ஹாங்காங்கின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் தீர்மானம்

 சீன நாடாளுமன்றம் ஒப்புதல்

பெய்ஜிங், மார்ச் 14  ஹாங்காங்கின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்றதால், ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. தொடர்ந்து ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக சீனா அறிவித் துள்ளது. சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இதுதொடர்பான வரைவு திட்டத்தில், தேசபக்தர்கள் மட்டுமே ஹாங்காங் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வது; ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் சீன ஆதரவு தேர்தல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது; அந்தக் குழுவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக் கையை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ஹாங்காங்கின் தேர்தல் முறையை மாற்றியமைக்க வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு சீன நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்தது. இது ஹாங்காங் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் என்று கருதப்படுகிறது.

 குவாட்  உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில்மீண்டும் நடைபெறும் என தகவல்

வாசிங்டன், மார்ச் 14 குவாட்  உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு குவாட் ஆகும்.  குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பருவநிலை மாற்றம், கரோனா சூழல்  உள்ளிட்டவை குறித்து  ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், குவாட் நாடுகளின் உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்று ஆலோசிப்பார்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

குவாட்  உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments