மிக முக்கியம்.

எதற்காக? எங்களுக்காக அல்ல. எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல. உங்கள் பிள்ளைகளுக்காக. அருமை வாக்காளப் பெருமக்களே, அனைத்துக் கட்சியைச் சார்ந்த பெருமக்களே, தேர்தலில் நிற்காத நாங்கள், எங்களுக்கென்று எந்தப் பதவியும் வேண்டாம் - சிவலோகப் பதவி உள்பட - வைகுண்ட பதவி உள்பட -  இப்படி ஒரு பதவி கிடையாது - எல்லாப் பதவியையும் நீங்களே வைத்துக் கொள் ளுங்கள். ஒரு உதவி வேண்டும்; அந்த உதவி என்ன வென்றால், ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குள் சென்று,  எங்கே உதயசூரியன் அதனுடைய கூட்டணி கட்சிகளுடைய சின்னம் இருக்கிறது என்று பார்த்து பொத்தானை நீங்கள் அழுத்தவேண்டும். அப்படி அழுத்தும்பொழுது வெளிச்சம் தெரியும் - அந்த வெளிச்சம் அங்கே தெரிகின்ற வெளிச்சமல்ல; இருண்டு போயிருக்கின்ற தமிழ்நாட்டிற்கு என்றும் மிளிரக்கூடிய வெளிச்சம்! வெளிச்சம்!! வெளிச்சம்!!!

திராவிடம் வெல்லும்! அப்பொழுது வெளிச்சம் தெரியும்.

எதற்காக? எங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்? எங்களுக்கும், மோடிக்கும் ஏதாவது தகராறா? அவர் தான் இப்பொழுது அவ்வையார் பாட்டு பாடுகிறாரே?

அவ்வையாருக்கே தெரியாத பாட்டையெல்லாம் அவருக்கு இப்பொழுது எடுத்து எழுதிக் கொடுக் கிறார்கள். தமிழ் மொழிமேல் பா...வினருக்கு, வடநாட்டுக்காரர்களுக்கெல்லாம் காதல்.

‘‘தமில் வாழ்க! டமிழை படிக்க முடியவில்லை - ரொம்ப வருத்தப்படுறேன்'' என்று சொல்லுகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல!

தமிழ் மாய்மாலம் காட்டியாவது  தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால், எங்கள் தமிழ் மக்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல என்று சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

இன்றைக்கு அவர்களுக்கு வேறு வழி யில்லை. வேறு எதைச் சொல்லியும் ஏமாற்ற முடியாது. எந்த உணர்வை பெரியார் உருவாக் கினார்களோ - எந்த உணர்வை திராவிட இயக்கம் இந்த மண்ணில் செழிக்க வைத்ததோ - அந்த உணர்வைக் காட்டியாவது - அதைப் பிடித்தாவது கரையேற வேண்டும் என்று நினைக்கவேண்டிய பரிதாபத்திற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம்?

உங்கள் பிள்ளைகளுக்காக என்று நாங்கள் சொன்னோம். எங்களுடைய பிள்ளைகளுக்காக அல்ல - உங்களுடைய எதிர்கால சந்ததி  - எடுத்துப் பாருங்கள் - அழகாக எடுத்துச் சொன்னார்களே இங்கே எனக்கு முன்பாக பேசிய அத்துணை தோழர் களும் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியைப் பற்றிச் சொன்னார்கள்.

கல்வி, திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கம் பிறந்தது முதற்கொண்டு கவிஞர் சொன்னார், நம்முடைய பொருளாளர் சொன்னார், பொதுச்செயலாளர் சொன்னார், பிரச்சார செயலாளர் சொன்னார் - எல்லோரும் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்களே!                                                    

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் - அரசியலை மறந்துவிடுங்கள்; உங்கள் எதிர்காலத்தை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர் காலத்தில், நம் வீட்டுப் பிள்ளைகள், காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில், மனுநீதி இந்த நாட்டை ஆண்ட காரணத்தால், எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது; பஞ்சமனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது. அதற்கும் கீழே இருக்கக்கூடியவர்கள் படிக்கக் கூடாது. 

 (தொடரும்)

Comments