தான்சானியாவின் முதல் பெண் அதிபருக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து

 வாசிங்டன், மார்ச் 22 தான்சானியாவின் முதல் பெண் அதிபருக்கு, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 2015ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் ஜான் மாகுபுலி (வயது 61). இவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இருதய நோய் காரணமாக கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி, பதவியில் இருக்கும்போது அதிபர் இறந்துவிட்டால் துணை அதிபர், அதிபர் பதவியை ஏற்பார். அதன்படி அந்த நாட்டின் துணை அதிபரான சமியா சுலுகு ஹசன், கடந்த 19 ஆம் தேதி தான்சானியாவின் 6ஆவது அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தான்சானியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

டார் எஸ் சலாம் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சமியா சுலுகு ஹசன்,  நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பேன் என்று உறுதியளித்து பதவியேற்று கொண்டார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கமலா ஹாரிஸ், தான்சானியாவின் புதிய பெண் அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மலேசியாவுடனான தூதரக உறவுகளை

துண்டிப்பதாக வடகொரியா அறிவிப்பு

பியாங்யாங், மார்ச் 22 மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம் என வடகொரியா தெரிவித்துள்ளது.

மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா, அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக் காவுக்கு நாடு கடத்த மலேசிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஏற்கெனவே அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த சம்ப வத்தின் மூலம் கடும் கோபமடைந்த வட கொரியா மலேசியா வுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமான கட்டுக்கதை. எங்கள் அரசின் பிரதான எதிரியால் திட்டமிடப்பட்ட சதி. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரி யாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments