பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உலக சமூகப் பணி நாள் பன்னாட்டு கருத்தரங்கம்

வல்லம், மார்ச் 19 பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப் பணித்துறை சார்பாக "சமூக ஒற்றுமை மற்றும் சமூகப்பணி இடையீடு பலப்படுத்துதல்" என்ற பன்னாட்டு கருத்தரங்கு சமூகப் பணியா ளர்களின் பன்னாட்டு கூட்டமைப்பு(IFSW), இந்திய பகுதிசார் சமூகப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (INPSWA), பகுதிசார் சமூக பணியாளர்களின் சங்கம்(PSWA), ஜப் பார் டெவலப்மெண்ட, ஒஸ்லோ நார்வே மற்றும் அடைக்கலம் அறக் கட்டளையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா, மாலி, மலாவி, மற்றும் இங்கிலாந்து நாடுகளிலிருந்து கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள்.

முன்னதாக பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர்.எஸ்.தேவதாஸ் தனது துவக்கவுரையில் சமூகநீதி, சமத்துவம் மற்றும் பெண் விடுதலைக்காக போராடி நிலைநாட்டியவர் தந்தை பெரியார் என்றும் அவரின் கொள்கை தாங்கிய இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் சமூகப் பணித்துறை பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக கூறினார்.

சமூக ஒற்றுமையை

உறுதி செய்ய....

சிறப்புரையாற்றிய டாடா சமூக அறிவியல் நிறுவன, சமூக விலக்கு மற்றும் சமூக உட்சேர்க்கை மய்யத்தின் தலைவர் முனைவர் அவத்தி இராமையா அவர்கள் சமூக ஒற்றுமையை உறுதி செய்ய தார்மீக அடிப்படையில் நாம் செய்ய வேண்டிய சமூக மாற்றங்களைப் பற்றியும், ஒற்றுமையை சீர்குலைக்கும் பல்வேறு நிலைகளை ஆய்வுகளின் அடிப்படையில் உள்ள கருத்துக்களையும் அதன் அடிப்படையில் சமூகப் பணியாளர் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை பற்றியும் எடுத்துக் கூறினார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பக்னர் பார்க்வே பிளேஸ் நிர்வாக இயக்குநர் முனைவர் ஆபிரகாம் மேத்தியு அவர்கள், கரோனா பெருந்தொற்று நேரங்களில் முதியவர்களை பாதுகாப்பதில் சமூகப்பணியாளர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் தன்னலமில்லாமல் அதே வேளையில் மிகவும் அர்ப்பணிப்போடு முதியவர்களின் உயிர்காக்கும் சேவையில் சமூகப் பணியாளர்கள் கடைப்பிடித்த முறைகளை பற்றி எடுத்துக் கூறினார்.

தேசிய சபைக்கான மசோதா

அவரைத் தொடர்ந்து இந்தியாவின் சமூகப்பணி தேசிய சபை உருவாக்குவதற்கான மசோதா செயல் வடிவம் பெற ஒற்றுமையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பகுதிசார் சமூகப் பணியாளர்களின் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஆன்டிரு சேசுராஜ் அவர்கள் பேசினார். அவர் தன் உரையில் சமூக பணியாளர்களின் பணி அங்கீகாரம் பெறவும், அதை போல பல்வேறு நிலைகளில் சமூகப் பணியின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த பணிகளில் ஒழுங்குமுறை கொண்டு வரவும், சமூகப்பணி தேசிய சபைக்கான மசோதா மிகவும் முக்கியமானது, அதை நம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்வடிவம் பெற செய்ய வேண்டும் என்றார்.

பிற்பகல் அமர்வில் ஆஸ்திரேலி யாவின் ஜேம்ஸ்கூக் பல்கலைக்கழக, சமூகப்பணிதுறை இணைப் பேராசிரியர் நோனி ஹேரிஸ் அவர்கள் பெண்கள் ஒற்றுமையில் சமூகப்பணியின் ஊக்கமளிக்கும் புதுமையான பயிற்சிகள் மற்றும் யுத்திகள் பற்றி பேசினார்.

குழந்தைகள்

நல்வாழ்வு பெற.....

அவரைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் மாலி நாட்டை சேர்ந்த எபிநேசர் இன்டர்நேஷனல், நிர்வாக செயலாளர் சோரி இபிரகாம் மோனக்டா அவர்கள் உரையாற்றினார் அவர் தம் உரையில் சமூக செயல்பாட்டிற்கான நிதி உதவி செய்யும் பன்னாட்டு  நிறுவனங்களின் கொள்கைகளில் மாற்றங்கள் செய்தால் வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நல்வாழ்வு மற்றும் சமூக மாற்றம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறினார்.

மலாவி நாட்டின் இன்வஷ்ட்இன்க் இயக்குநர்,  திமோத்தியா ஜீம்பா அவர்கள் விவசாய தொழில் முனைவோர் மத்தியில் சமூக ஒற்றுமையை வளப்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றினார். விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் உள்ள சவால்களை சமூக ஒற்றுமையோடு, பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தில் ஏற்றம் காணும் வகையில் தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கின் நிறைவு அமர்வில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வேலுசாமி பேசுகையில் சமூகப்பணி தனிநபர், குழு மற்றும் சமூகம் சார்ந்த தேவைகளையம், பிரச்சினைகளையும் அறிவுபூர்வமாக அணுகி பல்வேறு சவால்களை சந்தித்து வரும் துறை என்றார். இந்த உலக சமூகப்பணி நாளில் நாம் அனைவரும் சமூக ஒற்றுமையோடு பாடுபடவேண்டும் என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள எட்ஜ்ஹில் பல்கலைக்கழக, மனநல மற்றும் கற்றல் இயலாமை, கல்வி மற்றும் பயிற்சியின் கீழ் உள்ள சமூகப்பணித் துறை தலைவர் முனைவர் ஸ்டிவ் ஹோதர்சால் அவர்கள் சிறப்பு கருத்துரை வழங்கினார்.

உலகளாவிய இணைப்பை வலுப்படுத்தல்

அவர் தம் உரையில் உலக சமூகப்பணி நாளில் முக்கிய கருவான "உபுந்த்" - நம்மால் தான் நான் - "சமூக ஒற்றுமை மற்றும் உலகளாவிய இணைப்பை வலுப்படுத்துதல்" என்ற கருவின் அடிப்படையில் சமூகப் பணியாளர்களின் முக்கிய பங்கினையும் அதை செய்ய முற்படும் போது ஏற்படும் சிக்கல்களை சமூகப் பணி மரபு நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை மிகவும் வலிமையோடு கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

வாழ்த்துரை வழங்கிய நார்வே நாட்டின் ஒஸ்லோவில் உள்ள ஜப்பார் டெவலப்மெண்ட் தலைமை நிர்வாகி  அயிவின் லிலேசன் அவர்கள் இந்த கருத்தரங்கில் ஏழு நாட்டின் முக்கிய கல்வி மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை மிகவும் ஆழமாக பதிவிட்டுள்ளதாகவும் இதுபோன்ற நிகழ்சிகள் சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார்.

இந்தக் கருத்தரங்கின் துவக்கத்தில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக மனித, அறிவியல் மற்றும் மேலாண்மை புல முதன்மையர் முனைவர் விஜயலட்சுமி தலைமையுரையாற்றினார். ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் இந்த இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்றார். இறுதியாக சைல்டுலைன் மய்ய நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞானராஜ் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் ஆறு நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் - பயன் பெற்றனர்.

Comments