செத்தமொழி சமஸ்கிருதத்துக்கு ரூ.645 கோடி செம்மொழி தமிழுக்கு வெறும் ரூ.23 கோடியா?

தமிழ்வேடம் போடுவோரை அடையாளம் காண்பீர்!

கும்பகோணம் பொதுக்கூட்டத்தில்  தமிழர் தலைவர் முழக்கம்

கும்பகோணம், மார்ச் 22  ‘‘செத்தமொழி சமஸ் கிருதத்துக்கு ரூ.645 கோடி; செம்மொழி தமிழுக்கு வெறும் ரூ.23 கோடியா? தமிழ் வேடம் போடுவோரை அடையாளம் காண்பீர்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் உரை

கடந்த 13.3.2021 அன்று மாலை  கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் -

கைப்பற்றப்பட்ட புள்ளி  விவரத் தகவல்களும்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - அதில் கைப்பற்றப் பட்டது - யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதைப் பற்றிய புள்ளி விவரத் தகவல்களை எடுத்து வைக்கிறார்கள்.

அதனால் இவர்கள் சர்வ அடிமைத்தனம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வாய்ப்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி - இதற்கு முடிவு கட்டக்கூடிய வாய்ப்பு - ஜனநாயக ரீதியில் வரக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ரொம்பப் பெருமையாக இந்த ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள், ‘‘மாவட்டத்திற்கு மாவட்டம் நாங்கள் மெடிக்கல் காலேஜ் கட்டிவிட்டோம்'' என்று.

கட்டிய மெடிக்கல் காலேஜை திறந்து வைத்துவிட்டு, அடுத்த ஊருக்குப் போகிறார். அவர் சென்றவுடன், ‘‘டப டபவென'' கீழே விழுகிறது.

ஏனென்றால், கட்டியவன் ஊழல் அங்கே - இதுவரையில் எங்கேயாவது திறந்து வைத்த கட்டடம் ஒரு வாரத்தில் கீழே விழுந்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

காரணம் என்ன?

சிமெண்ட் போட்டு கட்டுவதற்குப் பதில், மணலை வைத்துக் கட்டுகிறார்கள்.

மூன்று ‘‘C''-களோடு நான்காவது ‘‘C''

இதைத்தான் தளபதி ஸ்டாலின் அவர்கள் எல்லா இடங்களிலும் சொல்கிறார்.

கமிஷன் - கலெக்ஷன் - கரெப்ஷன்

எல்லாம்ஷன்'தான்; மூன்று சி மட்டுமல்ல; நான் காவது சி ஒன்றும் உண்டு. அதுதான்Crores    - கோடிக் கணக்கில் கொள்ளை.

அணை கட்டிவிட்டு வருகிறார்கள் - அணை உடைந்துவிடுகிறது. கட்டியவன், சிமெண்ட்டிற்குப் பதில் மண்ணை போட்டு கட்டியதால்.

வெள்ளைக்காரன் கட்டிய முக்கொம்புக்கு அரு கில் கட்டிய அணை உடையவில்லை. இவர்கள் கட்டிய அணை திறந்து வைத்தவுடன் உடைந்து போயிற்று.

அணை என்ன மோடிக்குப் பயப்படுமா? நீங்கள்தான் மோடிக்குப் பயப்படுவீர்கள்.

அணை கட்டியதில் ஊழல் - எந்த அளவிற்கு நீங்கள் யோக்கியர்கள் - நாங்கள் இதைச் சொல்லவில்லை - நாங்களும் இதைப்பற்றி பேசமாட்டோம்!

முகக்கவசம் வாங்குவதிலும் ஊழல்!

இன்றைக்கு நீதிமன்றம் சொல்கிறது - கரோனா காலத்தில் எல்லோரும் முகக்கவசம் போட்டுக்கொள் ளுங்கள் என்று சொல்கிறோம். முகக்கவசம் செய்வது இப்பொழுது ஒரு தொழில்- இண்ட்ஸ்ட்ரீ போன்று வந்தாயிற்று. அதை இலவசமாக வாங்கிக் கொடுக் கிறோம் என்று சொல்லி, 2 ரூபாய்க்குக் கிடைக்கும் முகக்கவசத்தை, 8 ரூபாய், 10 ரூபாய் என்று பில் போடச் சொல்லி, கோடிக்கணக்கான ரூபாய்  ஊழல் என்று வந்தபொழுது,

அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டு, அந்தத் டெண்டரையே கேன்சல் செய்தது நீதிமன்றம்.

கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போன்று - மத்திய அரசுக்கு நீங்கள்ராமா ராமா' என்று ஆடக் கூடிய அளவிற்கு, மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறார்கள்.

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டமா? உடனே .தி.மு.. உறுப்பினர்கள் கைதூக் குவார்கள் - அல்லது வாக்களிக்காமல், தந்திரமாக வெளியே சென்றுவிடுவார்கள்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கிடைத்தால்தான், உங்களுடைய கட்சி வேட்பாளரான குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் எங் களுடைய உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று சொல்லியிருந்தால், நீட் தேர்விலிருந்து விலக்குக் கிடைத்திருக்கும் அல்லவா?

நல்ல வாய்ப்பாக மாநிலங்களவையில் போதுமான ஆதரவு பா...விற்கு இல்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா இங்கே இருக்கின்ற ஆட்சியாளர்கள். அரசியல் சாதுர்யம் இருந்திருந்தால், அதனைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

நீங்கள் முதுகெலும்போடு

சொல்லியிருந்தால்...

நீட் தேர்விலிருந்து எங்களுக்கு விதி விலக்குக் கொடுத்து, எங்கள் மசோதாவிற்கு ஒப்புதல் அளி யுங்கள். பிறகு நாங்கள் உங்களுடைய மசோதாவிற்கு வாக்களிக்கிறோம் என்று நீங்கள் முதுகெலும்போடு சொல்லியிருந்தால், நீட் தேர்விலிருந்து விலக்குக் கிடைத்திருக்கும் அல்லவா?

இஸ்லாமியருக்கு, சிறுபான்மையினருக்கு எதிராக இருந்த சட்டம் நிறைவேறியதற்குக் காரணம் யார்? .தி.மு.. வாக்களித்ததினால்தானே என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்!

அதுமட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்துகிறார்கள்; ஒரு சிறு அசம்பாவிதம் கிடையாது. அரசியல்வாதிகளே நீங்கள் வராதீர்கள், இது எங்களுடைய பிரச்சினை என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களில், நாடாளுமன்ற முறைகள் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறதா? இல்லையே!

உங்களுடைய பிள்ளைகளுக்காக...

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது, அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்திற்கே விரோதமானதாகும். அதை எதிர்த்து ஓட்டுப் போட்ட ஒரே இயக்கம் - மாநிலங்களவையில் கூடாது என்று சொன்ன ஒரே இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் கனிமொழி அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழிகாட்டக் கூடிய தாய்க்கழகமான திராவிடர் கழகம் - சமூகநீதி என்பது நம்முடைய பிள்ளைகளுக்காக - உங்களு டைய பிள்ளைகளுக்காக.

நீங்கள் கேட்கலாம், உயர்ஜாதியினரில் ஏழைகளுக் காகத்தானே 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக் கிறார்கள் என்று.

மாதத்திற்கு 68 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றவர்கள் ஏழைகளாம்!

எவ்வளவு பெரிய பித்தலாட்டம் செய்திருக் கிறார்கள் என்பதற்கு அடையாளம் என்ன வென்றால் நண்பர்களே, ஏழை என்று  அவர்கள் யாரைச் சொல்கிறார்கள் தெரியுமா?

மாதத்திற்கு 68 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றவர்கள் - மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டப்படி ஏழை.

அதுமட்டுமல்ல, 5 ஏக்கர் நிலம் வைத் திருந்தால் ஏழை.

இப்படியொரு சட்டத்திற்குக் கை தூக்கி நீங்கள் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினீர்களே, அதற்காகவாவது .தி.மு.. ஆட்சியை - அடிமை ஆட்சியை தமிழ்நாடு தண்டிக்கவேண் டாமா?

விவசாய சட்டங்களுக்கு ஆதரவு - அதனால் விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்கிறீர்கள்.

அண்ணாவின் கொள்கை என்ன?

மாநிலத்தில் சுயாட்சி -

மத்தியில் கூட்டாட்சி!

மாநிலத்திற்கு உள்ள உரிமைகளை இன்னும் அதிகப்படுத்தவேண்டும். நாம் பிச்சை கேட்கக்கூடாது.

India, that is Bharat, shall be a union of states"

இதுதான் அரசமைப்புச் சட்டத்தினுடைய முதல் விதி.

அதாவது, பாரதம் என்று அழைக்கப்படக்கூடிய இந்தியா, பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு கூட்டாட்சி.

இது  எதேச்சதிகார ஆட்சியல்ல - எல்லா அதிகாரங் களையும் இன்றைக்கு மத்திய அரசே நடை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறதே - அதனை எதிர்த்து இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்த்துப் பேசியிருப்பார்களா?

தீர்மானம் போட்டார்கள் - அதற்குக் காரணம் சொல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள் - அதை ஏன் என்று கேட்கக் கூடிய தெம்பு இல்லை.

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய

கொள்கை என்ன?

தமிழ் மேல் பற்று வந்ததுபோன்று இப் பொழுது மத்திய பா... ஆட்சியினர் வேடமணிந்து வருகின்றனர். பாரதியார்பற்றியும், திருவள்ளுவர்பற்றியும் பேசுகிறார்களே, அது உண்மையா? இது யார் எழுதி கொடுத்த வசனம்? ஆனால், நடைமுறையில் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை என்ன?

ஒரே  நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஒரே ரேசன் கார்டு, ஒரே கட்சி - இவைதான்.

அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட் டோம் நாங்கள், இதுவரை கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.

எல்லாவற்றிற்கும் ஒரே ஒரே என்று சொல் கிறீர்களே - அதுபோல, அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்லலாமே - அப்படி சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காதே - அப்படி சொன்னீர்கள் என்றால், நாங்களும் வரவேற்கிறோம் என்று சொன்னோம் - இதுவரை அதற்குப் பதில் உண்டா?

எனவே, ஒரே மொழி என்று அவர்கள் சொல்வது - சமஸ்கிருதம். இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், அவர்கள் கொடுத்திருக்கின்ற புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்ற புள்ளி விவரத்தை நான் சொல்கிறேன் - அதுகூட சரியானது என்று சொல்ல முடியாது; வாதத்திற்காக எடுத்துக் கொள்வோம், 25 ஆயிரம் பேர்தான் சமஸ்கிருதம் படிக்கின்றார்களாம்.

130 கோடி மக்கள் தொகை எங்கே? அதில் 25 ஆயிரம் பேர் என்றால், புள்ளி வைத்து  பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம் போட்டு அதற்குப் பிறகு நான்கு பூஜ்ஜியம், பூஜ்ஜியம் போட்டு அதற்குப் பிறகு ஒன்று போடவேண்டும்.

25 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குகிறார்கள். தமிழ் மொழியினுடைய பெருமையைப்பற்றி பேசுகிறாரே மோடி, அமித்ஷா, இன்னும் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற வர்கள் பேசுகிறார்களே, அவர்களுடைய நிலை என்ன?

கலைஞர் அரும்பாடுபட்டு, அய்க்கிய முற் போக்குக் கூட்டணியில் - மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தில் தி.மு.. அங்கம் வகித்ததைப் பயன்படுத்தி, தமிழ் மொழிக்கு மொழி அந்தஸ்தை வாங்கினார். தமிழுக்கு  செம்மொழி அந்தஸ்து வந்ததினால், சமஸ்கிருதத்திற்கும் சேர்த்து கிடைத்தது. அதுவும் கலைஞரால்தான் கிடைத்தது.

‘‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு ஆங்கே புசிந்ததாம்'' - அதுபோன்று, அவர் களுக்கும் பயன்பட்டது.

உலக அளவிற்கு புலம்பெயர்ந்த

எல்லா இடங்களிலும் தமிழ்மொழி இருக்கிறது

ஆனால், பல கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழி சிங்கப்பூரில் ஆட்சி மொழி - மலேசியாவில் இருக்கிறது; இலங்கையில் இருக்கிறது - மற்ற மற்ற நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவிற்கு புலம்பெயர்ந்த எல்லா இடங்களிலும் தமிழ்மொழி இருக்கிறது. சமஸ்கிருதம் எங்கே  ஆட்சி மொழி?

ஒரே ஒரு நாடு இந்து நாடு என்று சொல்லக்கூடிய  நாடு இருந்தது முன்பு - அதுதான் நேபாளம் - இன்றைக்கு அதுவும் கிடையாது.

இந்த சூழ்நிலையில், சமஸ்கிருத மொழிக்கு பட்ஜெட்டில் என்ன நிலை?

தமிழுக்காகப் பேசுகிறேன் என்பது

உண்மையா? மாய்மாலமா?

தமிழுக்காகக் கண்ணீர் விடுகிறேன்; தமிழுக்காகப் பேசுகிறேன் என்பது உண்மையா? மாய்மாலமா? ஏமாற்று வித்தையா? நாடகமா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இதோ ஆதாரம்:

2017-2018 இல் பட்ஜெட்டில் சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை 198.31 கோடி ரூபாய்.

2018-2019 இல் பட்ஜெட்டில் சமஸ்கிருத வளர் ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை 214.38 கோடி ரூபாய்.

2019-2020 இல் பட்ஜெட்டில் சமஸ்கிருத வளர்ச் சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை  231.15 கோடி ரூபாய்.

ஆக மொத்தம் 643.84 கோடி ரூபாய்.

செம்மொழி நிறுவனத்தை தினக்கூலி பெறக்கூடிய ஒரு நிறுவனம் போன்று ஆக்கியிருக்கிறார்கள்!

தமிழுக்காக கசிந்துருகி, ஆகா, ஆகா தமிழை நான் படிக்காமல் விட்டுவிட்டேனே என்று நாடகமாடும் மத்திய பா...வினர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து நிறுவனத்தையே சிதைத்து,  கலைஞர் கொடுத்த பணத்திலிருந்து கொடுக்கப்படும் விருதுகூட கொடுக்கவில்லை; மைசூரிலிருந்த நிறுவனத்தை கலைஞர் அவர்கள் கஷ்டப்பட்டு இங்கே கொண்டு வந்தார். இன்றைக்கு அதையும் சிதைத்து, இன்றைக்கு அதை ஒரு பல்கலைக் கழகத்தில், ஒரு சாதாரண இலாகாவினுடைய பிரிவு போன்று அடைத்து - தினக்கூலி பெறக்கூடிய ஒரு நிறுவனம் போன்று ஆக்கியிருக்கிறார்கள்.

தினக்கூலி பெறுவதற்கு யாரும் எந்த ஆராய்ச்சியாளரும், எந்தப் புலவரும், எந்த வல்லுநரும் வருவதற்குத் தயாராக இல்லை. அந்த நிறுவனத்திற்கு வருவதற்கு.

தமிழுக்கு  மத்திய அரசு எவ்வளவு நிதி  ஒதுக்கி யிருக்கிறார்கள்  தெரியுமா?

2017-2018 இல்  10.59 கோடி ரூபாய்

2018-2019 இல் 4.65 கோடி ரூபாய்

2019-2020 இல் 7.7 கோடி ரூபாய் 

செத்த மொழிக்கு ரூ.645 கோடி;

வாழும் தமிழுக்கு ரூ.23 கோடியா?

ஆக மொத்தம் செம்மொழி தமிழுக்கு 22.94 கோடி ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

645 கோடி ரூபாய் செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு - வாழும் மொழி தமிழுக்கு 23 கோடி ரூபாயா?

தமிழ் அடையாளம் காட்டி வந்தால் எங்கள் தமிழ் மக்கள் ஏமாந்துவிடுவார்களா? வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக, அய்யோ, நான் தமிழ் படிக்காமல் விட்டுவிட்டேனே என்று சொன்னீர்கள் என்றால், அந்த அடையாளத்தைக் கண்டு, அந்த முகமூடியைக் கண்டு ஏமாந்துவிடுவார்களா?

உங்கள் முகமூடியைக் கழற்றிவீசி, உங்கள் அடையாளத்தைக் காட்டுகின்ற நாள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதி.

நம்முடைய வாக்காளப் பெருமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் - ஏமாறமாட்டார்கள்.

எனவே, உங்கள் பிள்ளைகளுடைய கல்வியை நினைத்துக் கொள்ளுங்கள் - தி.மு..விற்கு வாக் களிப்பது ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு என்று நீங்கள் நினைக்காதீர்கள் - உங்கள் பிள்ளை களுடைய பாதுகாப்பிற்காக - உங்கள் சந்ததியினுடைய பாதுகாப்பிற்காகத்தான்.

வேலை வாய்ப்பு - தமிழ்நாட்டில் நிறைய இளை ஞர்கள் படித்து வேலையில்லாமல் இருக்கிறார்கள்.  வடநாட்டிலிருந்து வந்தவர்கள் சில வித்தைகள் காட்டுகிறார்கள்; சாலையில் நடந்துசெல்லும் பெண் களிடம் செயின் பறிக்கும் சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவங்கள் சாலைகளில் உள்ள கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதையெல்லாம் நியாயப்படுத்த வில்லை?

வங்கியில் கடன் வாங்கி பணம் கட்ட முடியாமல் இருப்பவர்களை மிரட்டுவதற்காக ஒரு அடியாள் கூட்டம் போகிறது - அவர்கள் யார் என்று கேட்டால், எம்.., படித்தவன் கூலிப்படையில் சேர்ந்திருக்கிறான். என்ன காரணம்? வேலையில்லை.

(தொடரும்)

Comments