காக்கி உடையணிந்த பெருச்சாளிகளா?
* உ.பி. காவல் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச் சாராயம் அடங்கிய 1450 பெட்டிகள் மாயம் - எலிகள்தான் காரணமாம் - காவல்துறைத்தரப்பில் விளக்கம்.
>> ஆமாம். காவல் துறையிலேயே கருப் பாடுகள், பெருச்சாளிகள் உண்டே!
இன்னொரு டில்லியா?
* கருநாடகத்தில் மேகதாது அணை கட்டப்படுவதை எதிர்த்து கருநாடகத்துக்குச் செல்ல முயன்ற 170 விவசாயிகள் சத்தியமங்கலத்தில் கைது.
>> இன்னொரு டில்லி விவசாயிகளின் போராட் டம் நடைபெற்றாலும் ஆச்சாரியம் இல்லை.
நம்பித் தொலைக்க வேண்டியதுதான்!
* கேரளாவில் மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
- சி.பி.எம். தேசிய செயலாளர்
சீதாராம் யெச்சுரி குற்றச்சாட்டு
>> நம்புங்கள்! தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்குகிறதாம்.
இப்படி பேசும் நிலை ஏற்பட்டு விட்டதே!
* மோடி அமித்ஷா காலடியில் தமிழக ஆட்சியாளர்கள்.
- ராகுல்காந்தி
>> அண்ணா பெயரில் உள்ள கட்சிக்கு இவ்வளவுப் பெரிய அவமானமா?
கஜானாவைத் தூர்வாரி விட்டார்களே!
றீ ஆறு குளங்களைத் தூர் வாருவதை தவிர்த்து கஜானாவைத் தூர்வாரி விட்டார்களே!
- டி.டி.வி. தினகரன் தாக்கு
>> எப்படியோ தூர்வாரினோமா இல்லையா? - இது நல்ல காரியம்தானே என்று ஆளும் கட்சியினர் கூறுவார்களோ!
பள்ளிப் படிப்புப் புள்ளிக்கு உதவாது!
* புதையல் இருப்பதாகத் தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பரிதாப மரணம்.
>> பாடத் திட்டத்தில் பகுத்தறிவுச் சிந்தனை தேவை.
பக்திக்கான விலையோ!
* திருத்தணி முருகன் கோயில் - பங்குனி உத்தர திருவிழாவின் போது கோயில் குளத்தில் மூழ்கி இருவாலிபர்கள் பரிதாப சாவு.
>> என்று மடியும் இந்த மூடப் பக்தி?
டீக்கடை நகரா?
* தி.நகரில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்
- 'தினமணி' செய்தி
>> அது என்ன தி.நகர்? அப்படி ஒரு நகர் இருக்கிறதா? தியாகராயர் நகர் என்று சொன்னால் நாக்கு அழுகி விடுமா? ஏன் அந்த வெள்ளுடைவேந்தர் பெருமான்தானே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டியவர் - ஆத்திரம் வராதா? கொஞ்ச நாள் கழித்து... அங்கே டீக்கடைகள் அதிகம் இருந்ததால் 'டீ' நகர் என்ற பெயர் வந்தது என்று இந்தக் கூட்டமே தல புராணம் எழுதும் - எச்சரிக்கை!
இது யாரையும் குறிப்பிடுவதல்ல!
* மியான்மரில் ஒரே நாளில் 100 பேர்களைச் சுட்டுக் கொன்றது இராணுவம்.
>> இதற்குப் பெயர்தான் பாசிசம் என்பது.