இதுதான் இந்து ராஷ்டிரம்!

உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரம் அருகில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களில் பாங்கு ஒலி எனப்படும் தொழுகைக்கான அழைப்பை தடை செய்து அலகாபாத் மாவட்ட காவல் ஆணையர் திடீரென்று உத்தரவிட்டுள்ளார்அதே போல் காசியாபாத் மாநகராட்சி ஆணையர் நகரில் இறைச்சி விற்பனை செய்ய தடைவிதித்துள்ளார். மேலும் புதிய இறைச்சிக் கடை துவங்குபவர்களுக்கு உரிமம் பெற கட்டணத்தை 200 மடங்கு உயர்த்தியுள்ளார்.

 உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது,  சாமியார் ஆதித்யநாத் தனது அரசியல் வாழ்க்கையை இஸ்லாமிய எதிர்ப்பிலிருந்து துவங்கினார். இவர் மீது மதக் கலவரத்தைத் தூண்டியது தொடர்பான பலவழக்குகள் உள்ளன. ஆதித்யநாத் "யுவவாகினி" என்ற ஒரு அமைப்பை வைத்துள்ளார். இந்த அமைப்பின் வேலையே இஸ்லாமியர்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகளை செய்வதுதான். இந்த நிலையில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகி, பிறகு 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி ஏற்றார்.

 அவர் பதவி ஏற்றது முதல் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது,

 இந்த நிலையில் முதல்வரின் உத்தரவிற்கிணங்க அவரது அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் பல்வேறு உயர்பதவியில் மாநிலத்தின் பல பகுதிகளில் அமர்த்தப் பட்டுவந்தனர். இதே போல் அலகாபாத் காவல்துறை ஆணையர் முதல்வருக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காட்ட அலகாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மசூதிகளில் பாங்கு ஒலி எனப்படும் தொழுகைக்கான அழைப்பை தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். அதுவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், உத்தரவை மீறி பாங்கு ஒலித்தால் அந்த மசூதி நிர்வாகத்தின் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். விரைவில் ரமலான் நோன்பு நெருங்கும் வேளையில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள அலகாபாத் நகரில் நோன்பு திறக்கவும், நோன்பை முடிக்கவும் மசூதிகளில் இருந்து அழைப்பு விடுப்பார்கள். இந்த நிலையில் திட்டமிட்டே அலகாபாத் நகர காவல் ஆணையர் கே.பி.சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, பாங்கு ஓசையால் கல்வி கற்கும் மாணவர்களின் சிந்தனை திசை திருப்பப் படுவதாக அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தரின் புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறினார்; இது தொடர்பாக மாவட்ட நீதிபதி, காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளர் ஆகியேருக்கு கடிதம் ஒன்றையும் காவல்துறை தலைவர் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அலகாபாத் உள்ளிட்ட 4 அண்டை மாவட்டங்களில் மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.  அப்படி மீறி பாங்கு ஓசை எழுப்பினால் குற்றவியல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அதே போல் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாநகராட்சி ஆணையர் நகரில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்துள்ளார். மேலும் இந்துக்களின் விழாக்களுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார். இறைச்சி விற்பனைக்கான உரிமத்தொகையை 200 மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் புதிய இறைச்சிக்கடைகளை யாரும் திறக்க முடியாதவாறு திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். வட மாநிலங்களில் புதன்கிழமையைத் தவிர அனைத்து நாட்களுமே விரத நாட்கள் ஆகும், திங்கள் சோம விரதம், செவ்வாய் மங்கள விரதம், வியாழன் குரு விரதம், வெள்ளி, சனி, லட்சுமி, அனுமன் விரதம் ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாள் என்று கூறி கடைகளை மூடச்சொல்லி உள்ளூர் இந்து அமைப்பினர் மிரட்டி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் அவர்களது மிரட்டலுக்கு மேலும் தூபம் போடும் வகையில் இறைச்சிக்கடைகளை மூடியும், புதிய கடைகளைத் திறக்காமல் இருக்கும்படி கட்டணங்களை உயர்த்தியும் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்து ராஷ்டிரம் வந்தால் அந்த ஆட்சி எப்படி நடைபெறும் என்பதற்கு .பி.யில் உள்ள பா... ஆட்சியே சாட்சியமாகும். பல மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் இந்தக் கால கட்டத்தில் சிறுபான்மையினரும் மதச் சார்பின்மைக் கொள்கையில் அக்கறை உள்ளவர்களும் இதனைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

மார்கழி மாதங்களில் இந்துக் கோயில்களில் விடியற்காலை முதலே ஒலி பெருக்கியை வைத்து அலறச் செய்கிறார்களே -  அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாகும்.

Comments