"நீட்" தேர்வால் அதிக மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை

  முதல்வர் எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் 

சிவகங்கை, மார்ச் 28- நீட் தேர்வால் அதிகமான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரண்மனை வாசலில் 27.3.2021 அன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-

உங்களைப்போல் கூட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான். இன்று முதல்வராக உள்ளேன். நானும் ஒரு விவசாயி. அதனால்தான் விவசாயிகளுக்கான திட்டங் களை நிறைவேற்றுகிறேன். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளியில் படித்த 6 பேர் மட்டுமே மருத்துவக்கல்வி படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வால் அதிகமான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை. இது குறித்து நான் சிந்தித்தேன். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆலோசித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது. ‘‘உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆனால் படிப்பதற்கு பணம் இல்லையே’’ என ஒரு ஏழை மாணவி என்னிடம் அழுதார். இதனால் மருத்துவக்கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்தேன். இவ்வாறு பழனிசாமி பேசினார். பிரசாரத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன், வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேனில் இடமில்லை அமைச்சர் ‘‘அப்செட்’’

சிவகங்கையில் நடந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் செந்தில் நாதன் ஒரு வேனிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய பிரச்சார வாகனத்திலும் இருந்தனர். அமைச்சர் பாஸ்கரனை வேனில் ஏற்றவில்லை. இதனால் அவர் கீழே கோபத்துடன் காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

கருப்புக்கொடியுடன் முற்றுகையிட்டு

.தி.மு.. வேட்பாளர் விரட்டியடிப்பு

மேலூர், மார்ச் 28- மதுரை மாவட்டம், மேலூர் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான்.  தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம் பட்டி ஒன்றியம் எட்டிமங்கலத்தில் 26.3.2021 அன்று காலை பெரியபுள்ளான் பிரச்சாரத்தை துவக்கினார்.

சென்னகரம்பட்டி கிராமத்தில் நுழையும்போது, அப்பகுதியில் கருப்புக்கொடியுடன் இளைஞர்கள் திரண்டு, எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமங்களில் ஓரிரு அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாததால், தங்கள் பகுதிக்குள் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் பிரச்சாரத்திற்கு வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இளைஞர்கள், பெரியபுள்ளான் காரை முற்றுகையிட்டு முழக்க மிட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் அங்கிருந்து அவசரம் அவசரமாக திரும்பினார்.

பெண் மருத்துவர் தற்கொலை

கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 28- பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் அவரது தாயாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்தவர் மரியனோ ஆன்டோ புருனோ (36). இவருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மருததுவராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியா (32) என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இதனையடுத்து மாமியார், மாமனார், கணவருடன் அமலி வசித்துவந்துள்ளார். திருமணமாகி ஓராண்டு வரை தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய 3 பேரும் அமலியை குழந்தை இல்லை என்று கூறி கொடுமை செய்து, நீ செத்துபோ என்று திட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது, அவரின் தாய் என் மகளை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மாமியார், நீ அதெல்லாம் சொல்லக்கூடாது என்று திட்டியுள்ளார்.

சில நாட்களில், உடல்நிலை சரியில்லாதபோது வேலை செய்ய சொல்லியும், அமலி பெயரிலுள்ள சொத்துகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி, தாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் அமலி கடந்த 5.11.2014 அன்று வேலையில் இருந்து வந்த பிறகு, பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் சிறீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்த அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சென்னை-மதுரை இடையே வரும் ஏப்ரல் 18 முதல் அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை, மார்ச் 28 கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு, பயணத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இதுவரையில் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்க இருப்பதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு அதிவேக ரயில் புறப்பட்டு காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடை கிறது. மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும் பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் செங்கல் பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image