சமூகநீதி எரிமலைவெடிக்கும்!

 உயர் ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சட்ட விரோதம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதம் என்று எல்லா வகைகளிலும் எடுத்துக் கூறியாயிற்று.

ஆனாலும் உயர்ஜாதி பார்ப்பன ஜனதாவான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிதானே நடந்துகொண்டு இருக்கிறது.

இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அடிக்கடி கூறிக் கொண்டு இருக்கும் நிலையில், அதற்குக் கட்டுப்பட்டுதானே பா... அரசு செயல்படும்.

மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்திய காரணத்தால்தானே சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டு, அவ்வாட்சியைக் கவிழ்த்தனர்.

இப்பொழுது அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை அறிக்கையில்கூட எந்த இடத்திலும் இடஒதுக்கீடு என்ற சொல்லே தப்பித் தவறிக்கூட இடம் பெறவில்லையே!

Socio  - Economic Disadvantaged என்ற புதிய சொல்லாக்கத்தைத் திட்டமிட்டே புகுத்தியுள்ளனரே!

'நீட்' தேர்விலும் எப்படி பா... நடந்து கொள்கிறது? தமிழக சட்டப் பேரவையில், தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து விட்டதே!

இன்று வெளிவந்துள்ள அறிவிப்பில் செவிலியர் படிப்புக்குக்கூட 'நீட்' என்று அறிவிக்கப்பட்டுள்ள கொடுமையை என்னவென்று சொல்ல! "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்ற கதையாக அல்லவா இருக்கிறது.

EWS  என்ற உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர்க்கு இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டு மக்களின் அழுத்தம் காரணமாக தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில் தமிழ்நாடு அரசுக்குக் கட்டுப்பட்ட பல்கலைக் கழகங்களில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் புகுத்தி செயல்படுத்த வைத்தது எப்படி?

இதனை சென்னை உயர்நீதிமன்றம் கடிந்து கூறிடவில்லையா? தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கும் போது மத்திய அரசின் 49.5 விழுக்காடு அளவில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அளித்தது யார்?

தமிழ்நாடு அரசுடன் கலந்து ஆலோசிக்காமலேயே நேரடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளும் - அதிகாரத்தை அதன் துணைவேந்தர் சூரப்பாவுக்கு அளித்தது யார்? தானாகவே அந்த அதிகாரத்தை எடுத்துக் கொண்டாரா?

பா...வுக்குக் கடமைப்பட்ட, கட்டுப்பட்ட ஆட்சியாக அதிமுக ஆட்சி ஆகிவிட்டது தானே இந்த நிலைக்குக் காரணம்?

சமூக நீதியில் கை வைத்தால் - தந்தை பெரியாரின் திராவிடப் பூமி - கட்சிகளுக்கு அப்பாற்பட்டமுறையில் எரிமலையாய் வெடிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அது எதிரொலிக்கத்தான் போகிறது.

திராவிடம் வெல்லும்! வெல்லும்!!

Comments