கால வெள்ளத்தில் அழிந்திடாச் சாதனை தந்தை பெரியார் போட்ட விதை “முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்” புத்தகம் - அண்ணாவின் எட்டு உரைகள்

- முனைவர் பேராசிரியர் -

..மங்களமுருகேசன்

காலவெள்ளத்தில் அழிந்திடாச் சாதனை என்று கூறுவது திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்து வெளியிட்டுள்ளமுறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்எனும் புதிய வெளியீடான அண்ணாவின் எட்டு உரைகள் அடங்கிய புத்தகத்தைத்தான்.

அறிஞர் அண்ணா முதல்வரான 6.3.1967அய் ஒட்டி 54 ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த புத்தகம். அதன் சிறப்புக் கருதியே தனி வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்தப் புத்தகம் தமிழர் தலைவர் குறிப்பிட்டதுபோல் ஒரு POLITICAL DOCUMENT! ஆம், அரசியல் ஆவணம்Ideological fight - கொள்கைப் போர்.

எல்லாவற்றிற்கும் மேல் இது மேடையில் முழங்கிய மெல்லிய பூங்காற்றோ, வெற்று ஆரவார மேடைப் பேச்சோ அல்ல. மாலை நேரப்பள்ளியாம் சொற்பொழிவில் அண்ணா நடத்திச் சென்ற கொள்கைப் பாடப் புத்தகம்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தந்தை பெரியார் போட்ட விதை!

திராவிடர் கழகம் அறிஞர் அண்ணாவின் 17 நூல்களை இதுவரை வெளியிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் முதன்மைப் படைப்பாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டதுபோல் Political capsule..

இப்புத்தகத்தினையே தமிழர் தலைவரின் காலவெள்ளத்தில் அழிந்திடாத சாதனை என்று உரக்கச் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்ல, தாய் வழி வந்த தங்கங்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவினர், அதிமுகவினர், மதிமுகவினர் இல்லங்களில் இருக்கவேண்டிய அரசியல் ஆவணம். அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு இப்புத்தகத்தைக் கொடுத்துத் தந்தை பெரியார் போட்ட விதையை எப்படித் தமிழ்த் தாயின் தலைமகன் அண்ணா முளைக்கச் செய்துள்ளார் என எடுத்துக் கூற வேண்டும்.

இப்புத்தகம் ஒரு கருவூலம். எத்தனை எத்தனையோ அண்ணாவின் எழுத்தோவியங்களைப் படித்திருக்கிறோம். மேடைப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறோம், கைத்தட்டி மசிழ்ந்திருக் கிறோம்.  அதுமட்டுமல்ல-

மதுரைக் கல்லூரியில் அக்கல்லூரியின் செயலாளர் என்ற முறையில் நானும், துணைச் செயலாளராக உயர் கல்வி மேனாள் மன்றத் துணைத் தலைவராக உயர்ந்த நண்பர் .ராமசாமியும் அண்ணாவை அழைத்து வந்து மதுரைக் கல்லூரியில் பேசச் செய்து அருகிருந்து கேட்கும் பேறுபெற்றோம்.

125 ஆண்டுக்கால மதுரைக் கல்லூரி வரலாற்றில் அண்ணா வந்தது அந்த ஒருமுறை மட்டுமே.

ஆயினும் இந்த எட்டு உரைகள் தனித்த இயல்புடையன. ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய தமிழர் தலைவரின் பொறுக்கி எடுத்த மதிப்புமிக்க மணிகள்.

அப்படி என்னதான் இந்த அளவிற்கு உயர்த்திப் பேச, எழுதவேண்டிய அளவிற்கு என்ன இருக்கிறது?

1) முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டு உரை (துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுத் தலைமை உரை) 24, 25.8.1937.

2) சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப் பூர்வமாக்குவோம். (ஜீவா இல்லத் திருமணத்தில் ஆற்றிய உரை) 12.6.1967

3) இந்து திருமண (தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வரைவு 18.7.1967. (சுயமரியாதை திருமண சட்ட முன்வரைவு விவாதத்தில் ஆற்றிய உரை) 18.7.1967

4) தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் (நாகரசம்பட்டி பள்ளிக் கட்டடத் திறப்பு விழா உரை) 10.12.1967

5) மய்ய அரசுக்குப் பலம் எதற்காக? (கொத்தவால்சாவடி, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட உரை) 28.7.1968

6) இந்திக்கு இங்கு இடமில்லை (இரு மொழிக் கொள்கை சட்ட முன்வரைவின் விவாதத்தில் ஆற்றிய உரை) 23.1.1968

7) தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம், (சட்டமன்ற விவாத உரை) 18.7.1968

8) முறியடிக்கப்பட முடியாத முப்பெரும் சாதனைகள் (பாலர் அரங்கில் (கலைவாணர் அரங்கில்) தமிழ்நாடு பெயர் மாற்ற வெற்றி விழாக் கூட்ட உரை) 1.12.1968

இந்த எட்டு உரைகளையும் ஏன் அரசியல் ஆவணம், தந்தை பெரியார் போட்ட விதை என்பதற்கான நாம் காணும் சான்றுகளைத் தொட்டுக் காட்டுவோம். இன்று மத்தியில் பா... அரசு செய்துவரும் அழிச்சாட்டல்கள், அக்கிரமங்கள், தமிழ்ப் பண்பாட்டுச் சீரழிப்பு, படையெடுப்பு ஆகியவற்றிற்கு 54 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா வெளியிட்ட எச்சரிக்கை மணியோசை போல் பொருத்தமாக இருப்பது தான். தேர்தல் வரும் இந்த வேளையில் ஏன் திமுகவிற்கு, திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கூறுவது போல் அமைகிறது.

1937இல் முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டு உரையில் கூறுகிறார், “எந்த ஆட்சி வந்தாலும் சரி தமிழர் காப்பாற்றிக்கொள்ள வேண்டியவை சில உள்ளன. அவர்களுக்கு எந்தக் கட்சி மீது அபிமானம் இருப்பினும் தமிழரின் ஜீவநாடி தளர விடலாமா? அந்த ஜீவநாடிகளுக்கு ஆபத்து வரக்கூடுமா? காலம் மாறுகிறதல்லவா? புதிய ஆபத்துக்கள் வரலாம். ஆகவே கீழ்க்கண்டவைகளைத் தமிழ் நாட்டவர் எப்பாடு பட்டாலும் காப்பாற்றியே தீரவேண்டும்"

"பண பலமின்றி செல்வாக்கின்றி ஓர் இயக்கம் விஷமிகளின் ஆர்ப்பாட்டத்தையும், முதலாளிகளின் எதிர்ப்பையும், கங்காணிகளின் கிறுக்கையும் சமாளித்தே பத்து ஆண்டுகளில் சமுதாயத்திலும், சரித்திரத்திலும் மதிப்பான ஓர் இடம் பெற்ற தென்றால் அது நமது இயக்கமே என்பதில் யாருக்கும் சந்தேகமேயிராது என்று நம்புகிறேன்என்று அன்று சொன்னது தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்திற்கு இன்றுவரை கச்சிதமாகப் பொருந்துகிறது.

அண்ணா இன்று நம் முன்னே இப்போதும் நின்று முழங்கும் வைர வரிகளாக விளங்குகின்றவை இவை.

நிர்வாண இயக்கம் முதற்கொண்டு பொதுவுடைமை வரையிலே நாம் போதிக்காத தீவிரக் கொள்கைகளே கிடையாது. போதனையுடன் மட்டும் நாம் நின்றுவிடவில்லை. நடைமுறையிலே பலப்பல செய்து காட்டினோம். ஜாதி விலங்குகளைத் தகர்த்தோம். மத ஆபாசங்களை அலசினோம். புராணக் குப்பைகளைக் கொளுத்தினோம்.

மாதரைச் சிறை மீட்டோம். விடுதலை முரசு கொட்டினோம். படை திரண்டெழுந்து போர் பல புரிந்தோம். வெற்றியாவும் கண்டோம். “தமிழா! எழு! விழி, மனிதனென்பதை உணர்ந்துகொள்உன்னைத் தந்திர வெளியில் போக ஒட்டாது தடுக்கும்சனியன்களை'  விரட்டு எனக் கூறினோம். மனிதத் தத்துவத்தை மறைத்து வந்த முகம் வெளுக்க ஆரம்பித்தது. இவ்வளவு அரும்பெரும் பணிகளாற்றி நமது இயக்கம் எதிர்காலத்திலும் சளைக்காது உழைக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. அதனிடத்திலே தோழர்களைக் கூவி அழைக்கும் சக்தி இருக்கிறது. அதனின்று எந்தப் பகுத்தறிவு வாதியும் தப்ப முடியாது. அதனிடத்திலே விஷமிகளை விரட்டும் சக்தி இருக்கிறது. ஆகவே அதனை அடக்க அழிக்க ஒருவராலும் முடியாது

நத்திப்பிழைக்கும் சிலரை, நம்மை அடிமை செய்வோரின் கால்களில் விழுந்து கிடக்கும் பார்ப்பனரல்லாதாரை, சூத்திரரைப் பற்றிய அண்ணாவின் படப்பிடிப்பு இது.

போலிகள் மருண்டு விடக்கூடும். சமய சஞ்சீவிகள் கூடுவிட்டுக் கூடு பாயக்கூடும். மாலை வேண்டுவோர்புதிய தேவதைகளைப்பூஜிக்கத் தொடங்குவர். ஆதாயம் கிடைக்கப் பெறாதவர்வேறு நாயகனை அண்டிப்பிழைக்க எண்ணுவர். ஆனால் இயக்கத்தில் இரண்டறக் கலந்தவர் வேறு இடம் நாடார். வேறு இடங்களில் இருந்து கொடுமைகளைக் கண்டு சகியாது குமுறிக் கொண்டிருக்கும் பலரை இங்கு இழுக்கவே முற்படுவர். நாம் ஒழிக்க விரும்பும் ஆதிக்கம் சாமானியமானதல்ல. அந்த வகுப்பார் தமது நிலைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள சமூகத்தின் ஜீவநாடிகள் அவ்வளவையும் பிடித்துக் கொண்டே நம்மை ஆட்டி வைக்கின்றனர்.

(தொடரும்....)

Comments