சனாதனிக்குச் சிலை

 சனாதன தர்மம் பேசினாலும் சனாதன மதம் என பெயர் வைத்து கொண்டிருந்தாலும் பார்ப்பனர்கள் இரட்டை வாழ்க்கை தான் வாழ்ந்தனர். வாழ்ந்து வருகின்றனர். பார்ப்பனர் எல்லாம் வழக்குரைஞர் படிப்பைப் படித்துவிட்டு லட்சம் லட்சமாக சம்பாதித்தனர். கோடி கோடியாக இப்போதும் சம்பாதிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இராஜகோபாலாச்சாரியார் சேலம் நகரில் வக்கீல். அன்று சேலம் சிறு ஊர். இரண்டு ஆண்டுகள் தொழில் செய்ததில் குதிரை பூட்டி சவாரி செய்யும் அழகிய கோச் வண்டி வாங்கிவிட்டார். கொஞ்ச நாளில் கார் வாங்கி விட்டார். சேலத்தில் கார் வைத்திருந்த முதல் ஆளே அவர்தான். ஃபிரான்சு நாட்டு டயாரெக் கார் வாங்கி விட்டார். அன்றைய விலை ரூபாய் மூவாயிரம். (படிக்க: நீல்கன் பெருமாள் எழுதிய அவரின் வரலாறு, பக்கம் 21) இது சனாதனத்தைக் கடைப்பிடிக்கும் யோக்கியதையா? இவர்தான் நம்மைக் குலத்தொழில் செய்யச் சொன்னவர்.

இன்னொரு சனாதனியின் கதையைப் பார்ப்போமா? திருவாரூர் முத்துசாமி அய்யர். தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தவர் எனப் பார்ப்பனர் பேசுவர். கிராம கர்ணத்திற்கு உதவியாளராக இருந்தவர். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர். திருவாரூரில் தாசில்தாராக இருந்த முத்தியால் நாயக்கர் இவரை படிக்க வைத்தார். நாகப்பட்டினத்தில் உயர்நிலைக் கல்வியும், சென்னையில் சட்டப் படிப்பும் படிக்க வைத்தார் செலவு செய்து. யாருக்காவது தாசில்தார் பெயர் தெரியுமா? முத்துசாமி அய்யரைப் பற்றி எழுதும்போது முத்தியால் நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கிறார்களா? கட்டட அடித்தளம் போல், ஜட்ஜ் ஆனதற்கு காரணமே அவர் செயல் தான். பார்ப்பனரல்லாதாரின் பணத்தில் பார்ப்பனர் படித்தார் என்றெழுதினால் அய்யருக்கு அசிங்கமல்லவா?

 1878இல் அவர் சென்னை உயர்நீதிமன்ற ஜட்ஜ் ஆக நியமிக்கப்பட்டார். “மெட்ராஸ் மெயில்இங்கிலீஷ் நாளேட்டில் 5.9.1878இல் கண்டனக் கடிதம் பிரசுரமானது. பார்ப்பானை நீதிபதியாக நியமித்தால் ஜாதிகளின் அடிப்படையில்தான் நீதி பரிபாலனம் நடக்கும் என கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எழுதியவர் திராவிட நிருபர் எனும் புனைப்பெயர் இருந்தது. அதுதான் நடந்தது, அவரது 17 ஆண்டுகால பணிக்காலத்தில்.

பார்ப்பனர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதை எதிர்க்க ஆங்கிலேயரின் ஏடு காரணி என நினைத்தப் பார்ப்பனர்கள் ஆறு பேர்தி ஹிண்டுஏட்டில் தாக்கி எழுதினர். ஜி.சுப்ரமணியன் அய்யர் தொடங்கிய ஏடு அது.

முத்துசாமி அய்யர் நீதிபதியாக இருந்து என்ன கிழித்தார்? “சங்கராச்சாரி யார்?” என்ற தொடர் சொற்பொழிவில் ஆசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார். ஒரு புருஷன் தன் பெண்டாட்டியை அடித்து கை உடைந்து போன வழக்கு. விசாரித்த தாலுகா மாஜிஸ்திரேட் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தார். புருஷன் மேல் முறையீட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி முத்துசாமி அய்யர், தண்டனையை நீக்கிவிட்டார். மனு நீதியின் படி புருஷன் பெஞ்ஜாதியை அடிக்கலாம், ஆகவே புருஷன் செய்தது குற்றமல்ல என தீர்ப்பில் குறிப்பிட்டார். திராவிட நிருபர்தி மெயில்ஏட்டில் எழுதியவாறே நடந்துவிட்டது.

தன் கணவன் வைப்பாட்டி வைத்துக்கொண்டு அவளுடன் இருப்பதால் தனக்கு வாழ்க்கை செலவுக்குப் பணம் வழங்குவதுடன் பிரிந்து வாழவும் உத்தரவு கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில் இந்த மகானுபாவர் கொடுத்த தீர்ப்பு என்ன தெரியுமா? வைப்பாட்டி வைத்திருப்பது குற்றமல்ல என எழுதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். (இண்டியன் சோசியல் ரிபார்மர் நூல் 2.2.1895,  பக்கம் 169)

இந்துமதக் கோயில்களில் தீண்டத்தகாதாரை அனுமதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் இவர், “முகமதியர்களும் தீண்டத்தகாதவருக்கும் ஜாதி கெட்டவர்களும் கும்பிடுவதற்காக கோவில்கள் கட்டப்படவுமில்லை”, காப்பாற்றப்படவுமில்லை என்று திமிர்த்தனமாக தீர்ப்பு எழுதியதை நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளை தம் நூலில்,  “Right of Temple Entry” பக்கம் 8இல் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே, வழக்கங்களைப் பின்பற்றி நடக்காதவர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்திடுவது அர்ச்சகப் பார்ப்பனரின் உரிமை என்றும் தீர்ப்பில் எழுதினார். சி.சங்கரன் நாயர் எழுதிய Auto biography of Sir. C.Sankaran Nair  எனும் நூலில் 64ஆம் பக்கத்தில் இச்செய்தி உள்ளது.

அது போலவே, “தாசில்தார், சப் மாஜிஸ்திரேட்,

மாஜிஸ்திரேட், டெபுடி கலெக்டர் போன்ற பதவிகளில் இருந்த பார்ப்பனர்கள் அலுவல் சார்ந்த நடவடிக்கைகளில் ஜாதி, மத கண்ணோட்டத்துடன் நடந்ததை சான்றுகளுடன்வெட்டிக் கொடியான்ஏடு 1.8.1891இல் எடுத்துக்காட்டியுள்ளது. (அரசு கமுக்க அறிக்கை 15.8.1891)

இந்த லட்சணத்தில் பணியாற்றிய முத்துசாமி அய்யர் 25.1,1895இல் இறந்து போனார். அவரது நண்பர்கள் (வேறு யார்? பார்ப்பன சனாதனிகளே), உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் எனக் கேட்டனர். அப்போது ஸிமீயீஷீக்ஷீனீமீக்ஷீ ஏடு பின்வருமாறு எழுதியது. “நினைவுச் சின்னம்  எழுப்பப்பட்டு போற்றப்பட வேண்டுமானால் அம்மனிதர் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ததைக் காட்டிலும் மேம்பட்ட பணியைக் கண்ணியத்துடனும், திறமையாகவும் செய்திருக்க வேண்டும்என்று எழுதியது. (நாள் 2.2.1895, பக்கம் 169) முத்துசாமி அய்யர்வேலை செய்தார்; இந்திய நீதிபதியாக இருக்கவில்லைஎன எழுதப்பட்டது. இதற்குப் பிறகும் சிலை தேவையா? நாசக்காரப் பழக்கவழக்கங்களை ஆதரிப்பதாகவே அவரது தீர்ப்புகள் அமைந்திருந்தன. அவற்றை ஒழித்து இந்திய சமூகத்தைத் திருத்தக் கூடிய தீர்ப்புகளை எழுதும் வாய்ப்புகள் இருந்தபோதும் அவர் எதுவும் செய்யவில்லை. மாறாக பிற்போக்குத்தனத்திற்கு சப்பைக்கட்டு கட்டினார்.

1890ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பு எழுதினார். சிறு பெண்கள் பூப்பெய்துவதற்கு முன்னதாக மணம் செய்துவிடும் பழக்கம் பற்றிய வழக்கில் இவர், பார்ப்பனச் சிறுமிகளுக்கு அவ்வாறு திருமணம் செய்வது என்பது சமூக தகுதியைத் தக்கவைத்துக்கொள்ள உதவும். திருமணம் எனும் புனிதச்சடங்கு, அதை உதாசீனப்படுத்தினால் வழக்கம் மீறப்படுவது ஆகிவிடும். நீதிமன்றங்கள் அணுகத் துணியாத ஹிந்து சட்டங்களின்படி, அவை வேதகாலத்து சட்டங்களாதலால் பழக்கம்(Custom) காப்பாற்றப்பட வேண்டும். பார்ப்பனியப் பழக்கமோ, ஆரிய பழக்கமோ, வேத பழக்கமோ, புராண பழக்கமோ அல்லது சட்டங்களின் படிக்கான பழக்கமோ எதுவாக இருந்தாலும் கடைப்பிடிக்கப் படவேண்டியவை பழக்க வழக்கங்களாகும் என்று அடித்துக் கூறிக் காப்பாற்றிவிட்டார்.

முக்கியமான, ஹிந்து மதம், சடங்கு பற்றிய வழக்குகளை இவர் விசாரிக்க நேரும்போது திருவாரூருக்குப் போய் மடிசஞ்சிப் பார்ப்பனர்களை சந்தித்துப் பேசி தமக்குத் தெரியாதவற்றை சாஸ்திரோத்தமாகக் கேட்டு தெரிந்து கொண்டு தீர்ப்பில் செருகிவிடுவார். சிவில் சட்டமோ, கிரிமினல் சட்டமோ அவருக்குப் பெரிதல்ல. சாஸ்திரமும், சம்பிரதாயமுமே அவருக்கு வழிகாட்டின. அப்படிப்பட்டவர்களுக்குச் சிலை வைத்திடப் பார்ப்பனர் முயன்றனர், வைத்தனர். மனுநீதிச் சோழன் எனும் கற்பனை மன்னனுக்கு சிலை வைத்துள்ள இடத்தில் முத்துசாமி அய்யருக்கும் ஒன்று.

முத்தியால் நாயக்கர் - மறந்தே போயினர்!

சு.அறிவுக்கரசு

Comments