இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியா?

'இலங்கை பாரதீய ஜனதா கட்சி' என்ற பெயரிலான கட்சி, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்த கட்சி (மார்ச் 6, சனிக்கிழமை) தொடங்கப்பட்டது.

யாழ். ஊடக அமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கட்சி அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்சியின் தலைவராக பிரபல வர்த்தகரும், இந்திய வம்சாவளி தமிழருமான வி.முத்துசாமி செயல்படுகின்றார்.

கட்சியின் பொதுச் செயலாளராக இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் செயற்படுவதுடன், நிதிச் செயலாளராக வீ.திலான் நியமிக்கப்பட்டுள்ளார்.

'இலங்கை பாரதீய ஜனதா கட்சி', ஆங்கிலத்தில் 'ஸ்ரீலங்கா பாரதீய ஜனதா பார்ட்டி' என்ற பெயரிலும், சிங்களத்தில் 'ஸ்ரீலங்கா பாரதீய ஜனதா பக்சய' என்ற பெயரிலும் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.இந்திரஜித் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

கேள்வி: பாரதீய ஜனதா கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டதன் காரணம் என்ன?

பதில்: இந்த கட்சி ஒரு பிரசித்தமான கட்சி. இந்த கட்சியின் ஊடாக அரசியலுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படாது. தற்போது கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும். அரசியல் தீர்வொன்று வரும் போது இந்த தமிழ்ச் சமூகம் ஒரு விவேகம் அற்ற சமூகமாகவே காணப்படும் என்ற காரணத்தினால், விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நாம் முன்னுரிமை வழங்குகின்றோம். இந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் 10 ஆண்டு திட்டத்தின் கீழ் இந்த கட்சியை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.

கேள்வி: ஏன் இலங்கை பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் ஆரம்பித்தீர்கள்?

பதில்: இந்தியாவை பொறுத்த வரை இதுவொரு முக்கிய கட்சிதான். ஆனால் மக்கள் இந்தப் பெயரை வரவேற்காவிடின் பெயரை மாற்றி விடுவோம்.

கேள்வி: இலங்கையிலும் பாரதீய ஜனதா கட்சி ஆரம்பிக்கப் படும் என சில தினங்களுக்கு முன்னர் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் அறிவித்ததாக செய்தி வெளியானது. இந்த அறிவிப்பிற்கும், இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக் கும் இடையில் தொடர்பு உள்ளதா?

பதில்: இல்லை. திரிபுரா முதலமைச்சர் கூறியிருந்தார், இலங்கையிலும் எமது ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கவுள்ளனர். அதற்கு நாம் ஆதரவு வழங்கவுள்ளோம் என அவர் கூறியிருந்தார். எனினும், இப்போது ஆரம்பித்துள்ள கட்சிக்கும், இந்திய பாரதீய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாரதீய ஜனதா கட்சி என்பது ஒரு இந்துத்துவ கட்சி. எனினும், இலங்கையில் அனைத்து இனத்தவர்களையும் சேர்க்கவுள்ளோம். அதனால், அந்தப் பெயரில் இலங்கையில் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளோம்.

கேள்வி: இந்திய பாரதீய ஜனதா கட்சி உங்களுடன் கைக் கோர்க்க வந்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையா?

பதில்: ஏற்றுக்கொள்வோம். இந்துத்துவம் என்ற கொள்கைக்கு இல்லாமல், மக்களுக்கான சேவை என்ற அடிப்படையில் வந்தால் ஏற்றுக்கொள்வோம். மதம் சாராத விதத்தில் வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் உதவிகளை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு தயார் என கூறிய இலங்கை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர், மதம் சார்ந்த கட்சியாக முன்னோக்கி செல்ல தயார் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்திய பாரதீய ஜனதா கட்சி கட்சியின் கொள்கையை பின்பற்றிச் செல்வதற்கு தயார் இல்லை எனவும் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இந்த கட்சி ஆரம்பத்திலேயே அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் கிடையாது என கூறிய இந்திரஜித், எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிப்பதற்கான எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மதநோக்கம் - குறிப்பாக இந்துத்துவா நோக்கம் இல்லை என்று சொன்னது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்தியாவில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் பெயர் - மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்துக்கு எதிரானது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இந்தப் பெயருடன் கட்சி தொடங்குவது - பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. உலக மக்கள் மத்தியிலும் அவப்பெயருடன் காணப்படும் ஒரு மதவாதக் கட்சியின் பெயரைத் தவிர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வோம் என்பது பெரும் அய்யப்பாட்டிற்கு இடம் அளிக்கிறது.

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் அல்லவா?

Comments