நூறாண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத ஒரு காலகட்டத்தில் பெண்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தியவர் தந்தை பெரியார் என்ற புரட்சிகர தலைவர்!

கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

சென்னை, மார்ச் 12  நூறாண்டுகளுக்கு முன்பு பெண் களை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தார்கள். அவர்கள் வெளியே வரவேண்டுமானால், முகத்தில் துணியைப் போர்த்தி வந்த ஒரு காலகட்டத்தில், பெண்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தியவர் தந்தை பெரியார் என்ற புரட்சிகர தலைவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கருத்தரங்கம்

கடந்த 10.3.2021 அன்று  சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் 102 ஆம் பிறந்த நாள் விழா கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்ற  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அறிவியல் கண்டுபிடிப்பான ஸ்கேன் கருவியின்மூலம் மருத்துவர்கள்  கருவில் உருவான குழந்தை பெண் குழந்தையா? ஆண் குழந்தையா? என்று சொல்லுவார்கள்.

மூடநம்பிக்கைக்காரர்களால், விஞ்ஞானம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது

நம்முடைய நாட்டில் விஞ்ஞானம் எவ்வளவு தவறாக, அஞ்ஞானிகளால், மூடநம்பிக்கையாளர் களால், மதவெறியர்களால், பாலின வேற்றுமைக் காரர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணம் என்னவென்றால், கருவில் உருவான குழந்தை பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், அதனை கருவிலேயே அழிக்கின்றனர்.

அதனைத் தடுப்பதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு  வந்தார்கள்; அச்சட்டம் என்னவென்றால், ஸ்கேன் கருவியின்மூலம் கருவில் வளரும் குழந்தை பெண் குழந்தையா? ஆண் குழந்தையா? என்று சொல்வது  சட்டப்படி குற்றம் - அதற்கு தண்டனை உண்டு.

இதை வெளிநாட்டுக்காரர்கள் பார்த்தார்கள் என்றால், ‘‘எங்கள் நாட்டிற்கு எந்த நாடு ஈடு?'' என்று நாம் பேச முடியுமா? மேற்கண்ட சட்டம் இருப்பது தேசிய அவமானம் அல்லவா?

நம்முடைய நாட்டில், பி.எல்.480 என்ற ஒன்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து கோதுமை, பணம் எல்லாம் கொடுத்தார்கள்; அதை இங்கே செலவு செய்யவேண்டும். இது 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலை.

குழந்தைகளுக்கு பால் பவுடர் போன்ற பொருள் களைக் கொடுத்தார்கள். அதை வாங்கி வந்து, நம்மாட்கள் தேநீர்க் கடைகளில் விற்றார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு  சிலர்  உடுப்புகளைக் கொடுத்தால், அதை வாங்கி வந்து சிலர் சந்தையில் விற்கிறார்கள்.

யாருக்கும் வெட்கமில்லை!

இது போன்று ஒழுக்கங்கெட்ட நாடு - இதுதான் முப்பது முக்கோடி தேவர்கள் வாழ்ந்த நாடு - இதுதான் பாரத கலாச்சாரம் - வெட்கக்கேடு - மானக்கேடான விஷயம் இது.

புரட்சிக்கவிஞர் சொல்வதுபோன்று யாருக்கும் வெட்கமில்லை.

பெண் குழந்தை பிறந்தாலே, அதனை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். பெண்களுக்கு வாழ்வுரிமையே இல்லாமல் இருக்கிறது.

எனவே, ஓட்டுரிமை, படிப்புரிமை, சொத்துரிமை என்பதெல்லாம் பிறகு; முதலில் பிறக்கின்ற உரிமையே பெண்களுக்கு இல்லாமல் இருக்கிறது.

ஒரு கருவியைப் பார்ப்பதுபோன்றே பெண்களைப் பார்க்கிறார்கள்

பெண்களைப் பார்க்கும்பொழுது அவர் களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை. ஏதோ ஒரு கருவியைப் பார்ப்பதுபோன்றே பார்க் கிறார்கள்.

ஆசா பாசம் - பாலின சீண்டல் எதற்காக?

காவல்துறையில் ஒரு பெரிய பதவியில் இருக்கின்ற அதிகாரியை, சக பெண் காவல்துறை அதிகாரியை, அதிலும் திருமணம் ஆன ஒரு பெண் அதிகாரி என்று தெரிந்திருந்தும் - ஏனென்றால், ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன், சமுதாய உணர்விற்காக சொல்கிறேன்; திருமணம் ஆகவில்லை என்றால், பரவாயில்லை என்கிற அர்த்தத்தில் அல்ல. திருமணம் ஆன பெண் என்றால், ஒரு தயக்க உணர்வு வரும் இயல்பாக. அப்படியிருந்தும், பாலின சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

இங்கே உரையாற்றிய அருள்மொழி அவர்கள், இரண்டு பெண்கள் டி.ஜி.பி.,க்களாக இருந்திருக் கிறார்கள் என்று எடுத்துக்காட்டினார்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' நூல்

அதல் ஒருவர் திலகவதி அய்.பி.எஸ். அவர்கள். அந்த அம்மையார், ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை 5000 பிரதிகளை வாங்கி காவல் துறையில் பணியாற்றியவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கினார்.  அத்துறையில் நடைபெற்ற கூட்டங்களுக்கு நம்முடைய பேச்சாளர்கள் சென்று உரையாற்றி இருக்கிறார்கள்.

சென்னை ஒய்.எம்.சி.. மைதானத்தில் நடை பெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. ஒரு நாள் அங்கு சென்ற நான், நம்முடைய அரங்கில் விற்பனையாளராக இருந்த தோழர்களை அழைத்து, ‘‘என்ன புத்தகம் அதிக அளவில் விற்பனையாயிற்று?'' என்று கேட்டேன்.

‘‘எல்லா புத்தகங்களும் நல்ல அளவிற்கு விற்பனையாயிற்று. ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகம் அதிகமாக விற்பனை யாயிற்று'' என்றார்கள்.

‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர் - வைக்கம் போராட்டப் பொன்விழாவில் அன்னையார் ஆற்றிய உரை''

இங்கே வெளியிடப்பட்ட ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர் - வைக்கம் போராட்டப் பொன்விழாவில் அன்னையார் ஆற்றிய உரை'' புத்தகம் 24 பக்கம்; ரூபாய் 20 நன்கொடையில். இதை நாம் வியாபாரத்திற்காக செய்யவில்லை. பிரச்சாரத் திற்காகத்தான் செய்கிறோம்.

பெண்கள் உரிமை, பெண்கள் சொத்துரிமைபற்றி யெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். வழக்குரைஞர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். குறிப்பாக மகளிர் வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஓய்வு பெற்று செல்லும்பொழுது, தமிழகத்தில் மட்டும் 13 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள்; இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று பெருமையாக சொல்லிவிட்டுச் சென்றார். பெண் நீதிபதிகள் வந்த வரலாறு என்ன என்பதைப்பற்றி இங்கே அருள்மொழி அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

மாவட்ட நீதிபதிகளாக இருந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளானார்கள். இது எப்படி சாத்தியம்? திராவிட இயக்கத்தின் சமூகநீதி என்ற வித்து அங்கே வந்ததினால்தான் - இட ஒதுக்கீட்டினால்தான்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கூடாது என்று பார்ப்பனர்கள் மிகவும் சாமர்த்தியமாக சொல்கிறார்கள். எந்த சட்டத்தில் இருக்கிறது  உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு கூடாது என்று.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது கிடையாது. தவறிப் போய் அவர்கள் பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் உயர்ஜாதிப் பெண்களாக இருப்பார்கள்.

உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், உயர்ஜாதிக்காரப் பெண்களை நியமனம் செய்வது; பார்த்தீர்களா? நாங்கள் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

நாட்டில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்?

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிவிட்டு வாருங்கள்!

இதுபோன்ற பிரச்சினைகளை நம்முடைய மகளிரணி தோழர்கள் வீடு வீடாகச் சென்று மகளிரிடத்தில், ‘‘பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிவிட்டு, பிறகு எங்களிடம் வந்து ஓட்டு கேளுங்கள்; அது வரையில் வராதீர்கள்; எந்தக் கட்சியாக இருந் தாலும் அவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டும்'' என்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

33 சதவிகித சட்டம் ஏன் ஊறுகாய் ஜாடியில் இருக்கவேண்டும்? அதை வெளியே கொண்டு வந்து செயல்படுத்துங்கள்.

எனவே, நம்முடைய மகளிரணிக்கு தேர்தல் முடிந்தவுடன் மேற்கொள்ளும் சில திட்டங்களில் இது முதல் திட்டமாக அமையவேண்டும், மாவட்டம் தவறாமல்.

பெண்களுக்கு சொத்துரிமை, படிப்புரிமைபற்றிப் பார்ப்போம்; எல்லா இடங்களில் பெண்கள் படித்தி ருக்கிறார்களா? பெண்கல்வியைப்பற்றியே கவலைப் படவில்லை. புதிய கல்விக் கொள்கையில் பெண் கல்வியைப்பற்றி முக்கியத்துவம் உண்டா? குலக் கல்வித் திட்டத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதே தவிர, பெண் கல்விக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?

ராஜ்ஜிய விவகாரங்களில் பெண்கள் தலையிடக் கூடாது'

- பாரதியின் கருத்து

நம் நாட்டில், பெண்கள்கூட சொல்லுவார்கள்,  பாரதி கண்ட புரட்சிப் பெண் என்று. பாரதி, பெண் உரிமைக்காகப் பாடியவர். அதற்காக அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால், பாரதிக்கு ஏற்பட்ட பார்ப்பன புத்தி, ‘ஆரிய நாடு' என்று வருகின்றபொழுது, பல பேருக்குத் தெரியாத செய்தி, நாமும் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறோம்; மீண்டும் தெரிவித்துக் கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால், பாரதி கண்டது புதுமைப் பெண்களாக இருக்கலாம்; பாரதியின் கட்டுரை தொகுப்பு என்று ஒரு புத்தகம் போட்டிருக்கிறார்கள். அதில், ‘ராஜ்ஜிய விவகாரங்களில் பெண்கள் தலையிடக் கூடாது.' அதாவது சட்டசபைக்கோ, நாடாளுமன்றத் திற்கோ பெண்கள் போகவேண்டிய அவசிய மில்லை என்று உள்ளது.

இது யாருடைய கருத்து? மகாகவி, தேசிய கவி பாரதியினுடைய கருத்து!

தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர், சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்து என்ன? என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தது யாரால்?

இராமாயணத்தைப் படிப்பதைப் பற்றியோ, இராமனை வணங்குவதைப்பற்றியோ எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி, ‘‘சீதா பிராட்டியின்மேல் வந்த சந்தேகம் போன்று நம்முடைய  குடும்பத்துப் பெண்களின்மீது சந்தேகம் வந்தால், நெருப்பில் குளிப்பதற்குத் தயாராக இருப் போமா? கருவுற்றவர்களை காட்டிற்கு அனுப்பு வதற்குத் தயாராக இருப்போமா?'' என்று கேளுங்கள். அதற்குப் பதில் சொல்லமாட்டார்கள் அவர்கள்.

நம்முடைய இயக்கம், நம்முடைய திராவிடர் ஆட்சி வந்ததினால், பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தது.

வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட பொன்விழாக் கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் கலந்துகொள்கிறார்.

இந்தியாவில் பொதுவாழ்க்கையில் இருக்கின்ற பெண்களைப்பற்றி இங்கே சொன்னார்கள். தேசிய இயக்கம், கம்யூனிச இயக்கம் -  சுயமரியாதை இயக்கம் எனப் பெண்கள் உள்ளனர்.

ஆனால், நூறாண்டுகளுக்கு முன்பு பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். அவர்கள் வெளியே வரவேண்டுமானால், முகத்தில் துணியைப் போர்த்தி வருகின்ற ஒரு காலகட்டத்தில், பெண்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தியவர் தந்தை பெரியார் என்ற புரட்சிகர தலைவர்தான்.

பெரியார்' திரைப்படத்தில்

கள்ளுக்கடை மறியலை முன்னின்று நடத்தியவர் அன்னை நாகம்மையாரும், பெரியார் அவர்களுடைய தங்கை கண்ணம்மையார் மற்றும் சில பெண்கள் எல்லாம் சேர்ந்துதான் நடத்தினார்கள். அந்தக் காட்சியைபெரியார்' திரைப்படத்தில் மிக அழகாக படம் பிடித்திருந்தார்கள்.

வைக்கம் போராட்டத்திற்கு அய்யா செல்லும் பொழுது நாகம்மையார் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; அவர்கள் .வெ.இரா.நாகம்மாள் என்று கையொப்பமிட்டு கடிதம் எழுதுகிறார்.

முதல் முறை போராட்டத்தில் பங்கேற்ற அய்யாமீது வழக்கு - சிறை; மறுபடியும் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், ‘‘மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, மறு படியும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவருடைய லட்சியத்தில் வெற்றி பெறவேண்டும்'' என்று நாகம்மையார் எழுதுகிறார்.

பத்திரிகைகளுக்கு ஆசிரியராக பெண்களை நியமித்தார்!

குடிஅரசு' பத்திரிகைக்கு நாகம்மையாரை ஆசிரியராக நியமித்தார் தந்தை பெரியார். ‘விடுதலை' பத்திரிகைக்கு மணியம்மையார் அவர்கள்  ஆசிரியர்.

பெரியார் அவர்கள் ரஷ்யாவிற்குச் செல்லும் பொழுது, நாகம்மையாருடைய ஆளுமையில்தான்குடிஅரசு' இருந்தது.

இந்த அரங்கத்தில் மூத்த வழக்குரைஞர்கள், இளைய வழக்குரைஞர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு கருத் தரங்கத்தை நடத்தவேண்டும். அந்தக் கருத்தரங் கத்திற்குத் தலைப்பு என்னவென்றால், ‘‘இந்து சட்டத்தில் பெண்களுடைய சொத்துரிமை எவ்வாறு இன்றைய நிலைக்கு வந்தது'' என்பதுதான்.

உரிமை இல்லாதது என்பது வேறு; ஆனால், அவமானப்படுத்துவது என்பது வேறு.

வெளிநாடுகளில் கருப்பினத்தவர்களைப்  பார்த்து படிக்கக் கூடாது  என்று சொன்னார்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நாட்டிலோ, படிக்கக் கூடாது, அப்படி மீறிப் படித்தால், நாக்கை அறுத்துவிடுவோம்; காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் என்று சொன்னது எவ்வளவு பெரிய மோசம்!

தாய்வழிச் சமூகம்தான்

ஆரம்ப கால சமுதாயம் என்பது வேட்டையாடி, பொருள்களை சேகரிக்கக் கூடிய சமுதாயம். அதற்கு அடுத்த சமுதாயம், நாகரிகமான சமுதாயம் - வளர்ச்சியடைந்த சமுதாயம். இன்றைக்கும் மொகஞ்சதாரோ, ஹாரப்பாவில் தொடங்கி, கீழடி வரையில் வரக்கூடிய அந்த நாகரிக காலத்தில், ஆரம்ப கால நாகரிகத்தில் மனித சமுதாயத்தினுடைய சமூக வளர்ச் சியில், ராகுல் சாங்கிருத்தியாயனுடைய புத்தகங்கள் ‘‘வால்காவிலிருந்து கங்கை வரை'' என்கிற புத்தகத்தை வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.  அந்த புத்த கத்தில், தாய்வழிச் சமூகம் - கேரளாவில் பார்த்தீர்க ளேயானால், மறுமக்கள் தாயம் - தாய்வழிச் சமூகம் தான் முதலில். ஆணுக்கு முக்கியத்துவம் கிடையாது; பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம்.

இன்றைக்கும்கூட, வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், தாய்தானே உறுதியானவர். தந்தை பெரியார் சொன்னார், ‘‘நிர்வாணத் தன்மையில் ஒரு உண்மையை ஆய்வது'' என்று.

Maternity is certainty; 

Paternity is not

என்ற அளவிற்கு,

யாருக்குப் பிறந்திருந்தால் என்ன?

பெரியாரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு, மாட்டிக்கொண்டார். ‘நீ என்ன இங்கிஷ்கார னுக்குப் பிறந்தவனா? என்று கேள்வி கேட்டார்.

‘‘நான் பயன் கருதி இங்கிலீஷ்ல படி என்று சொல்கிறேன். அதற்காக நீ இங்கிலீஷ்கார னுக்குப் பிறந்தவனா? என்று  ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்.

நான் யாருக்குப் பிறந்தவன் என்று எனக்குத் தெரியாது? என்னுடைய அம்மாவிற்குத்தான் தெரியும்.

நான் யாருக்குப் பிறந்தவன் என்று எனக்கு எப்படித் தெரியாதோ - அதேபோன்று நீ யாருக்குப் பிறந்தாய் என்று உனக்குத் தெரியாது - உன்னுடைய அம்மா சொல்லித்தான் தெரியும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை'' என்று அய்யா பதில் கூறினார்.

யாருக்குப் பிறந்திருந்தால் என்ன? பிறந்து விட்டோம் அல்லவா!

இந்துத்துவா தத்துவத்தில்கூட பார்த்தீர்களேயா னால், தந்தையர் நாடு என்றுதான் சொல்வார்கள். தாய்நாடு என்பதைக்கூட எடுத்துவிட்டு, தந்தையர் நாடு -  Father Land என்பதை அப்படியே பிடித்துக் கொண்டு போனோமேயானால், ஆரியம் எங்கே போகும் என்றால், ஹிட்லரிடம் போகும் - ஜெர்மனிக்குப் போகும்.

 திராவிடம் என்பது ஒரு தத்துவம்

தாய்வழிச் சமூகம் என்பதை சிதைத்த ஆரியத்திற்கு நேர் எதிரானது திராவிடம். திராவிடம் என்பது ஒரு தத்துவம்.

(தொடரும்)

Comments