தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டைச் சிதைப்பதா? இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதா?

மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி. அடுக்கடுக்கான வினாக் கணைகள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் (புஷ்பநாதன் வில்சன்) புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர். மாநிலங்களின் ஒதுக்கீட்டு உரிமைகளை கபளீகரம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து மார்ச் 18ஆம் நாள் மாநிலங்களவையில் முழங்கினார். உரையின் சுருக்கம் பின்வருமாறு:

"அவைத் தலைவருக்கு என் பணிவான நன்றி கலந்த வணக்கம்.  மாநிலங்களுக்கு இட ஒதுக்கீடு களில் சட்டபூர்வமாக உள்ள அதிகாரத்தைத் தட்டிப் பறிக்கும் மத்திய அரசின் யதேச்சதிகாரப் போக்கை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே சிற்றுரையாற்ற தாங்கள் வழங்கிய அனுமதியை தற்போது பயன்படுத்திக் கொள்கிறேன். மிகவும் தந்திரமான முறையில், மாநிலங்களுக்குள்ள சட்டப் பூர்வமான அதிகாரங்களைத் தட்டிப்பறிக்க மத்திய அரசு முயன்று வருவதை மதிப்புக்குரிய இந்த மாநிலங்களவை கவனிக்க வேண்டுகிறேன். இந்த முயற்சி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்புக்கே எதிரானது.

மாநில ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றியே ஆகவேண்டும்

1993ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மாநிலச் சட்ட விதியின்படி தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் எங்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக் கழக மாநில ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

தமிழ்நாடு பெரியாரின் மண், அறிஞர் அண்ணாவின் கோட்டை. இங்கே எங்கள் மாணவச் செல்வங்களுக்கு மத்திய அரசால் சமூக அநீதி நிகழுவது முறையாகுமா? அதுதானே இப்போது நடந்து கொண்டிருக்கிறது!

உயிரி தொழில் நுட்பவியல் எனும் பயோடெக் னாலஜி பாடப் பிரிவில் முதுகலைப் பட்டப் படிப்பை 1985 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் வழங்கி வருகிறது. பயோ டெக்னாலஜி துறையின் முழு ஆதரவுடன் இது நடந்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் நிருவகித்து வரும் துறை இது. அண்ணா பல்கலைக் கழகம் நீண்ட காலமாகவே இந்தப் படிப்பின் சேர்க்கைக்கு 69 சதவிகித ஒதுக்கீடு வழங்கி வந்துள்ளது.

மாநில உரிமையை பறிப்பது சமூக அநீதி அல்லவா?

ஆனால் இதே படிப்பிற்கு 2020 கல்வியாண்டு முதல் 27 சதவிகித இடஒதுக்கீடுதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி மத்திய அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் இதன்படி மாணவர் சேர்க்கை நடத்தாவிட்டால் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் மிரட்டியுள்ளது. கல்விக்கான உதவித் தொகை மூலம் மாநிலங்களின் இடஒதுக்கீடு உரிமை மத்திய அரசால் பறிக்கப்படுவது சமூக அநீதி அல்லவா?

2006ஆம் ஆண்டின் மத்திய இடஒதுக்கீட்டு விதி மாநிலப் பல்கலைக் கழகங்களுக்குப் பொருந்தாது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநிலம் விட்டுக் கொடுத்த இடங்கள் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீட்டை நிர்ணயித்து ஆணையிட்டன. ஆனால் நடைமுறையில் அதன்படி செயல்படுத்தப்படவில்லை.

பழைய சட்டத்தை தகர்த்தெறியும் முயற்சி

இடஒதுக்கீட்டு விஷயத்தில் சுமார் முப்பது ஆண்டுகளாக நிலைத்து வரும் பழைய சட்டத்தை தகர்த்தெறியும் முயற்சி தற்போது நடந்து வரு கிறது. எல்லாவிதத்திலும் ஒடுக்கப்பட்டுள்ள பிற்படுத்தப் பட்ட சமூகத்தினரின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரம் போன்ற அந்தச் சட்டத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இதனால் மன உளைச்சலும் அச்சமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளன.

நிலையாக  உள்ள, உறுதி செய்யப்பட்டு விட்ட அரசமைப்புச் சட்ட விவகாரங்களை மீண்டும் கிளறி பிரச்சினையை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருவது வேதனையளிக்கிறது. 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப்பின் புதிய சட்டம் கோர மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது எந்த அடிப்படையும் இல்லாத,  ஏற்றுக் கொள்ளவே முடியாத 'விதண்டாவாதம்' என்றே கூறலாம்.

உறுதியாக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்படலாமா?

இந்த தேவையற்ற குழப்பத்தின் மூலம் மத்திய அரசு என்ன தான் சொல்கிறது மாநிலங்களுக்கு? ஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்டப் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல் மாநிலங்களுக்கு இல்லை என்பது இதன் பொருளா? ஒற்றை முறை ஆட்சி யைப் பின்பற்றும் நாடாகி விட்டதா நம் இந்தியா? மாநிலங்களின் ஒருங்கிணைந்த கூட்டாட்சி நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாயிற்றே? அது காலாவதியாகி விட்டதா? அரசமைப்புச் சடட்த்தின் 102ஆவது விதியைத் திரித்துக் கூறி, மாநிலத் திற்கு உறுதியளிக்கப்பட்ட சட்டபூர்வமான அதிகாரம் பறிக்கப்படலாமா? இது அதிகார வரம்புமீறல் அல்லவா?

எல்லோரும் ஒருங்கிணைந்து ஒன்றுப்பட்டு பெரும்பான்மை இந்திய மக்களுக்காக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாநிலங்களின் ஒருங்கிணைந்த கூட்டாட்சி என்பதே இந்திய அரசமைப்புச் சட்டம் .உருவாக்கிய கட்டடம் போன்றது. ஒவ்வொரு செங்கல்லாகப் பெயர்த்தெடுத்து அதை தரைமட்டமாக்கும் விஷமச் செயல் தான் தற்போது நடந்து வருகிறது. மிகுந்த மனவேதனையுடன் இப்படிச் சொல்ல வேண்டியுள்ளது. மனக்கண்ணால் நாங்கள் கண்ட மாநிலக் கூட்டாட்சி இன்று எங்கள் கண் முன்பே அபாயகரமான நிலையில் உள்ளது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்குமிடையே தீர்மா னிக்கப்பட்ட எல்லைக் கோடு நீண்ட காலமாகவே உள்ளது. அந்த எல்லைக்கோட்டை இரு தரப்பினரும் மீறாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை.

மத்திய அரசு அழிக்க நினைக்கலாமா?

விவரிக்க இயலாத கடும் போராட்டங்களுக்குப் பின்தான் அரசமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீடு பெற்றோம் நாங்கள். எத்தனையோ பேர் இதற்காகவே உயிர்த் தியாகம் செய்துள்ளனர். கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடுகள் பெற ஏராளமான தொண்டர்களும் தோழர்களும் வியர்வை சிந்தி, குருதி கொட்டிப் போராடியது வரலாற்றுப் பதிவு. இப்படிப் போராடிப் பெற்ற பலன்களை மத்தியஅரசு அழிக்க நினைக்கலாமா?

மாண்புமிகு சட்ட அமைச்சரும், சமூகநீதித்துறை அமைச்சரும் இடஒதுக்கீட்டு விஷயத்தில் இதுவரை ஆதரவளித்து வந்துள்ளனர். பெரு மதிப்பிற்குரிய இந்த அவையில் அவர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் - இடஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு உள்ள அடிப்படை உரிமையையும் அதிகாரத்தையும் தயவு செய்து எவரும் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துக் கொண்டு கபளீகரம் செய்துவிட அனுமதிக்காதீர்கள். அப்படி நடந்துவிட்டால் ஓர் அதிர்ச்சிக்குரிய நிலை தடுமாற்றம் ஏற்படக் கூடும். நமது அரசமைப்புச் சட்டம் சிறந்த முறையில் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லாத ஒரு நிலையை, தக்க விதிகளின் மூலம் ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடாமலிருக்க தங்கள் உதவியை பணிவன்புடன் கோருகிறேன்." என்று தமிழக மக்கள் சார்பில் குரல் கொடுத்து தன் உரையை முடித்துள்ளார் வில்சன்.

Comments