43 ஆம் ஆண்டில் நமது ஒப்பற்ற தலைவர்!

கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்று 43 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவருக்கு, கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். கிராமப்புற மாநிலப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் மற்றும் தோழர்கள் உள்ளனர் (திருச்சி, 18.3.2021)

தந்தை பெரியார் மறைந்தார் - அவ்வளவுதான் திராவிடர் கழகமும் மறைந்துவிடும் என்று மனப்பால் குடித்தவர்கள் உண்டு.

அன்னை மணியம்மையார் அதே தீரத்தோடு, வீரத்தோடு இயக்கத்தை நடத்திக் காட்டினார்.

அன்னை மணியம்மையாரும் மறைந்தார் - அவ்வளவுதான் தி.. - தீர்ந்தது என்று ஆரியம் பால் பாயாசம் சாப்பிட்டது.

ஆனால், நடந்தது என்ன?

பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி - ஆசிரியர்  மானமிகு கி.வீரமணி அவர்களைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர்.

ஆத்திரப்படவில்லை நமது தலைவர். ஒருசூத்திரன்'  பிணத்தை நாலு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றனரே - இது நம் கொள்கைக்குக் கிடைத்த  வெற்றி என்று கொள்கை உரத்துடன் திருப்பி அடித்தாரே!

பார்ப்பனர்களின் இந்தச் செயல்மூலம் -பார்ப் பனர் அல்லாதாரின் தலைவர் வீரமணியே என்று பார்ப்பனர்களே அடையாளம் காட்டிவிட்டனரே!

எங்கிருந்தாலும் வீரமணி தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார் என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

எங்கள் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடலே என்று தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பிரகடனப்படுத்தி விட்டாரே!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு ஆணையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து அந்த முடிவை மாற்றி அமைத்தவர் யார்?

அதன் விளைவாக 31 விழுக்காடாக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த செய்த உன்னதத் தலைவர் யார்?

இந்திரா - சகானி வழக்கில் இட ஒதுக்கீடு 50 விழுக் காட்டைத் தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், போராடிப் போராடிப் பெற்ற 69 சதவிகிதத்துக்கு ஆபத்து வந்த நேரத்தில் -

இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின் அடிப்படையில், மாநில அரசே சட்டம் செய்து, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று - 9 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டால், நீதிமன்றம் தலையிட முடியாது என்று நுட்பமான சட்ட அறிவோடு கூறியதோடு - அதற்கான சட்ட முன்வடிவையே தயாரித்துக் கொடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை செயல்பட வைத்து - வெற்றி கண்ட வீரர் யார்?

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்று வரும்போது தந்தை பெரியார் பெயர் நினைவிற்கு வரும். 76 ஆவது சட்டத் திருத்தம் என்கிறபோது - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரைத்தான் வரலாறு கூறும்.

பத்து ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்துவதற்காக - இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி, 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி - சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள்மூலம் நிறைவேறுவதற்குசூத்திரதாரி'யாக இருந்தவர் தமிழர் தலைவர் வீரமணிதானே!

அதனால்தானேவீரமணியைப் பார்க்கும் பொழு தெல்லாம் - சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்' என்று வி.பி.சிங் புகழாரம் சூட்டினார்!

பல வண்ணங்களில் 8 பக்கவிடுதலை'; சென்னை யோடு நில்லாமல், திருச்சியில் மற்றொரு பதிப்பு. அலை அலையாக இயக்க வெளியீடுகள். இயக் கத்தினை இளைஞர்களின் பாசறையாக உருவாக்கிய பான்மை.

- இன்னும் எத்தனை எத்தனையோ! எழுதிக் கொண்டே போகலாம், ஏடும் தாங்காது.

தந்தை பெரியார் தம்மீது வைத்த நம்பிக்கையைத் தாளம் தப்பாமல், நாணய பலத்துடன் நிமிர்ந்து நிற்கும் - ‘நின்ற சொல்லர்!' (நற்றிணை) நம் ஆசிரியர்.

கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 43 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் தலைவர் வாழிய, வாழிய - நீடூ வாழியவே!

தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணி முடிப்போம்!

10 வயதில் பாதம் பதித்து, 88 ஆம் ஆண்டிலும் பம்பரமாகச் சுழலும் தலைவரின் தொண்டறப் பணி - நம் இயக்கத்தையும் கடந்து, பொது வாழ்க்கையினர் அனைவருக்குமே ஓர் எடுத்துக்காட்டு - இலக்கணச் சுத்தம்!

புத்தம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி!

வெல்க திராவிடம்!

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்

Comments