மீண்டும் கரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது; அதற்காக நம்முடைய பணிகளை விட்டுவிட முடியாது

நோயினால் சாவதைவிட - போராட்டக் களத்தில் இறந்தேன் என்று  சொன்னால் நல்லது!

கும்பகோணம் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை

கும்பகோணம், மார்ச் 18  மீண்டும் கரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்காக நம் முடைய பணிகளை விட்டுவிட முடியாது; நோயினால் சாவதைவிட - போராட்டக் களத்தில் இறந்தேன்என்று சொன்னால் நல்லது  என்று நெகிழ்ச்சியுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதல் உரையாற்றினார்.

அவரது வழிகாட்டுதல் உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘ஏங்க, அறிவுக்கரசு  நல்லவர்தாங்க - உங்களைப் பற்றி மிக மோசமாகப் பேசுகிறார்'' என்று யாராவது சொன்னால், உடனே நான் நம்பி விடுவதா?

‘‘அப்படிங்களா? பேசட்டும் அவர்; அப்படி அவர் பேசினார் என்றால் அனுபவத்தோடுதான் பேசியிருப் பார்; உண்மையைத்தான் பேசியிருப்பார்'' என்று நான் சொன்னேன் என்றால், அடுத்ததாக அவன் வாய் திறக்க மாட்டான்.

அப்படியில்லாமல், ‘‘அப்படியா? சரி இன்னும் ஏதாவது செய்தி  தெரிந்தால் வந்து சொல்லுங்கள்'' என்று நான் சொன்னால், அதனால் நாம் பலகீன மடைந்துவிடுவோம்.

நான் உதாரணத்திற்காகத்தான் அறிவுக்கரசு பெய ரைச் சொன்னேன்;  யாரும் தவறாக எண்ணவேண்டாம்.

மேலும் அந்த வார ஏட்டில்,

பா...வின் திட்டங்களை தி.மு.. முறியடிக்கும்!

‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு. வெற்றி பெறும் என்று மத்திய உளவுத்துறை ஏற்கெனவே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதே நேரம், .தி.மு. ஏற்கெனவே இரண்டாக உடைந்திருக்கிறது. இரண்டு அணிகள் இணைப்புக்கு நாங்கள் இப்போது ஆதரவு கொடுத்தாலும், சசிகலாவின் கை .தி.மு.-வில் ஓங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சசிகலா வந்தால், வலுவான தலை மையாக அவர் மாறிவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனாலேயே, சசிகலாவை இந்தத் தேர் தலில் ஒதுங்கியிருக்க பா.. அழுத்தம் கொடுத்தது.

தேர்தலில் .தி.மு. தோல்வியைத் தழுவினால் கட்சிக்குள் கண்டிப்பாகக் குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தைவைத்து சசிகலா கட்சிக்குள் மீண்டும் நுழைய நினைக்கிறார். இந்தத் திட்டமும் பா..-வுக் குத் தெரியாமல் இல்லை. அப்படி சசிகலா ரீ-என்ட்ரி கொடுத்தால், அதன் பிறகு பலமான நெருக்கடியை அவர் சந்திப்பார். .தி.மு. தோல்வியடைந்து பலவீனப்படும் நேரத்தில், மேலும் அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை பா.. செய்யும்.

மற்றொருபுறம், இன்றைக்கு எங்களைத் தீவிரமாக எதிர்க்கும் தி.மு.., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் வழிக்கு வந்துவிடும். அதற்கான திட்டங்கள் ஏற்கெனவே தீட்டப்பட்டுவிட்டன. இப்போதும் தி.மு. தலைமைக்கு நெருக்கமானவர்கள் எங்கள் டில்லி தலைமையுடன் தொடர்பில்தான் இருக் கிறார்கள். .தி.மு.-வை  முதலில் வீக் செய்துவிட்டு, அதன் பிறகு தி.மு.-வைக் கையிலெடுப்போம்.

இன்றைக்கு திராவிட அரசியலை முன்வைத்து தி.மு. பிரசாரம் செய்கிறது. அய்ம்பது வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே திராவிடம் குறித்த புரிதல் இருக்கும். இன்றைய தமிழக இளைஞர்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால், இளைஞர்களைக் குறிவைத்தே எங்கள் பிரச்சாரம் இருக்கும். ஏற்கெனவே, தமிழகம் முழு வதும் இளைஞர்களை எங்கள் பக்கம் கொண்டுவரும் வேலையைச் சத்தமில்லாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செய்துவருகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் செல்வாக்கானவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் ஏதாவது ஒரு புராஜெக்ட்டைக் கொடுத்துவருகிறோம். அந்த வகையில் தி.மு. ஆட்களை எங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிடுவோம்.

தேர்தலுக்குப் பிறகு .தி.மு.-வை வீக் செய்துவிட்டால், அடுத்த கட்டமாக அந்த இடத்தை நிரப்பும் வேலையை பா.. செய்யும். அதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.. - தி.மு. இடையில் நேரடிப் போட்டி ஏற்படும். அப்போது தி.மு.-வை எப்படி பலவீனப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். இப்படியான தொலைநோக்குத் திட்டத்துக்காக இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.’’

என்பதுதான் அவர்களுடைய திட்டம். இந்தத் திட்டங்களை தி.மு.. முறியடிக்கும்.

 உறவுக்குக் கைகொடுப்போம்;

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

செய்தியாளர்கள் என்னிடம் கேட்டார்கள், மாநில அரசு, மத்திய அரசுடன் ஒத்துப் போனால் தானே, எல்லாம் சரியாக இருக்கும் என்று கேட்டார்கள்.

ஒரு மாநில அரசு, மத்திய அரசுடன் ஒத்துப் போவது தவறல்ல; உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்.

ஒத்துப் போவது என்பது வேறு;

ஒத்துப் பாடுவது என்பது வேறு.

இந்த இரண்டையும் பிரித்துப் பாருங்கள் என்று செய்தியாளர்களிடம் சொன்னேன்.

நம்முடைய இயக்கத்தில் இருக்கின்ற பொதுச் செயலாளர்  ஜெயக்குமாராகட்டும்; அல்லது மாநில அமைப்பாளராக இருக்கக்கூடிய குணசேகரனா கட்டும்; இவர்கள் இரண்டு பேரும் அய்யாவைப் பார்த்து இயக்கத்தில் வந்தவர்கள் அல்ல. இவர்கள் 50 வயதைத் தாண்டிவிட்டார்கள்.

இதற்கு அடுத்தகட்டமாக  இளைஞர்கள், பெரியார் கொள்கையை உணருகிறார்கள் என்றால் அதுதான் மிகவும் முக்கியம்.

அதைவிட, வடநாட்டில் இருக்கின்றவர்கள், பெரியாரையே பார்க்காதவர்கள், ‘‘பெரியார், பெரியார், பெரியார்'' என்கிறார்கள். பெரியாரைப் பற்றிய நூல்களை அதிகமாகப் படிக்கிறார்கள்; பெரியாரைப்பற்றிய சிந்தனைகள்தான் அவர்களிடம் இருக்கிறது

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சொல்வது உண்மையல்ல.

பெரியாருடைய தத்துவத்தை நாம் காப்பாற்றுவது என்பது நம்முடைய அடிப்படையான பணியாகும். அந்த அடிப்படையான பணிக்காகத்தான் நண்பர் களே ஒரு திட்டம்.

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வியூகங்கள்!

ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு. மே 2 ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. எதற்காக ஒரு மாதம் இடைவெளி விடவேண்டும்? மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள்? இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வியூகங்களாகும்.

என்னுடைய உடல்நிலைக் கருதியும், கரோனா தொல்லை கருதியும்  அதிகமாக தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டாம் என்றாலும், நான் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற் கொள்ளவிருக்கிறேன்.

நம்முடைய தலைவர் யார்?

உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்றெல்லாம் நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள்.

ஆனால்,  நம்முடைய தலைவர் யார்? 95 வயது வரையில், மூத்திரச் சட்டியை கையில்  தூக்கிக் கொண்டு, தாங்க முடியாத வலியால், இரண்டு பேரை பிடித்துக்கொண்டு கடைசி வரையில் பிரச்சாரம் செய்தார்.

இன்னும் நான் அந்தக் கட்டத்திற்கு வரவில்லையே! அவரிடம் பழகிய நான், எவ்வளவு வேலை செய்ய வேண்டும்! இன்னொருவரைப் பிடித்துக்கொண்டு வரவில்லையே - நான் தவறாகச் சொல்லவில்லை. உடல்நலக் குறைவு யாருக்கு வேண்டுமானாலும் வரும் - நம்முடைய பணியை செய்யவேண்டும்.

நான் வாழ்ந்து கொண்டிருப்பது போனஸ் வாழ்க்கைதான். இங்கே நடைபெறுகின்ற திராவிடர் கழகப் பொதுக்குழு என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந் ததல்லவா!   நடுத்தர வயதுள்ள ஒரு வழக்குரைஞர் நிம்மதி மாவட்டத் தலைவராக இருக்கிறார். அவருக்கு அத்தனை பேரும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். திருநாகேசுவரத்திலிருந்து நன்கொடை கொடுத் தார்கள் என்று விடாமல் தகவல் அளித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

அந்த ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த ஊரில் உள்ளவர்கள் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்; ஆயிரத்தையே நாங்கள் கண்டதில்லை. பெரியாருக்கே 101 காலணா, 1001 பைசாதான் கொடுத்திருக்கிறார்கள், அந்தக் காலத்தில்.

திருநாகேசுவரம் மாஸ்டர் ரமணி

1946 இல், திருநாகேசுவரத்தில் கழகப் பணி செய்த, ஸ்டெண்ட் மாஸ்டர் ரமணியினுடைய பேரன்தான் நம்முடைய நிம்மதி. ரமணி ஒரே ஒரு ஆளாக இருந்து தீவிரமாகப் பணியாற்றியவர்.

திருநாகேசுவரத்திற்கு மாணவர் கழகம் சார்பாக நாங்கள் சென்றோம். அடுத்து கும்பகோணத்தில் மாநாடு; மதுரையில் எரித்துவிட்டார்கள்; அதுபோன்ற காலகட்டத்தில் - திருநாகேசுவரத்தில் முழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். செங்குந்த முதலியார், நெசவுத் தொழிலாளர்கள்.

திராவிட மாணவர்  கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு சாப்பாடு போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்; உணவு விடுதியை மூடுங்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள்.

ஒரு இஸ்லாமிய தோழர் வீட்டில்தான் எனக்கு, தில்லை வில்லாளன் உள்பட நான்கு பேருக்கு சாப்பாடு. நாங்கள் சாப்பிட்டுவிட்டு, மாலையில் கூட்டத்திற்குச் சென்றோம். அங்கே எங்கள்மீது மண்ணை வாரி இறைக்கிறார்கள்; தகராறு.

கல்லெறிந்த ஊரில்  அய்யாவின் சிலை திறந்து வைத்தோம்!

கும்பகோணம் தாராசுரத்திலிருந்து ஜி.என்.சாமி, பாட்டு பாடுபவர் ஜி.எஸ்.வாசன், எஸ்.எஸ்.வாசன் குள்ளமாக இருப்பார். அவர்கள் எல்லாம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார்கள். சிலம்பம் சுற்றிக்கொண்டு வந்தார்கள். கூட் டத்தை நடத்துங்கள் என்றனர். நாங்கள் நடந்து வந்து மேடையில் அமர்ந்தவுடன், ‘பொத், பொத்தென்று' கற்கள் வந்து விழுகிறது; முதுகில் சாணி வந்து விழுந்தது; தில்லை வில்லாளனுக்கு முகம் வீங்கிப் போயிற்று. கூட்டம் நடத்தக்கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கிறார்கள். எங்களைத் தங்க வைத்த இஸ்லாமியத் தோழரின் வீட்டைத் தாக்கினார்கள்.  அதற்குப் பிறகு திருநாகேசுவரத்திலிருந்து நாங்கள் நடந்தே வந்தோம் கும்பகோணத்திற்கு.

இன்றைக்கு அதே திருநாகேசுவரத்திலி ருந்துதான் திராவிடர்  கழக மாவட்டத் தலைவர் வந்திருக்கிறார். அந்த ஊரில் பெரியார் சிலை யைத் திறந்தார்கள், என்னை அழைத்து நடத்திய  அந்த சிலை திறப்பு விழாவிலும், இந்தத் தகவல்களைச் சொன்னேன்.

பெரியார் என்பது ஒரு ஆழமான தத்துவம்; மூச்சுக் காற்று - பிராண வாயு - அதில்லாமல் இருக்க முடியாது.  பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி.

ஆகவே, அந்தப் பயிற்சியை நாம் செய்யவேண்டும் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, எதிரிகள்  தயாராகி ஒரு கை பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால், அவர்களால் முடியவில்லை; அத னால்,பெரியார் சிலைக்குக் காவி வண்ணம் பூசுவது, திருநீறு பட்டை போடுவது என்று  கோழைத்தனமாக, கோமாளித்தனமாக செய்கிறார்கள். செய்யட்டும், அதுபோன்று நிறைய செய்யட்டும்; பெரியாரை எவ்வளவு அவமதிக்க முடியுமோ, அவமதியுங்கள் அதனுடைய விளைவை நிச்சயமாக சந்திப்பீர்கள்!

உலகத்திலேயே வேறு யாராவது உண்டா?

பெரியார் காலத்திலேயே, என் படத்தை கொளுத் துகிறீர்களா? பரவாயில்லை, வாருங்கள். நான் இரண்டு காசு கொடுக்கிறேன், படத்தை வாங்கிக் கொளுத்து என்பார். தன் மீது ஒரு செருப்பு விழுந்தவுடன், பரவாயில்லை; இன்னொரு செருப்பு எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கின்ற ஒரே தலைவர் உலகத்திலேயே வேறு யாராவது உண்டா?

அவரது மனைவியைப்பற்றி அவதூறாகப் பேசிய பொழுது, பரவாயில்லை, நீ பேசு - நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று பொதுவாழ்க்கையை ஏற்றுக்கொண்டவர்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.

அப்படி வந்த இயக்கம் இது.

எனவேதான், நம்முடைய இயக்கத்தில் உள்ள இளைஞர்களை நான் பார்க்கிறேன். அவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கு உற்சாகமாக இருக்கிறது;  என்னை பார்த்தவுடன், உங்களுடைய பேட்டரி எல்லாம் சார்ஜ் ஏறியிருக்கிறது.

நம்முடைய தோழர்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்; முகக்கவசம் அணிவதிலும், சோப்புப் போட்டு கைகழுவுவது போன்றவற்றை செய்வதிலும் அலட்சியம் காட்டக் கூடாது.

மீண்டும் கரோனா தொற்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்காக நம்முடைய பணிகளை விட்டுவிட முடியாது; ஒதுக்கிவிட முடி யாது. நம்முடைய கடமைகளை நாம் செய்யவேண்டும்.

அந்த அடிப்படையில், பிரச்சாரம் செய்வதற்கு எங்கெங்கே வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தாரளமாகச் செய்வோம்.

நோயினால் சாவதைவிட - போராட்டக் களத்தில் இறந்தேன் என்று  சொன்னால் நல்லது!

நோயினால் இறந்தேன் என்று சொல்வதை விட, பிரச்சாரம் செய்யும்பொழுது இறந்தேன் என்று சொன்னால் நல்லது; போராட்டக் களத்தில் இறந்தேன் என்று சொன்னால் நல்லது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லோருக்கும் அந்த உணர்வு உண்டு. எத்தனை தோழர்களை நாம் இழந்திருக்கிறோம்?

ஆகவேதான் நண்பர்களே, அய்யாவி னுடைய கொள்கை என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. மராட்டியத்தி லிருந்து அவர்கள் நம்மைப் பாராட்டி விருது கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு அர்த்தம் என்ன? பெரியார் என்ற தத்துவம் மிகப்பெரிய அளவிற்குப் பரவுகிறது.

ஆகவே, அதைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. தேர்தல் என்பது ஒரு நாள்தான்;  ஆனால், தத்துவம் என்பது நிலைக்கவேண்டும்.

நம்முடைய எதிரிகள் அதனை முழுமையாக அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்முடைய அடுத்த கட்டம், பத்திரிகை, புத்த கங்கள், பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், தெரு முனைப் பிரச்சாரம் நடப்பதுபோன்றே, பயிற்சி முகாம்கள் நடைபெறவேண்டும்.

இயக்கம் என்றால், இயங்கிக் கொண்டே இருப்பது தான் இயக்கம். தேர்தல் முடிந்தவுடன், அரசியல் வாதிகள், தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? தேர்தல் பணி முடிந்துவிட்டதே என்று ஓய்வெடுக்கப் போவார்கள். சிலர் ஜோசியரிடம் போவார்கள்; இன்னும் சிலர் கோவில்களுக்குச் சென்று வேண்டிக் கொள்வார்கள். அவர்கள் எப்படி யாவது போகட்டும், நாம் அதைப்பற்றி கவலைப் படவேண்டியதில்லை.

ஏப்ரல் மாதத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம்கள்!

நாம் என்ன செய்யவேண்டும் என்றால், வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கிறது. அங்கங்கே வாய்ப்பு இருக்கின்றவர்கள் இணைந்து   செயல்படுங்கள்.

ஏப்ரல் 10, 11 - சனிக்கிழமை   - ஞாயிற்றுக்கிழமை; அதேபோன்று ஏப்ரல் 17, 18 - சனிக்கிழமை - ஞாயிற்றுக் கிழமை; 24, 26 - சனிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை மூன்று வாரங்கள் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் பயிற்சி முகாம் நடத்தவேண்டும்; அதனை எப்படி நடத்தவேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலிருந்தும் புதிய இளைஞர்களை அழைத்து, அவர்களுக்குக் கொள்கை ரீதியாக சொல்லிக் கொடுக்கவேண்டும்.

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு இதனை செய்யவேண்டும் என்பது ஒரு திட்டம். அதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். அந் தந்தப் பகுதிகளில் தோழர்கள் உற்சாகமாக இருக் கிறார்கள். அவர்களிடம் நான் கலந்துரையாடினேன்.

வடக்கே இருக்கின்ற மாவட்டங்கள் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி வரிசையாகப் பார்த்தீர்களே யானால், ஏலகிரி அல்லது ஓகேனக்கல் - இந்த இரண்டு இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பெரியாரியல் பயிற்சி முகாமை நடத்தவேண்டும். நம்முடைய கழகப் பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் மற்ற தோழர்களை கலந்தாலோசித்து  நடத்துங்கள்.

அதேபோன்று, நம்முடைய கழகத் தோழர் தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன் இங்கே வந்திருக்கிறார். எப்படி இங்கே நிம்மதி பணியாற்றுகின்றாரோ - அதேபோன்று அருமையாக தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன் அவர்களும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்.

(தொடரும்)

Comments