தேசிய கல்விக் கொள்கையின் விபரீதம்

* பு. பா . பிரின்ஸ் கஜேந்திர பாபு 

பொதுச் செயலாளர், 

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

 கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டம், மாநில அரசு தன் மாநில மக்களின் கல்வி மேம்பாட்டிற்கானத் திட் டங்களை வகுத்துக் கொள்ள அதிகாரம் அளிக்கிறது. கல்வி, மத்திய அரசு பட்டியலில் இல்லை; பொதுப் பட்டியலில் தான் உள்ளது. பல்கலைக்கழக உரு வாக்கம், நிர்வாகம் போன்றவை மாநிலப் பட்டி யலில்தானே  உள்ளது.

மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அப்படியே மாநில அரசு பின்பற்ற வேண்டும், மாநில அரசிற்கும், மாநிலச் சட்டப் பேரவைக்கும் மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளின் அடிப்படையில் மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றிட கொள்கைகள் வகுக்கவும், சட்டம் இயற்றவும்  உரிமை இல்லை என்ற வாதத்தை முன்வைத்தால்,  மாநிலச் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற வேண்டிய தேவையே இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் போக்கை தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் நாடு மக்கள் உணர வேண்டும்.

மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்புகளைப் பயன் படுத்தி, மாநில அரசு கல்வியைப் பரவலாக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கல்வித் துறையில் இந்தியாவிற்கே முன் எடுத்துக் காட்டாகத் தமிழ் நாடு திகழ்கிறது. சமூகநீதியின் அடிப்படையில் வலுவான பொதுக் கல்வி அமைப்பு தமிழ் நாட்டில்தான் உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்வியைச் சிதைப்பதோடு, பள்ளிகளையும், கல்லூரிகளையும் வேலைக்கான திறன் அளிக்கும் மய்யங்களாக மாற்றிவிடுகிறது. குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளி ஆக்குகிறது. மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் கல்லூரியில் சேரத்  தகுதி இல்லை என்றும், தேசியத் தேர்வு முகமை அகில இந்திய அளவில் நடத்தும் "நீட்" போன்ற திறன் அறி தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப் படும் என்றும் தேசியக் கல்விக் கொள்கை தெரிவிக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தான கூறுகளை உணர்ந்து அதை நிராகரிக்க வேண்டும். மாநிலத்தில் வாழும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலக் கல்வி மேம்பாட்டிற்காக "மாநிலக் கல்விக் கொள்கை" வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம்.

16ஆவது தமிழ் நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக "ஒன்றிய அரசின் புதியக்கல்விக் கொள்கை, தமிழ் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சமூகநீதி மற்றும் மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால் திராவிட முன்னேற்றக் கழகம் அதை முற்றிலுமாக நிரா கரிக்கிறது. தமிழகத்திற்கெனத் தனியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும். இதற்கெனக் கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிடமும் கல்வி விவகாரத்தில் கருத்தொற்றுமை உள்ளது.

மக்களாட்சியில்  இறுதி இறையாண்மை பெற்ற மக்களுக்கு  வாக்களிப்பது மட்டும்  கடமையன்று. அரசின் தவறான கொள்கையை நிராகரிக்கவும், மக்களுக்குத் தேவையான கொள்கைகளை அரசு உருவாக்கிட வலியுறுத்துவதும்  மக்களின் கடமையாகும்.  தேர்தலில் தங்களின் வாக்குகள் மூலம் தவறான கொள்கையை நிராகரித்து, சரியான கொள்கை உருவாகிட  மக்களுக்கு உரிமை வழங்கப் பட்டுள்ளது.

இந்த உரிமை நம் முன்னோர்களின் தியாகத்தால் நமக்குக் கிடைத்தது. அத்தகைய உரிமையை உரிய முறையில் பயன்படுத்தி,  உள்ளுர்ச் சமூகத்திற்குத் தேவையான வேலைக்கான  திறன்களை  நம் குழந்தைகள் பெற்று,  நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, கூலித் தொழிலாளியாக குழந்தைப் பருவத்திலேயே நம் குழந்தைகள் மாற வழி செய்யும் தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, தமிழ் நாடு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கிட வாக்களிக்க வேண்டும்.

அத்தகைய வாக்குறுதியை மிகத் தெளிவாக அளித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நமது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் பாதுகாப்பான எதிர்காலத்தை நம் குழந்தைகளுக்கு நாம் உருவாக்கிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு வாக்காளப் பெருமக்களைக் கோருகிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் இந்த நிலைப்பாட்டை ஆமோதித்து, மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரிலிருந்து பேராசிரியர் அனில் சட்கோபால் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளி லிருந்தும் கல்வியாளர்கள் வரவேற்று செய்தி அனுப்பி உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த துணிச்சலான, தீர்க்கமான அறிவிப்பு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

(Messages endorsing the stand taken by SPCSS-TN were received from Prof. Anil Sadgopal, Bhopal, Prof. G. Haragopal, Hyderabad, Telangana, Prof. Madhu Prasad, Delhi, Prof. Jagmohan Singh, Punjab, Prof. Indranee Datta, Guwahati, Assam Dr. Niranjanaradhya. V.P., Satya shodhak  Shikshak Sabha, Maharastra, Shikshan Sangharsha Sameeti, Vidharbha  and Shiksha Niti Virodhi Samanvay  Sameeti, Maharastra.).

2021, ஏப்ரல் 6 அன்று நடைபெறும் தேர்தல் சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் கொள்கைக்கும், சமத்துவத்தை உருவாக்கிட வழிவகுக்கும் கொள் கைக்கும் இடையிலான தேர்தல். ஆகவே, இரண் டாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்து மீள முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் போராடியுள்ளோம் என்பதை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். நம் சமூகத்தைப் பல நூறு ஆண்டுகள் பின்னுக்கு இழுக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020அய் நிராகரித்து,  பலரின் தியாகத்தின் பயனாய்க் கிடைத் திட்ட உரிமையைக் காத்து, சமத்துவத்தை அடைய முன்னேறுவோம் என்ற உறுதியோடு இத்தேர்தலில் மக்கள் பங்கேற்றிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

Comments