கரோனா விதி மீறல் அபராதம் ரூ.7 கோடியே 38 லட்சத்து 11 ஆயிரத்து 884 வசூல்

சென்னை, மார்ச் 21- கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப் பிடிக்காதவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் தேதியில் இருந்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கரோனா விதிகளை மீறியவர் களிடம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரத்து 692 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ரூ. 3 கோடியே 69 லட்சத்து 45 ஆயிரத்து 192 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 38 லட்சத்து 11 ஆயிரத்து 884 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. இந்த அபராத வசூல் நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு பணி களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவல் அதிகரிப்பால்ஹோலி கொண்டாட்டத்துக்கு ஒடிசா தடை

புவனேஸ்வர், மார்ச் 21- கரோனாவின் 2ஆவது அலை பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் தற்போது அதிகமாக இருக்கிறது. மராட்டியம், குஜராத், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோ னாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று (20.3.2021) ஒரே நாளில் 3,663 பேர் பாதிக்கப்பட்டனர். 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் ஹோலி கொண்டாடக் கூடாது என்று மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக 100-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கட்டாக், குர்தா மாவட்டங்களில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு 110 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் கரோனா அதிகரித்து வருவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Comments