திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக திராவிடர் கழகம் திகழும் என்கிற அன்னையாரின்அன்றைய உறுதிமொழியைப் பின்பற்றுவோம்!

சென்னை, மார்ச் 11 நெருக்கடி நிலை காலத்தில் அன்றைய ஆளுநரிடம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக திராவிடர் கழகம் திகழும் என்று  அன்னை மணியம்மையார் அளித்த அன்றைய உறுதிமொழியைப் பின்பற்று வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.

அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான நேற்று (10.3.2021) அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

இந்தியாவையே உலுக்கக் கூடிய நிகழ்வு

இராவண லீலா!

அன்னை மணியம்மையார் அவர்களுடைய 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று, அவர் சந்தித்த களங்கள் இன்னமும் நமக்குப் பசுமையான களங்களாகத்தான் நாட்டில் இருந்து கொண்டி ருக்கின்றன.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, இயக்கத்திற்கு அய்ந்தாண்டுகள் அவர்கள் தலைமை தாங்கியபொழுது, இந்தியாவையே உலுக்கக் கூடிய மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சியாக, இராவண லீலா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அது ஏதோ ஒரு விழாவல்ல; மாறாக, பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிடத்தைக் காப்பாற்றக் கூடிய மிகப்பெரிய ஒரு விழாவாக அமைந்தது.

மத்தியில் மதவெறி ஆட்சி

அதுபோல, இப்பொழுது பண்பாட்டுப் படை யெடுப்பு மீண்டும் உக்கிரமாக - வேகமாக மத்தியிலே மதவெறி ஆட்சி அமைந்திருக்கின்றது என்கிற ஒரே காரணத்தினால், பாய்ந்து வரக்கூடிய சூழலில் - தமிழ் மண்ணிலும் காலூன்றக் கூடிய வேகத்தை அது காட்டிக் கொண்டிருக்கிறது.

நெருக்கடி நிலை காலத்தை திராவிட முன் னேற்றக் கழகம் எவ்வாறு எதிர்த்ததோ, கலைஞர் அவர்கள் எப்படி எதிர்த்தாரோ அதுபோலவே, திராவிடர் கழகமும் களத்தில் நின்றது. அதன் காரணமாக, கடுமையான விலையைக் கொடுத்தது. எங்களைப் போன்றவர்கள் ஓராண்டு மிசா சட்டத் தில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் கொடு மைப்படுத்தப்பட்ட ஒரு சூழலைப் பெற்றாலும்கூட, அதனை முறியடித்துக் காட்டக்கூடிய வன்மை அன்னை மணியம்மையார் அவர்களுடைய தலை மைக்கு இருந்ததைப் போலவே,

திராவிடத்தினுடைய வெற்றி

உறுதி செய்யப்பட்ட ஒன்று!

நெருக்கடி  நிலை  காலத்தைவிட, இப்பொழுது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை காலம் போன்று, மனித உரிமைகளைப் பறிப்பதும், மதவெறியைப் பரப்புவதும், சமூகநீதியை சாய்ப்பதுமாக இருக்கக் கூடியவைகளை அதே களத்தில் கண்டு, அன்றைக்கு எப்படி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, திரா விடர் கழகம் உறுதுணையாக இருந்ததோ - அந்த நிலையிலிருந்து நாங்கள் நீங்க மாட்டோம் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் எப்படி ஆளுநரிடமே உறுதிமொழி கூறிவிட்டு, வெளியேறி னார்களோ  அதேபோலத்தான், இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி என்பது மதச்சார்பற்ற, முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட ஒரு லட்சியக் கூட்டணி என்ற காரணத்தினாலும், மதவெறியையும், சமூகநீதி ஒழிப்பையும் தடுக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் எந்தப் பாதையை உருவாக்கினார்களோ - அந்த லட்சியத்தோடுதிராவிடம் வெல்லும்!' திராவிடத்தினுடைய வெற்றி என்பது உறுதி செய் யப்பட்ட ஒன்று என்பதற்கான சூளுரை நாளாக இந்நாளை கொள்ளுகிறோம். வாழ்க பெரியார்! வாழ்க அன்னை மணியம் மையார்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments