குடந்தை வரலாறு படைத்தது

 குமரி முதல் திருத்தணி வரை குழுமிய திராவிடர் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் 13.3.2021 சனி யன்று காலை 10.30 மணிக்கு கும்பகோணம் ராயா மண்டபத்தில் எழுச்சி யுடன் கூடியது.

குமரி முதல் திருத்தணி வரை உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் வருகை தந்தனர். மண்டபம் நிறைந்து வழிந்தது.

தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மகளிர் அணி யினர் கழகக் காப்பாளர்கள், மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், செயலாளர்கள் என்று அவரவர்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்த இருக்கைப் பகுதிகளில் அமர்ந் திருந்தனர்.

கழகத் தலைவர் குறிப்பிட்டபடி மகளிரில் நாகர்கோயில் கிருஷ்ணேஸ்வரி  குடவாசல் வசந்தா கல்யாணி என்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள் முதல், பிரச்சார செயலாளர் அருள்மொழி ஒத்த நடுத்தர வயதுடையோர், மணியம்மை, மதிவதனி பேன்ற இளைய தலைமுறையினர் என்று தலைமுறை இடை வெளியில்லாமல் மகளிர் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே போன்று ஆண்களிலும் மாண வர்கள், இளைஞர்கள் நடுத்தர வயதினர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் என்ற வகையில் வரிசையாக அமர்ந்தி ருந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

கரோனா என்ற நெருக்கடி காலத்திலும் கழகப் பணிகள், இணையத்தின் மூலம் எப்படியெல்லாம் முடுக்கி விடப்பட்டன என்பதைக் கழகத் தலைவர் விளக்கினார்.

PDF  மூலம் 'விடுதலை' வெளி வந்தது; பிறகு 4 பக்கங்களாக அச்சிடப்பட்டு வெளி வந்தது; அன்னை மணியம்மையார் பிறந்த நாளிலிருந்து  வழக்கம்போல 8 பக்கங்களில் பல வண்ணங்களோடு வெளிவந்து கொண்டி ருக்கிறது.

இணையதளத்தில் ஏடு வெளிவந்தபோது 'விடுதலை' படிக்கும் வாசகர்களின் சராசரி விகிதம் பெருகியது மகிழ்ச்சிக்குரியது என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

திராவிட மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை கடவுள் மறுப்புக் கூறிட, குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர்

கு. நிம்மதி வரவேற்புரையாற்றினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த பொதுக் குழுவுக்கும் இன்று நடை பெறும் கழகப் பொதுக் குழுவுக்கு இடையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சிகளைப் பட்டிய லிட்டுக் காட்டினார்.

குறிப்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும்  "பெரியார் உலகம்" பற்றிய தகவல்களை விளக்கிக் கூறினார். தொடர்ந்து பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

தீர்மானங்கள்

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும் - நமது கடமையும் எனும் தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தனர்.

"திராவிடம் வெல்லும் வெல்லும்!" எனும் முழக்கத்தை கோடையிடியென முழங்கினர்.  மற்ற மற்ற தீர்மானங்களை திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் குடந்தை கோ. கருணாநிதி, கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை செயராமன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்துத் தீர்மானங்களையும் பலத்த கரஒலிக்கிடையே தோழர்கள் ஒரு மனதாக வழிமொழிந்தனர்.

குடந்தை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் சு.துரைராசு நன்றி கூறிட பொதுக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது.

Comments