ராமன் கோவில் கட்டுமானத்துக்கு நன்கொடை வழங்காததால் பள்ளி ஆசிரியர் பணிநீக்கமாம்!

 பாலியா, மார்ச் 10- உத்தரப்பிரதேச மாநிலம் ஜெகதீஷ்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், யஷ்வந்த் பிரதாப்சிங்.

இவர், அயோத்தி ராமன் கோவில் கட்டுமானத்துக்கு ரூ.ஆயிரம் நன்கொடை வழங்குமாறு தன்னை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் தன்னை பள்ளி நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். ராமன் கோவிலுக்காக தனக்கு நன்கொடை ரசீது புத்தகம் வழங்கப்பட்டது. அதன் மூலம் ரூ.80 ஆயிரம் வசூலித்து கொடுத்துவிட்டதாக பிரதாப்சிங் கூறுகிறார்.

ஆனால் பிரதாப்சிங்கின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி நிர்வாகிகள், அவர் தானே விரும்பித்தான் 3 நன்கொடை ரசீது புத்தகங்களை பெற்றதாகவும், ஆனால் வசூலித்த தொகையை வழங்கவில்லை என்றும், அவர் தானாகவே பணியிலிருந்து விலகிவிட்டார் எனவும் தெரிவித்தனர்.

அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 10- தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம்தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி சென்னையில் 16 தொகுதி களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 5,911 வாக்குச் சாவடிகளும், 2,157 துணை வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்த 9,847 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7,392 கட்டுப்பாட்டு கருவிகள், 7,474 விவிபேடு இயந்தி ரங்கள் அனைத்து கட்ட சோதனைகளும் செயயப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த இயந்திரங்கள் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒதுக்கீடு செய்யும் பணி 8.3.2021 அன்று அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அனைத்து  கட்சி களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 10 மாதங்களில்1322 நிறுவனங்கள் மூடல்

புதுடில்லி மார்ச். 10- கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை தமிழகத்தில் 1322 பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயங்காத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி அனைத்து நாடுகளிலும் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்குள்ளானது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதார பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் வரிசையில் தமிழகமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.  கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் வர்த்தக பாதிப்பால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இவற்றில் அதிக அளவில் டில்லியில் 2394 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 1936 நிறுவனங் களும் தமிழகத்தில் 1322 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.   நான் காம் இடத்தில் உள்ள மகாராட்டிராவில் 1279 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Comments