கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்கள் குருதிக் கொடை செய்யக்கூடாது

 சென்னை, மார்ச் 16  கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு குருதிக் கொடை செய்யக்கூடாது என சுகாதாரத் துறையினர் அறி வுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, சர்க்கரைநோய், சிறுநீரகப் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறும்போது, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், அசல் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும். 45 வயது முதல் 59 வயதுள்ளவர்கள், தங்களுக்கு இணை நோய் உள்ளது என்பதற்கான மருத்துவ சான்றை சமர்ப்பிக்க வேண்டும். முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 28 நாட்களுக்கு குருதிக் கொடை செய்யக்கூடாது. அந்த காலகட்டத்தில் நோய்எதிர்ப்புத் திறன் உருவாகும். அதன் பிறகு குருதிக் கொடை செய்யலாம் என்றார்.

Comments