இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலம் பெரியார் மண்ணாகிய தமிழ்நாடுதான்!

 ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் - யார் எதிர்த்தாலும் திராவிடம் வெல்லும் - அதை வரலாறு இனி சொல்லும்!

கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 13   இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், பெரியார் மண் ணாகிய தமிழ்நாடுதான்; திராவிட இயக்கம் ஆண்ட - உண்மையான திராவிட இயக்கம் ஆளப் போகிற இந்த மண்தான் - பெரியார் மண்தான் - சமூகநீதி மண்தான் - பெரியாருடைய சமூகநீதி மண்தான்  மற்ற வர்களுக்கு வழிகாட்டக் கூடியது; ஆயிரம் எதிர்ப் புகள் வந்தாலும், யார் எதிர்த்தாலும், திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! அதை வரலாறு இனி சொல்லும்!!!என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

கருத்தரங்கம்

கடந்த 10.3.2021 அன்று  சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் 102 ஆம் பிறந்த நாள் விழா கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்ற  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு

 திராவிடம் என்பது ஒரு தத்துவம்

தாய்வழிச் சமூகம் என்பதை சிதைத்த ஆரியத்திற்கு நேர் எதிரானது திராவிடம். திராவிடம் என்பது ஒரு தத்துவம்.

திராவிடம் என்பது வெறும் இடமல்ல;

திராவிடம் என்பது வெறும் மொழியல்ல;

திராவிடம் என்பது ஒரு தத்துவம்.

அதுபோன்று தத்துவ ரீதியாக பார்ப்போமே யானால், ஆரியம் தந்தை வழி என்றால், திராவிடம் தாய்வழிச் சமூகம்.

மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறான் பெண்களைப்பற்றி -

பெண் குழந்தையாக இருந்தால், தந்தைக்குக் கட்டுப்படவேண்டும்; வளர்ந்து திருமணமானவுடன், கணவனுக்குக் கட்டுப்படவேண்டும்; பிறகு மகனுக்குக் கட்டுப்படவேண்டும்.  பெண்கள் எல்லாக் காலமும்  ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு நிலை.

கணவனுடைய சொத்து மனைவிக்கு வரும் என்பது ஏற்கெனவே இருந்த நிலை.  அதற்குள்ளே புகுந்து ஒரு முடிச்சைப் போட்டார்கள்.

1935 வரையில் ராம்நாட் கேஸ் என்பதில் கணவனுடைய சொத்தைகூட மனைவி எக்காலம் வரை வைத்திருக்கவேண்டும் என்றால், அவர் முழு உரிமை பெற்றவர் அல்ல -  அதுகூட நிபந்தனைக் குட்பட்டது - அந்த நிபந்தனை என்னவென்றால், ‘கற்புக்கரசி'யாக இருக்கவேண்டும். கணவன் இறந்த வுடன் வேறொரு திருமணம் செய்துகொள்ளக்கூடாது; யாருடனும் தொடர்பு இருக்கக்கூடாது.

நெய் பூசினால்பாவம் போய்விடுமாம்!'

திருமணமான பெண்ணுக்குக் குழந்தை இல்லை யென்றால், வேறொருவருடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு பக்கத்தில் மனுதர் மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நெய் பூசினால்பாவம் போய்விடும்' என்று எழுதி வைத்திருக் கிறார்கள். இதுபோன்ற அசிங்கமெல்லாம் இருக்கிறது.

அதையெல்லாம் விட்டுவிட்டு, மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சொத்துரிமைக்காக - ‘கற்பு' என்று கதை கட்டிவிடு கிறார்கள்.

கிராமத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து போனாலே, ‘‘ஆஹா, அந்தப் பெண் ஒரு ஆம்பளை யுடன் போனாள்'' என்று கதை கட்டிவிடுவார்கள். அவர்கள் இரண்டு பேரும் அக்காவும் - தம்பியுமாக இருப்பார்கள்.

நம்முடைய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பேராசிரியர் சுந்தரவல்லி அவர்களைப்பற்றி என்ன செய்தி வெளியிட்டார்கள்? சொந்த மகனோடு, உறவு களோடும் இருந்ததைப்பற்றி கதை கட்டுகிறார்கள்.

21 ஆம் நூற்றாண்டில், நகரத்தில் வசிக்கும் ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ளவரையே அசிங்கப் படுத்தவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும்பொழுது, கிராமத்தில் உள்ளவர்களை அதுபோன்று பேசினால் என்ன செய்வார்கள்?

நான்கு பேர் பேசினால், அது கட்டப் பஞ்சாயத்துத்தானே! ஆகவே, அந்தப் பெண்ணுக்கு கணவனுடைய சொத்து வராது.  அந்தப் பெண்ணை ஏமாற்றி சொத்துகளைப் பிடுங்கிக் கொள்வார்கள்.

அதெல்லாம் படிப்படியாக மாறி, மனைவிக்கு சொத்துரிமை உண்டு என்று வந்தது.

இயக்கத்தினுடைய பாதுகாப்புக் கருதி

ஏற்பாடு செய்யப்பட்டதே

தந்தை பெரியார் - மணியம்மையார் திருமணம்!

பெண் குழந்தையை சுவீகாரம் எடுக்க முடியாது; அதனால்தானே, 1949 இல் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் ஆகியோருக்குத் திருமணம். அந்தத் திருமணம் என்பது ஓர் ஏற்பாடே தவிர - இயக்கத்தினுடைய பாதுகாப்புக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டதே தவிர, மற்றபடி வேறொன்றுமில்லை.

பெரியார் ஒரு மெட்டீரியலிஸ்ட் -  வாழ்க்கைத் துணைவி என்று சட்டப்படி பதிவு செய்தால்தான், இந்த இயக்கத்திற்குப் பாதுகாப்பு, உங்களுடைய சொத்துக்குப் பாதுகாப்பு - அப்பொழுதுதான் வாரிசுதாரர் ஆக முடியும் என்று சொன்னவுடன்,  அப்படியென்றால், எந்தப் பெயரை வேண்டு மானாலும் சொல்லிக் கொண்டுபோங்கள். எனக்கு, நான் நினைக்கின்ற கருத்து நிறை வேறவேண்டும் என்று நினைத்தார் தந்தை பெரியார்.

இவ்வளவு துணிச்சல், பக்குவம் வேறு யாருக்கும் வராது.

இன்றைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடியவர் முன் வந்த வழக்கில், பெண் களுடைய உணர்வுகள் வெளிவந்திருக்கின்றன.

இந்து' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை!

இன்று காலையில்இந்து' பத்திரிகையில் ஒரு அருமையான கட்டுரை வெளிவந்திருக்கிறது.

Saint Mustafa - Nalsar University of Law, Vice Chancellor

அவர் எழுதிய கட்டுரையில்,

Target judicial patriarchy, not the judge

என்று எழுதியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மட்டும் சொல்ல வில்லை. வரிசையாக உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புகளில், ஆணாதிக்கச் சிந்தனையோடு ஏராள மான தீர்ப்புகள் வந்திருக்கின்றன. இவர்தான் முதலில் சொல்கிறார் என்று நினைக்கவேண்டாம்.

அவரே இப்பொழுது பின்வாங்கிக் கொண்டார். நான் செய்தியாளர்களிடம் சொல்லியதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். வழக்கமாக அர சியல்வாதிகள்தான் இப்படி சொல்வார்கள். இப் பொழுது நீதிபதிகளே சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

பெரியாருடைய சமூகநீதி மண்தான்  மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியது!

‘‘பெண்கள் ஜாண் ஏறினால் முழம் சறுக்குவது போன்று இருக்கிறது. ஆனால், இவை அத்தனைக்கும் வழிகாட்டியாக இருக்கின்ற மாநிலம், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், பெரியார் மண்ணாகிய தமிழ்நாடுதான்; திராவிட இயக்கம் ஆண்ட - உண்மையான திராவிட இயக்கம் ஆளப் போகிற இந்த மண்தான் - பெரியார் மண்தான் - சமூகநீதி மண்தான் - பெரியாருடைய சமூகநீதி மண்தான்  மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியது.

பெண்களுக்கு வாக்குரிமையா? பெண்களின் படிப்பா? பெண்களுக்கு வாய்ப்புகளா? இவை அத்த னையும் பெறக்கூடிய வாய்ப்புகள் இன்றைக்கு வந் திருக்கின்றன.

நம்முடைய மகளிர், எதிர்வரும் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். பயப்படக் கூடாது.

House Wife என்று சொல்லுகிறார்கள். இந்த சொல்லாடலே இருக்கக் கூடாது. எந்த அர்த்தத்தில் மேற்கண்ட வார்த்தையை இங்கிலீஷ்காரன் சொல் கிறான் என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை.   அவுசுக்கு எதற்கு Wife?ஆனால், நம்முடைய  தமிழில் மிக அழகாக இல்லத்தரசிகள் என்கிறோம். உண்மையிலேயே இல்லத்தரசிகளா? இல்லத்து அடிமைகளா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இல்லத்தரசி என்று அலங்காரத்திற்காக நாம் சொல்கிறோமே தவிர, இல்லத்திற்கு அரசியாக இருப்பவர்கள்கூட வெளியே சொல்வது கிடையாது.

நான் என்னுடைய துணைவியாரின் கருத்தை கேட்கிறேன்; அவர் என்னை வழிநடத்துகிறார் என்று சொன்னால், அதிலென்ன வெட்கக்கேடு?

இரண்டு நண்பர்கள் இருக்கிறோம் - நண்பருடைய கருத்தை கேட்டு நடக்கிறோம். நகுதற் பொருட்டன்று நட்பு - இடித்துரைக்க வேண்டும் - திருத்தவேண்டும்.

கணவன் தவறு செய்தால், மனைவி திருத்தவேண் டும்; மனைவி தவறு செய்தால் கணவன் திருத்த வேண்டும்.

ஆகவே, அந்த சிந்தனைகளையெல்லாம் உரு வாக்கிக் காட்டிய இயக்கம்  - சுயமரியாதை இயக்கம். அந்த சிந்தனைக்கு வித்திட்ட தலைவர் தந்தை பெரியார்.

அதற்கு அடையாளமாக கடைசி வரையில், இந்த இயக்கத்தைத் தனக்குப் பிறகு, ஒரு பெண்ணை தலைமை தாங்கக் கூடிய ஆற்றல் உள்ளவராக ஆக்கிய இயக்கமும் - இந்தியாவிலேயே, ஒரு நாத்திக இயக்கத்திற்கு அன்னை மணியம்மையார் என்ற அந்தப் புரட்சித் தாய்தான் மிக முக்கியமாக தலைமையேற்று வழி காட்டினார்.

வீராங்கனையார்

அன்னை மணியம்மையார்

உண்மையாகவே புரட்சியினுடைய அடையாளம் என்பதுதான் இராவண லீலா.

அன்னை மணியம்மையார் அவர்களின் துணிச் சலுக்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுகிறேன்.

நாங்கள் எல்லாம் நெருக்கடி நிலை காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருந்தோம்.

அன்றைய கவர்னருடன்,  மத்திய உள்துறை அமைச்சரும் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அன்னை மணியம்மையார் சென்று, ‘‘எங்களுடைய தோழர்களை எதற்காக கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருக்கிறீர்கள்; அவர்கள் செய்த தவ றுஎன்ன?'' என்று கேட்டார்.

‘‘வெளியில் விடச் சொல்கிறோம்; ஆனால், நீங்கள் தி.மு..வை ஆதரிக்கவில்லை என்று சொல்லுங்கள்; உங்கள் தோழர்களை உடனே வெளியில் விட்டு விடுகிறோம்''என்றனர்.

உடனே, அன்னை மணியம்மையார், கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி, ‘‘எங்கள் கொள்கையை நீங்கள் நிர்ணயிப்பதா? எங்கள் தோழர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலையில் இருக்கட்டும்; அல்லது அங்கேயே சாகட்டும்'' என்றார்.

இந்த தைரியம் இருக்கிறதே, அதுதான் வீராங் கனையார் அன்னை மணியம்மையார்.

இப்படி ஒரு இயக்கம் - இப்படி ஒரு தலைமை - அவ்வளவு சொத்துகளையும் மக்களுக்கானதாக்கி - தனக்கென்றோ, தனது உற்றார் உறவினருக்கென்றோ செய்யாத ஒரு தியாகம் - வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கின்றார். தனக்குப் பிறகும் இருக்கக்கூடிய ஓர் இயக்கம் என்று சொன்னால், இந்த இயக்கத் தினுடைய தியாகமும், நாணயமும், நன்மதிப்புப் பற்றியும் எத்தகைய அளவிற்கு மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கவேண்டும்?

 திராவிடம் வெல்லும்!!

அதை வரலாறு இனி சொல்லும்!!!

எனவேதான், ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், யார் எதிர்த்தாலும், திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! அதை வரலாறு இனி சொல்லும்!!! என்பதை எடுத்துக்கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

மகளிர் கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்திய மகளிர் தோழர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க  அன்னையார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

Comments