வழிகாட்டும் கும்பகோண மாவட்டக் கழகம்

 - கழகத் தலைவர் பெருமிதம் -

(குடந்தை) கும்பகோணம் கழக மாவட்டம், தமிழ் நாட்டிலுள்ள எல்லா கழக  மாவட்டங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டான மாவட்டமாக, தங்களது ஒருங்கிணைந்த ஒற்றுமை கட்டுப்பாடு, கடும் உழைப்பு - தலைமையின் கட்டளைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் 'சிட்டாய்'ப் பறந்து சாதித்துக் காட்டுவது - இவைகளுக்கான ஒட்டு மொத்த திரட்சியாக காட்சி அளித்து, அனைவரது பாராட்டு மழையில் நனைந்து கொண்டுள்ளது!

மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு நிம்மதி தலைமையில், மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராஜன், கழகப் பொறுப்பாளர்கள் -  உருவத்தால் பலராய் காணப்பட்டாலும், உள்ளத்தால் ஒன்றிய ஒருவராகவே உழைக்கின்றனர்! கட்டுப்பாடு காக்கும் களப்பணி சூரர்கள் இவர்கள் - சொக்கத் தங்கங்களான பகுத்தறிவாளர்கள் பொறுப்பாளர்களும் இதில் இணைந்த வர்களே!

குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக குடந்தையில் பொதுக்குழு ஓராண்டுக்குப் பிறகு கழகப் பொறுப்பாளர் களின் சந்திப்புத் திருவிழாவாக விழாக் கோலம் பூண்டு; மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டதொரு நல்ல ஏற்பாடு, மண்டபம், பொதுக் கூட்டத்தில், உணவோ அறுசுவை உணவு - அறிவுக்கும் சேர்த்து என்று தரக் காரணமாய் அமைந்தனர்.

என்னே நாணயம்!

நேற்று (18.3.2020) நன்னிலம் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை  ஆதரித்து  (தி.மு..  கூட்டணி - நண்பர் ஜோதிராமன்) குடவாசலில் நடைபெற்ற பரப்புரை மேடையில் அத்துணை பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து வந்து அடக்கமாக ரூ.51,230 பண முடிப்பினை பொதுக்குழு வசூல் செலவு போக மீதி என்று கூறி தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்தனர்!

என்னே நாணயம்! என்னே மக்கள் தொடர்பு! -  Network  போல ஒருங்கிணைப்பு!

இப்படி ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளரும் கட்டுப் பாட்டுடன் கடுமையாக பெருமிதத்துடன் உழைக்க   இவர்கள் Roll Model ஆக  குழு மனப்பான்மை தலை தூக்கவே இடம் தராது உழைத்து, பெரியார் பணி முடிக்க உறுதியேற்று செயல்பட முன் வாருங்கள்!

தொடர்க தொண்டறம்!

கட்டுப்பாடும், கடமை உணர்வும், நேர்மை, நாணயமும் கழகக் கவசங்கள். மறவாதீர்!

கழகத் தலைமைப் பொறுப்பேற்று  43ஆவது ஆண்டு துவக்கமாக அளிக்கப்பட்ட பரிசு போலும் இது!


 கி.வீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம்               

19.3.2021          

Comments