கால வெள்ளத்தில் அழிந்திடாச் சாதனை தந்தை பெரியார் போட்ட விதை “முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்” புத்தகம் - அண்ணாவின் எட்டு உரைகள் (2)

- முனைவர் பேராசிரியர் -

..மங்களமுருகேசன்

நேற்றையத் (18.3.2021) தொடர்ச்சி

அறிஞர் அண்ணா அன்றே எச்சரித்ததை இன்றும் உணர வேண்டும். ஏனெனில் 'பி.ஜே.பி. அரசினால் ஜீவநாடிகள்' என அண்ணா குறிப்பிட்டவற்றிற்கு வந்துள்ள ஆபத்துக்கள்.

1) தமிழ் மொழி - இதுவே நாம் தமிழர் என்பதைக் காட்டுகிறது. இதற்கு ஆபத்து வந்து விட்டால் நமது ஒற்றுமை, கலை, நாகரிகம் யாவும் நாசம்! ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள்.

2) வகுப்புவாரி பிரதிநிதித்துவம். இது சமூகத்திலே ஒரே வகுப்பார் - ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது. சகல வகுப்பாரின் பிள்ளை குட்டிகளுக்கும் இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள், தாசர்களாகத்தான் வாழவேண்டும். இது நியாயமா? ஆகவே வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தைக் காப்பாற்றியே தீர வேண்டும்.

இப்போது புரிகிறதா அண்ணாவின் உரைகள் எவ்வளவு முதன்மையானவை. ஏன் ஆவணம் என்பது விளங்குகிறதா? எனவே இந்த உரைத்தொகுப்பு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை போன்றது, நீதிக்கட்சி வெளியிட்ட கொள்கைப் பிரகடனம் போன்றது.

உரையின் இறுதியில் அண்ணா அன்று விடுத்த எச்சரிக்கை இன்றும் நம் அனைவர் காதுகளிலும் ஒலிக்கட்டும்-

தமிழா! நீ எங்கு இருந்தாலும் சற்று ஜாக்கிரதையாகவே இரு உஷார்

இந்த ஒரு பேச்சு போதும் ஏன் இப்புத்தகம் அனைவர் கையிலும், நம்மவர் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்கு.

இருப்பினும் வேறு சொற்பொழிவுகளில் உள்ள ஒளிவிளக்கை, மணியைத் தொட்டுக் காட்டிவிட விழைகிறேன்.

'சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப் பூர்வமாக்குவோம்' உரையில்என்னுடைய பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார் அவர்களேஎன்று தொடங்குகிறார்.

சுயமரியாதை இயக்கம் மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டுமென்பதற்குப் பாடுபடும் இயக்கம்.

நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் - தந்தை மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டு வந்து கொடுப்பதைப் போல் நாங்கள் பெரியாரவர்களிடம் இக்கனியைச் (சட்டத்தை) சமர்ப்பிக்கிறோம்.

பல வருடங்களுக்கு முன் நான் என்திராவிட நாடுபத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள், பல நாட்டுப் பேராசிரியர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்புத் தந்தபோது நமது தமிழகத்தின் 'முதல் பேராசிரியர்' பெரியார் என்று எழுதி இருக்கிறேன். அவர் சமுதாயத் துறையில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் வளரவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும். அதுபோல மனவளம் பெற்றவர்களால்தான் பெரியார் கருத்துகளை வளர்க்க முடியும்.

"இன்று முதல் நானிருக்கின்ற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். அவரிருக்கின்ற இடத்தில் நான் இருப்பேன்.”

ஒரே நாடு, ஒரே மொழி, என்றும், வலிமை வாய்ந்த மய்ய அரசு என்றும் பேசும் சங்கிகளுக்கு, காவிகளுக்கு அண்ணா செவுளில் அறைந்தது போல் அன்றே பதில் கூறியிருக்கிறார்.

தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில - மத்திய அரசுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும். பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்குப் பலம் எதற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவிதமான சிறு விஷயங்களிலும் மத்திய அரசே அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பதன் விளைவு; பெரிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால்தான் அதிகாரங்கள் டில்லியில் குவிக்கப்படக்கூடாது என்கிறோம். ஆகவே வலுவான மத்திய அரசுதான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது தவறு. மேல் அதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது

அண்ணா எப்படிப்பட்டவர் என்பதற்குஇந்திக்கு இங்கு இடமில்லைஎனும் உரையில் அவரே சொல்லியவை இவை! “அவ்வளவு சுலபத்திலே பிடி கிடைக்குமாறு நான் தவறு செய்யமாட்டேன். ரொம்பத் தேடித்தேடி பார்ப்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது இருந்தால் பார்க்கலாம். அவ்வளவு சுலபத்தில் பிடி கிடைக்காது. ஏனென்றால் சுயமரியாதைக் காலத்திலேயிருந்து எதையும் துருவித்துருவி ஆராய்ந்து பழக்கப்பட்டவன் நான். மற்றவர்களும் துருவித்துருவிப் பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆகையால் என்னுடைய வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகத் தானிருக்கும்''

 இறுதியாக இப்புத்தகத்திற்கு ஆசிரியர் கி.வீரமணி எப்படித் தொலைநோக்கோடும் நுண்ணிதின் ஆராய்ந்து மிகமிகப் பொருத்தமாகமுறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்' என அறிஞர் அண்ணாவின் கருத்து மணிகளிருந்து தேர்வு செய்து தந்துள்ளார் என வியக்கிறேன். கடைசி உரை தலைப்புக் கொடுத்துள்ளது.

அறிஞர் அண்ணாவே வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சி என்பதைத் தெள்ளிதின் உணர்ந்துநீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் கலந்து கொள்கின்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்என்று கூறியவர் அடுத்து உரைப்பது கண்களில் நீரை வரவழைக்கும்.

நான் இந்த மகிழ்ச்சி விழாவில் கலந்து கொண்டால், அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரக்கூடுமென்று என் உடல் நலத்தில் அக்கறையுள்ள டாக்டர்களும், நண்பர்களும்  தடுத்தனர். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. இத்தகைய வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். பலமுறை வருவதில்லை. இன்றைய தினம் நான் பேசுவதால் இந்த உடலுக்கு ஊறு நேருமென்றால் இந்த உடல் இருந்தே பயனில்லை என்று நான் கூறி எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொண்டேன்

வைதீக முறையில் இவ்வாறு மதச் சம்பந்தமில்லா சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டின் ஏராளம் நடைபெற்றும் அவை செல்லாது என்று கூறிவிட்ட நிலை இருந்தது. அவற்றைச் செல்லுபடி ஆக்கச் சட்டம் செய்கிறோம்.

'தமிழ்நாட்டிற்கு இந்தி தேவை இல்லை' எனக்கூறி சட்டமன்றத்தில் இந்தி ஒழிப்புத் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றினோம்.

'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்தினையும் செய்திருக்கிறோம்.

இம்மூன்றும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கச் செய்திருக்கும் சாதனைகளாகும். எங்களை ஆட்சியி லிருந்து நீங்கள் இன்னும் 5 ஆண்டுகள் கழித்தோ, 10 ஆண்டுகள் கழித்தோ எங்களை அனுப்பிவிட்டு இந்த இடத்தில் அவர்கள் வந்து உட்கார்ந்தால் கூட இவைகளை மறுபடியும் மாற்றும் துணிவு அவர்களுக்கு நிச்சயமாக இருக்காது. அப்படி அவர்கள் ஒரு கண நேரம் தலையைக்குனிந்து சிந்திக்கும்போது இதில் கைவைத்தால் என்ன ஆகும் என்று நினைக்கிற நினைப்பு இருக்கும் வரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுகிறது என்பதுதான் பொருள். எனவே தான் அவற்றை வரலாற்றுச் சிறப்புக்குரிய சாதனை என்று கூறுகிறேன்

எனவே நாம் மேலே குறிப்பிட்டதுபோல் அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்தவர்கள் அறிஞர் அண்ணாவின் உரைகளைப் படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும்.

அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ மதிமுக, திமுக தோழர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டும். ஆதிக்க வெறி கொண்டு அரசோச்சுவோருக்கு எதிராக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.  (நிறைவு)

Comments