திராவிடர் கழகத் தலைவர் பேசிய பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை,மார்ச் 27- கோபி தொகுதி நம்பியூரில் நடைபெற்ற (25.3.2021) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு உரையாற்றினார். அக்கூட்டத்தில் கல் வீசப்பட்டது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.வி. மணிமாறனை ஆதரித்து  நம்பியூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று பேசியுள்ளார்.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்று திடீரென பொதுக் கூட்ட மேடையை நோக்கி கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் மேடையின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த திராவிடர் கழக இளைஞரணி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் காயமடைந்துள்ளார். இத் தகைய வன்முறை செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப் பதுடன் அந்தக் கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

அத்துடன் தேர்தல் கூட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம்.

Comments