உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்

அய்.நா. வேதனை

வாசிங்டன், மார்ச் 16 உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் பட்டினி யால் இறக்கும் அபாயம் இருப்பதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள் ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் அய்க்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குத்தரேஸ் பேசும்போது, 

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை அடைவார்கள்.

கரோனா மற்றும் கால நிலை மாற்றம் வறுமையை தீவிரப்படுத்தியுள்ளது. நீங்கள் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பஞ்சமும், பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை. அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் கட்சிகளின்

தலைவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு

கொழும்பு, மார்ச் 16 இலங்கையில் தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தூதர் சந்தித்து பேசினார்.

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 3 நாள் பயணமாக கடந்த 11ஆம் தேதி சென்றார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஏராளமான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

குறிப்பாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஈழ மக்களின் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்களின் முன்னணி போன்ற கட்சிகளின் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்.

அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம் சிறுபான்மை தமிழ் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை அடைவது அந்த நாட்டின் அமைதி, அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் வலிமைக்கு பங்களிக்கும் என்று கோபால் பாக்லே வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தியாவின் மானிய உதவி திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் அதிக பொருளாதார முதலீடு, கூடுதல் திட்டங்களை நிறைவேற்றுமாறு தமிழ் தலைவர்கள் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

Comments