நோபல் பரிசு பெற்ற பகுத்தறிவாளர் திருமதி ஜேன் ஆடம்ஸ்

பகுத்தறிவுப் பாசறையில் புகுந்தவனா? உடனே அவனைக் கண்டதுண்டமாக வெட்டு; கழுவிலே ஏற்று; காராகிருகத்திலே தள்ளு... என்று கடுமையான - கொடுமையான தண்டனைகளைத் தாராளமாக அள்ளி வழங்கிய உலகத்தைத்தான் நாம் பலப்பலமுறை வரலாற்றில் சந்தித்திருக்கிறோம்.

ஆனால், பகுத்தறிவாளர்களுக்குப் பட்டம் வழங்கி பதவிகளை அளித்து, பரிசுகளையும் விருதுகளையும் குவித்ததாகவும் சில வரலாற்றுப் புதுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதிலே ஒன்றுதான் திருமதி ஜேன் ஆடம்ஸ் வரலாறு. அவர் பெற்றது வெறும் பரிசல்ல; உலகில் உச்சாணிப் பரிசான நோபல் பரிசு.

புதிய சமுதாயம் ஒன்றைக் காணவேண்டும் என்பதற்காக தமது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனேயே அய்ரோப்பா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்தார். 1860-இல் பிறந்த இவர் தமது 22, 23, 25 வயதுகளில் இந்த நேரடிக் கல்வியைப் பெற்றார்.

பின்னர் நேராக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச்சென்று புதிய சமுதாயத்தைப் பற்றிய தமது கண்ணோட்டங்களை நடைமுறையில் நிறுவிக்காட்ட வசதியாக பள்ளி ஒன்றை நிறுவினார். அது பகுத்தறிவுப் பாசறையாகி அறிவுலகக் கோட்டையாக அமைந்தது.

இத்தகைய பகுத்தறிவு இயக்கம் வெற்றிபெற வேண்டுமானால் உலகில் போர் ஒழிந்து அமைதி நிலவவேண்டும் என்று விரைவில் கண்டு கொண்டார் அம்மையார். எனவே, விடுதலைக்கும் சமாதானத்துக்குமான பன்னாட்டுப் பெண்கள் கழகத்தை (Women’s international league for peace and freedom)நிறுவினார்.

1931-ஆம் ஆண்டு அம்மையாருக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது அப்போது பலருக்குத் தெரியாது அவர் எத்தனை தீவிரமான பகுத்தறிவாளர் என்று!

தமது தந்தை வழியாக இவர் பகுத்தறிவுச் சிந்தனையைப் பெற்றார். மதவாதிகள் இவரிடம் போய் மாதா கோயிலுக்கு வரும்படி அழைத்தால் வரமாட்டேன் என்று மறுக்க மாட்டார். வருகிறேன்! ஆனால் நான் மதத்தை ஒரு தொழிற்சங்கம் போலவே கருதுகிறேன் என்பார்.

சற்று விளக்குங்கள் என்றால் தொழிலாளி தனக்கு ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால் தொழிற்சங்கத்தில் சேர்வது போலவே ஏதாவது தேவைப்படுகிறவர்கள் தான் மதச் சபையில் உறுப்பினராக வேண்டும் என்பார்.

கடைசி வரை அவர் எந்த மதச் சபைகளிலும் உறுப்பினரானதில்லை என்றாலும் 1937இல் அவர் காலமான போது சிகாகோ நகரமே கண்ணீர் வடித்தது.

Comments