திராவிட இயக்கம் பிறந்ததே சமூகநீதிக்காகத்தான்!

எளிமையான இயக்கத்திற்குப் பின்னால் இருக்கிற பெரிய வலிமையான தத்துவம் - பெரியார்

கும்பகோணம் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் விளக்கவுரை

கும்பகோணம், மார்ச் 19  திராவிட இயக்கம் பிறந்ததே சமூகநீதிக்காகத்தான்; எளிமையான இயக்கத்திற்குப் பின்னால் பெரிய வலிமையான தத்துவம் தந்தை பெரியார் என்று விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதல் உரையாற்றினார்.

அவரது வழிகாட்டுதல் உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒரு மாத இடைவெளியில் குற்றாலத்தில் இரண்டு நாள்கள் பயிற்சி முகாம் உண்டு - இது தெற்கே.

நேற்று சிவகங்கை மாவட்டத் தலைவரிடம் பேசி னேன் - சிவகங்கையில் பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் - இது கிழக்கே.

மேற்கே - ஈரோடு அல்லது மேட்டுப்பாளையம் ஏதாவது ஓர் ஊரில் இரண்டு நாள் பயிற்சி முகாம்கள் நடைபெறும்.

கவிஞர் பொறுப்பாளர்களைக் கலந்தாலோசித்து  சிறப்பான ஏற்பாடுகளை செய்வார்.

இது ஒரு பிரச்சாரத் திட்டம் - ஏப்ரல் மாதம் முடிந்துவிடும்.

தேர்தல் முடிவு வந்தவுடன் - ஜூன் மாதத்திலிருந்து நமக்கு மிக முக்கியமான பணி உண்டு.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுகின்ற பெய ரில், கோடிக்கணக்கான ரூபாயை, பெரிய பெரிய பணக்காரர்களிடம், கார்ப்பரேட்டுகளிடமும் வாங்கு கிறார்கள்.

பெரியார் உலகம்பெரியார் உலகம், பெரியார் உலகம்

ஆனால், அதை ஒரு பிரச்சாரத்திற்காகப் பயன் படுத்துகிறார்கள். ரிக்ஷாவில் துண்டறிக்கையை ஒட்டி, ராமர் கோவில், ராமர் கோவில், ராமர் கோவில்  என்று  பிரச்சாரம் செய்கிறார்கள் - அது ஆர்.எஸ்.எசினுடைய தத்துவம்.

நாம் திருப்பிப் போடுகிறோம் - பெரியார் உலகம், பெரியார் உலகம், பெரியார் உலகம் என்று பிரச்சாரம் செய்கிறோம்.

பெரியார் உலகம்பற்றி கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் மற்ற தோழர்கள் பல செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்.  இந்த இயக்கத்தினுடைய கொள்கைகள் ஒரு அழியாத நினைவுச் சின்னமாக இருக்கவேண்டும். உலகம் முழுவதும் உள்ளவர்கள் அங்கே வந்து பார்க்கவேண்டும் என்கிற திட்டத்தை வகுத்தோம். .தி.மு.. அரசு 3, 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஒரு ஃபைலை பிடித்து வைத்துக் கொண் டிருக்கிறார்கள்.  பரவாயில்லை, இன்னும் இரண்டு மாதங்கள்தானே இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்.

மகளிர் எழுச்சி வரலாற்றுக் காணரங்கம்

பெரியார் உலகத்தில் கிட்டத்தட்ட எல்லா பணிகளும் முடிந்து போயிற்று. பெரியார் உலகத்தில் இருக்கின்ற சிறப்பு  என்னவென்றால், பெரியார் உலகத்தைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது; இயக்க வரலாறு பற்றிய தகவல்கள் பல மொழிகளில் இருக்கும். வெளிநாட்டுக்காரர்கள், வெளிமாநிலத்தவர்கள் வந்தாலும், அவரவர் தெரிந்துகொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தவிருக்கிறோம்.

அங்கே, மகளிர் எழுச்சி வரலாற்றுக் காணரங்கம் - மகளிர் எப்படி அடிமையாக இருந்தார்கள்? சுயமரியாதை இயக்கம், பெரியார் என்று வந்தவுடன், படிப்படியாக மகளிர் படித்து, முன்னேறி அய்க்கோர்ட் ஜட்ஜ் வரை வந்தார்கள் - அந்த எழுச்சி எப்படி வந்தது? அதற்காக எத்தனைப் போராட்டங்கள்? என் னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கின்றன? மொட்டைப் பாப்பாத்தி என்று முன்பு சொன்னார்களே, இப் பொழுது யாருமே அதுபோன்று கிடையாது - வெள்ளை சீலை உடுத்துவதில்லை - இவையெல்லாம் வரலாற்று ரீதியான செய்திகள் வரலாற்றுக் காணரங்கத்தைச் சுற்றிப் பார்க்கும்பொழுது, ஒரு புத்தகத்தைப் படித்த உணர்வு வரும்.

திராவிட இயக்கம் பிறந்ததே சமூகநீதிக்காகத்தான்!

அதேபோன்று சமூகநீதி!

இந்த இயக்கம் பிறந்ததே சமூகநீதிக்காக. இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் சமூகநீதிப் போரில் கிடைத்த வெற்றிக் களங்கள். கல்வி, உத்தியோகம் இவை அத்தனையையும் எடுத்து வரலாற்று ரீதியாகப் போட்டு இருக்கிறோம்.

வங்காளம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆந்திரா கடைசியாக தமிழ்நாடு -  மூன்று அரங்கமாக இருக்கும்.

அதேபோல நண்பர்களே, பண்பாட்டுப் படை யெடுப்பு முறியடிப்புப்பற்றிய தகவல்களை இனிமேல் வரக்கூடிய புதிய தலைமுறையினருக்கும், வெளியே இருப்பவர்களுக்கும் பயன்படக் கூடிய அளவிற்கு பேஸ்-1, பேஸ்-2, பேஸ்-3, பேஸ்-4 என்கிற கட்டங்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

அவனுக்கு  ராமர் கோவில் அங்கே - நமக்கு இங்கே பெரியார் உலகம் இதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்காக குறைந்தபட்சம்  - மக்கள் பங்களிப்பு தேவை. திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் எல்லாம் நன் கொடை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான கணக்கு வழக்கெல்லாம் இருக்கிறது. இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்னவென்றால், 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நன்கொடை டிக்கெட் பெரியார் உலகத்திற்காக அய்யா படத்துடன் அச்சடித்து, பொதுமக்களை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில், பெரியார் என்னென்ன செய்தார் என்பதை விளக்கி, பகுதி பகுதியாக நான்கு பகுதி, அய்ந்து பகுதியாக தோழர்கள் சுற்றுப்பயணம் செய்து வரவேண்டும்.

ஊட்டிலிருந்து வேதாரண்யம் வரையில்,

திருத்தணியிலிருந்து சென்னை வரையில் இது போன்று வரையறுத்து, குட்டி யானை என்று சொல்லப் படுகின்ற வாகனத்தில் அய்யா படம் வைத்து  வீதி வீதியாகச் சென்று, தாய்மார்களை, சகோதரிகளை சந்தித்து பெரியார் உலகத்திற்காக நன்கொடையைப் பெறவேண்டும்.

குறைந்தபட்சம்

மூன்று கோடி ரூபாயை செப்டம்பர் மாதத்திற்குள் திரட்டவேண்டும்!

ஆகவே, பெரியார் உலகத்திற்கான நிதியை - குறைந்தபட்சம் மூன்று கோடி ரூபாயை செப்டம்பர் மாதத்திற்குள் திரட்டவேண்டும். டிசம்பர் மாதத்தில் பெரியார் உலகத்தின் ஒரு பகுதியைத் திறக்கவேண்டும். அதற்கான அனுமதி வந்துவிட்டால், உடனடியாக அந்தப் பணிகள் விரைவாக நடைபெறும்.

கிராமங்களை மய்யப்படுத்தவேண்டும்

ஆகவே, பெரியார் உலகம் என்பது நம்முடைய லட்சியம். அதற்கான ஒவ்வொரு கல்லும் நாம் எடுத்து வைத்தது.

கூட்டம் நடத்துகின்ற இயக்கத் தோழர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள். சிறிது காலத்திற்கு, நகரங்களில் போடுகின்ற கூட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, கிராமங்களையே மய்யப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது அடுத்த திட்டம்.

ஆட்சி மாற்றம் வந்துவிட்டால், போராட்டம் நடத்தக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் இருக்காது. அப்படியில்லாமல், போராட்டம் நடத்தவேண்டிய சூழல் வந்தால், போராட்டம் நடத்துவோம். ஏனென்றால், நாம் ஆதரிக்கின்ற ஆட்சியில் போராட்டம் தேவையா? என்றால்,  நடத்தாமல் இருந்ததில்லை, அய்யா காலத்திலிருந்து. காமராசரை ஆதரித்தபொழுதுகூட, அரசியல் சட்ட எரிப்பில் சிறை சென்றிருக்கிறோம்.

ஆகவே, நம்முடைய இயக்கத்தினுடைய வர லாற்றை எடுத்துப் பார்த்தால் இது நன்றாக விளங்கும்.

சென்னையில் திருமகள் இறையன் அவர் களுடைய முயற்சியினால், நல்ல முறையில் வளர்க் கப்பட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலை யத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் தற்போது நிறைய நடைபெறுகின்றன. அதைப் பார்க்கும்பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது.

இப்பொழுது கரோனா காலகட்டம்; இந்தக் கால கட்டத்தில் மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடையாது. இந்தக் கட்டத்தில், நம்முடைய இயக்கம் எப்படி நடந்தது என்றால், பிரச்சாரம் காணொலிமூலம் நடைபெற்றது. புத்தக வெளியிட்டு விழாக்கள் நடைபெற்று இருக்கின்றன.

மிகச் சிறப்பாக நடைபெற்றுவரும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் பணிகள்!

ஜனவரி 2020 ஆம் மாதத்திலிருந்து டிசம்பர் 2020 மாதம் வரையில், கரோனா காலகட்டத்தில் நடைபெற்ற இணையேற்பு மணவிழா நிகழ்ச்சி கள் 307 நடைபெற்று இருக்கின்றன.

இதில் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா - 272

வேற்று மாநிலத்தவர் இணையேற்பு விழா - 17

மணமக்களில் ஒருவர் பார்ப்பனராக இருந்த மணவிழா - 12

மண முறிவு பெற்ற மணவிழா - 6

கரோனா நோய்த் தொற்று காரண மாக, மார்ச் 21 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை அய்ந்து மாதங்கள் திருமணம் நடத்தப்பட வில்லை. ஏனென்றால், ஊரடங்கு காரணமாக. ஆறு மாதங்களில் மேற்கண்ட மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன.

தாய்மார்கள், சகோதரிகள், மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், சென்னையில்  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இருப்பதுபோல, மற்ற மற்ற இடங்களிலும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால், ஜாதி பெயரில் மேட்ரிமோனியல் என்று நடத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். பொறுப்பான வர்கள் முன்வந்தால், அதைப்பற்றியும் நாங்கள் பரிசீலிக்கிறோம்.

சென்னை பெரியார் திடலில், பசும்பொன் செந்தில்குமாரி  திருமண நிலையத்தை நன்றாக நடத்தி வருகிறார் - திருமகள் இல்லையே என்கிற குறை இல்லாமல். அதுபோன்று நம்முடைய மகளிரணி தோழர்கள், மற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு மற்ற மற்ற இடங்களில் பெரியார் சுயமரியாதை திருமண நிலையங்கள் அமைவதற்கான ஏற்பாடு களை செய்யவேண்டும்.

பொங்கல் விழா - பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படும்

இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தி னுடைய தேர்தல் அறிக்கை சற்றுமுன்தான் வெளியாகி இருக்கிறது. அதில் வந்த சில தகவல்களை சொன் னார்கள். நமக்கெல்லாம் அது மகிழ்ச்சியான செய்தி தான். ஏற்கெனவே நம்முடைய கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய  - வெற்றி பெறக்கூடிய ஒரு ஆட்சி என்பதற்கு ஓர் அடையாளம் என்னவென்றால், பொங்கல் விழா - பண்பாட்டு விழாவாகக் கொண்டா டப்படும்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தின்படி - 205 பேருக்கும் உடனடியாக வேலை கொடுக்கப்படும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞரை ஆதரிக்கும்பொழுது, கண்டிஷன் தீர்மானமாகப் போட்டோம்; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்துப் போடுவேன் என்று சொன்னார். அதற்காக தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடத்தி, அவரை அழைத்துப்  பாராட்டினோம்.

அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் நீங் களே பாருங்கள் என்று சொன்னார். நடைமுறையிலும், அதற்கான ஏற்பாடுகளை நாம்தான் பார்த்தோம்.

அய்யாவிற்குப் பிறகுஇந்த இயக்கம் எப்படி பணியாற்றி இருக்கிறது?

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், இந்த இயக்கம் சுண்டைக்காய் இயக்கமா? வெண்டைக்காய் இயக்கமா? என்றெல்லாம் சிலர் வியாக்கியானம் செய்வார்கள். இந்த இயக்கத்தினுடைய வரலாற்றைப் பார்த்து நீங்கள் எல்லாம் பெருமை கொள்ளவேண்டும். அதுவும் அய்யாவிற்குப் பிறகு, இந்த இயக்கம் எப்படி பணியாற்றி இருக்கிறது என்றால், இரண்டு முதலமைச்சர்கள் அவர்களை நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் - ஜெயலலிதா தன்னை பாப்பாத்தி என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்.  அவருடைய ஆட்சியில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டத்தை நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். அது பெரிய வெற்றி.

மூன்று பார்ப்பனர்களை  வைத்தே 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்!

அதற்காக மூன்று பார்ப்பனர்கள் - முதலமைச்சர் ஜெயலலிதா பார்ப்பனர்; பிரதமர் நரசிம்மராவ் பார்ப் பனர்; குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பார்ப்பனர்.

69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக,  உள்துறை செயலாளர் மலைச்சாமி அய்..எஸ்.,  எஸ்.டி.சோமசுந் தரத்தை அழைத்து, ஆசிரியர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே செய்யுங்கள் என்றார் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதேபோன்று, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தில், எந்த நீதிபதியை நியமிக்கவேண்டும் - ஆணையத்தை எப்படி அமைக்கவேண்டும் - அதற் காக எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் அவர்களைக் கேளுங்கள் என்றார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

அதேபோன்று செய்து, உச்சநீதிமன்றத்திலும் நாம் வெற்றி பெற்றோம்.

எளிமையான இயக்கத்திற்குப்

பின்னால் இருக்கிற பெரிய வலிமையான தத்துவம் - பெரியார்

ஆகவே, இந்த இயக்கம் கண்ணுக்குத் தெரியாத இயக்கம் போன்று இருக்கலாம்; சிறிய இயக்கமாக இருக்கலாம்; ஆடம்பரமில்லாத இயக்கமாக இருக்கலாம். எளிமையான ஒரு இயக்கம்தான். ஆனால், எளிமையான இயக்கத் திற்குப் பின்னால் இருக்கிற பெரிய வலிமையான தத்துவம் - பெரியார் என்கிற தத்துவம்; பெரி யாருடைய தொண்டு என்பதுதான் அடிப்படை. அதனால்தான் நமக்கெல்லாம் பெருமை.

நம்முடைய  ஆற்றல், நம்முடைய அறிவு, நம்முடைய திறமை என்று யாரும் நம்முடைய முதுகைத் தட்டிக் கொள்ளவேண்டியதில்லை. பெரியார் தந்த புத்தி நம்மை வழிநடத்தும் என்று சொல்லும் அடிப்படை அதுதான்.

அடுத்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய - முதல் பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும்.

எதை நாம் விரும்புகிறோமோ, அதை இயற்கையே கொண்டுவரக் கூடிய சூழலை உண்டாக்குவார்கள்.

அலட்சியம் காட்டாதீர்கள்!

ஆகவே நண்பர்களே! உங்களையெல்லாம் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி! கரோனா காலகட்டத்தில் நாம் எல்லாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். முகக் கவசம் அணிவதிலும், கைகளை சோப்புப் போட்டு கழுவுதிலும் அலட்சியம் காட்டாதீர்கள்.

தேர்தல் நேரத்தில், பல மாதிரி இருப்பார்கள்; வாக்கு வங்கியில் அவரை விரோதம் செய்துகொள்ளக் கூடாது; இவர்களை விரோதம் செய்து கொள்ளக் கூடாது என்று  அவர்கள் பல மாதிரி  செல்வார்கள்.

நாமம் போட்டவனைப் பார்த்தால், நாமம் போட்டு பேசவேண்டும்; விபூதி பூசியவனைக் கண்டால், விபூதி பூசி பேசவேண்டும் என்றெல்லாம் இருப் பார்கள். இதுபோன்று பல பிரச்சினைகள் இருக்கும். ஆகையால்தான், நாம் தேர்தலில் நிற்கவில்லை. ஆனாலும், அவர்கள் இப்படிப் போகிறார்களே, அப்படிப் போகிறார்களே? என்றெல்லாம் நீங்கள் யாரும் கவலைப்படவேண்டியதில்லை.

நமக்கு வேண்டியது உதயசூரியன் -

நமக்கு வேண்டியது அண்ணா ஆட்சி -

நமக்கு வேண்டியது கலைஞர் ஆட்சி-

அதை இப்பொழுது தரக்கூடியது ஸ்டாலின்  ஆட்சி-

என்ற அளவில் இருக்கும்பொழுது, நம்முடைய சொந்த விருப்பு - வெறுப்புகளுக்கு இடமே கிடையாது.

அண்ணன் - தம்பியாக இருந்தாலும் பார்க்கக் கூடாது. புதுவை வீரமணி இங்கே இருக்கிறார். காரைக்கால் சி.மு.சிவம்; ஒரே வீட்டில் ஒருவர் காங்கிரசை ஆதரிக்கிறார்; இன்னொருவர் தி.மு..வை ஆதரிக்கிறார்.

நம்முடைய நிலைமை வேறுமற்றவர்களுடைய நிலைமை வேறு!

ஆகவே,  தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களே கூட  பல மாதிரி இருப்பார்கள்.  இவர்தான் வெற்றி பெறவேண்டுமா? என்று  நினைக்கத் தோன்றும்.

தேர்தலில் நீங்கள் நின்றாலும், நான் நின்றாலும், அப்படித்தான் புத்தி போகும். ஒரு ஓட்டுதானே, அது  போனால், போகட்டும் என்று விட முடியாது. ஓர் ஓட்டில்கூட தோல்வியுற்று இருக்கிறார்களே!

தேர்தலில் நின்றால், அப்படித்தான்; ஆகையால்தான், நாம் தேர்தலில் நிற்காமல் இருக்கிறோம். நம்முடைய நிலைமை வேறு; மற்றவர்களுடைய நிலைமை வேறு.

‘‘எந்த பேங்க் உடைந்தாலும் எனக்குக் கவலையில்லை'' என்றான்  பிச்சைக்காரன் ஒருவன்.

‘‘ஏன் என்றால், எந்த பேங்க்கிலும் நான் காசு போடவில்லை; ஆகவே, எந்த பேங்க் உடைந்தால், எனக்கென்ன கவலை'' என்றான்.

அதுபோன்றதுதான் நம்முடைய நிலைமை. நாம் சுதந் திரமாக இருக்கலாம்; ஆனால், மற்றவர்களும் தேர்தல் நேரத் தில் அப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

தூக்குகின்ற கையை மட்டும் பாருங்கள்; நடந்துகொள்கின்ற முறையைப்பற்றி நீங்கள் கவலையே படாதீர்கள்

நாம் அவர்களுக்கு உதவுகிறோம் என்று நினைக்கவேண் டாம்; நம்முடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்கு கருவிகள் அவர்கள். கையைத் தூக்கவேண்டும் அவ்வளவு தான். தூக்குகின்ற கையை மட்டும் பாருங்கள்; நடந்து கொள்கின்ற முறையைப்பற்றி நீங்கள் கவலையேபடாதீர்கள். தேர்தலுக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; ஆகவே, சில விஷயங்களை நாம் கண்டும் காணாமல் இருக்கவேண்டும்.

நம்முடைய கடமையை நாம் செய்தோமோ என்றுதான் நாம் பார்க்கவேண்டும்.

யார் வரவேண்டும் என்பதைவிட - யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்!

எனவே தோழர்களே! மாலை பொதுக்கூட்டத்தில் விரிவாக உரையாற்ற இருக்கின்றேன்.

நம்முடைய லட்சியத்திற்காக நாம் ஆதரிக்கிறோமே தவிர, இன்னொருவருக்கு உதவுவதற்காக நாம் செய்கிறோம் என்று இல்லை.

யார் வரவேண்டும் என்பதைவிட - யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்.

மீண்டும் இந்தத் தமிழ் மண்ணில் காவிகள் காலடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி சரியான வெற்றியைக் கொடுத்தோமோ - அதைவிட சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறுவதற்காக உழைக்கவேண்டும்.

நான் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னதை,  அதையே ஸ்டாலின் அவர்களும் சொல்லியிருக்கிறார். எல்லா தொகுதிகளிலும் யார் வேட்பாளர் என்றால், கலைஞர்தான்.  எந்த சின்னமாக இருந்தாலும், அது, உதயசூரியன்தான்.

திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!!

ஆகவே, தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள், தனிப்பட்ட கோபதாபங்கள், தனிப்பட்ட கவுரவங்களுக்கு இடமில்லாமல்,

குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து

மானம் கருதக் கெடும்

நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆயுதம் அவர்கள்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!!

நாளைய வரலாறு இதைச் சொல்லும்!

திராவிடம் வெல்லும்!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image