தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் விலைவாசி உயர்வு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரது மனுக்கள் ஏற்கப்பட்டு இனி ஏப்ரல் 6 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றோம், பரப்புரைகள் அனல் பறக்கின்றன. பாஜகவும் அவர்களோடு மூழ்க காத்திருக்கும் உள்ளூர் கூட்டணி கட்சிகளும் எந்தக் கனவில் மிதக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்தியாவில் கோவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்க மக்கள் சுமார் 3.2 கோடி மக்கள்  - ஏழை குடிகளாக மாறியுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

பெருகிவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பயனாளிகள் பதிவில் இருந்து நாட்டு மக்களின் நிதி நிலைமை தெரியும். மக்களின் அன்றாட தேவைகளை இதுநாள் வரை கையில் இருந்தும் சேமிப்பில் இருந்தும், வீட்டில் இருந்த தங்கம் முதலியனவற்றைக் கொண்டும் பூர்த்தி செய்து வந்தனர். இந்த சேமிப்புகளும், கரைந்து நாளாயிற்று.

வளர்ச்சிப் பாதை மற்றும் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் பேசியவர்கள் அன்றாடம் மக்கள் படும் துயரை கண்டு கலங்குவதாக தெரியவில்லை. இத்தகைய பொருளாதார சிக்கல்கள் நாட்டிற்கோ, உலகிற்கோ புதிதல்ல எனினும், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிது. அவர்கள் எதார்த்ததை புரிந்தவர்களாகவும் தெரியவில்லை, இருக்கும் சூழ்நிலையை கையாளும் திறனும் அவர்களிடம் இல்லை.

இந்திய தொழில் அதிபர்களும், பெரும் பணக்கார மக்களுமே இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வல்லமை படைத்தவர்கள். ஆனால், மக்களுக்கு இந்த அரசின் மீதான நம்பிக்கை இன்மையே பெரிய சவாலாக உள்ளது.  அரசின் நிதி நிலைமை குறித்தான திறமையின் மீது நம்பிக்கை அற்ற மக்களும், தொழில் முனைவோரும் தம்மீதும் நம்பிக்கையற்று முயற்சிகளை கைவிடுகிறார்கள். இதன் தாக்கம் தான் நாடு முழுக்க 10,133 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூடல் அறிவிப்பானது. இது, அரசின் கம்பெனிகளுக்கான அமைச்சகத்தின் புள்ளி விவரம் மட்டுமே.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி, நாடு முழுக்க 25 லட்சத்திற்கும் அதிகமான சிறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட இந்த நிறுவனங்களால் தொடர் சங்கிலிகளாக பாதிக்கப்படும் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், சார்பு தொழில்கள் என்று இதன் தாக்கம் சொல்லி மாளாது. நடப்பாண்டில், 50 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மேலும் மூடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள். இதன் தாக்கம் நம் கற்பனைக்கும் எட்டாத விபரீதங்களை உருவாக்கும். அதை தாங்கும் சக்தி மக்களிடம் இருந்து கைநழுவி போய் வெகுகாலம் ஆயிற்று.

ஆனால் அரசோ, தனக்கு சாதகமான  வரி வசூலிப்பு மற்றும் வரி வசூலிப்பு சாதனைகளை கூறி, ஒரு கற்பனை உலகை நிர்மானிக்க நினைக்கிறார்கள். சாதனை புள்ளிவிவரங்கள் , ஏழை மக்களின் பசியை போக்கமுடியாது என்பதை உணர மறுக்கிறார்கள். பசியின் தாக்கம் வீதிகளில் எதிரொலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்னதாக, பசி போக்கும் மருந்தை உணவாக, பணமாக மக்கள் கையில் சேர்ப்பது அரசின் கடமையாகும்.

இந்த கடுமையான நிதி நெருக்கடி சூழ்நிலையில்தான் தமிழக தேர்தல் களம் அமையவிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கடந்து, பரிசுப் பொருட்களை கடந்து, ஜாதி, மத பேதங்களை கடந்த பசி, இந்த தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்தார்களா என்பதை நாம் அறியவில்லை. பசி, வறுமையின் தாக்கம் குறித்தான புரிதலோடு களம் காணும் கட்சிகள் மட்டுமே இத்தேர்தலில் வெல்லும் என்பது திண்ணம். தேர்தல் முடிவுகளாவது, மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

வறுமையின் கோரப் பிடியை மேலும் இறுக்குவதாக, விலைவாசி உயர்வு இருக்கிறது. ஏழை மக்களால், பல அத்தியாவசிய பொருட்களின் விலையை வாசிக்க மட்டுமே முடிகிறது. கடுமையான எரிபொருள் விலை யேற்றம், அதன் தொடர்ச்சியாக பல பொருட்களின் விலையேற்றமாக மாறியது .அது, மக்களின் வாங்கும் திறனை வெகுவாக பாதித்தது. வாங்குவது குறைவதால் பொருட்களின் தேவைகளும் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக உற்பத்தி குறைந்தது. உற்பத்திக் குறைவால் வேலை குறைப்பு, ஊதிய குறைப்பு என்று ஒரு சுழற்சியாக நிதி நிலைமை சிக்கலில் சிக்கியுள்ளது.

வறுமையும், கடுமையான விலைவாசி உயர்வும், தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதை தமிழக வாக்காளர்கள் வாக்கு சீட்டுகளால் தெளிவாக தீர்ப்பளிப்பார்கள். ஏனெனில் வறுமையும், பசியும், மக்களை ஜாதி, மத பேதங்களை கடந்து அன்பளிப்புகளையும், பரிசுப் பொருட்களையும் கடந்து, நல்லதோர் தீர்ப்பை அளிக்க செய்யும். வறுமைக்கும் பசிக்கும் பலியான சாம்ராஜியங்கள் ஏராளம், சரித்திரம் அதற்கு சாட்சி.

Comments