தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தவித்த வாய்க்குத் தண்ணீர்!

* இந்திய ஒன்றியத்தில் முதன் முறை யாக நதிகள் இணைப்புத் திட்டம் தந்தது கலைஞர் ஆட்சி.

* கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி குண்டாறு நதி இணைப்புத் திட்டம்.

* தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி இணைப்புத் திட்டம்

* கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம்

* ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்

* ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம்

* அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம்

* திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் - இவற்றை செயல்படுத்தி காட்டிய திமுகவுக்கும் அதன் கூட்டணிக்குமே வாக்களிப்பீர்!

நம் சுயமரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்

தளபதி மு..ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

உயிர் பிரிகிற வரையில் காவிரிக்காக போராடியவர் கலைஞர் என்றும், இந்த தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் மு..ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

தஞ்சை கோட்டையில் கலைஞர் கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கலைஞரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா விவசாயிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்களே  யாரைப் பார்த்து அவ்வாறு பேசுகிறீர்கள்?.

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து 50 ஆண்டு காலம் காப்பாற்றியவர் கலைஞர். அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தித்துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகிதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் கலைஞரை பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார். அவர் பேசலாமா?.

தீர்ப்பை பெற்று தந்தார்

கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் பிறந்த ஆண்டு 1924ஆம் ஆண்டுதான் காவிரி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 1968ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முதல்-அமைச்சராக இருந்த போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதெல்லாம் காவிரி உரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1970இல் இருந்து போராடி 1990ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர். 2007இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தவரும் கலைஞர் தான்.

2018இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்த அடியேன் உள்பட நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து, முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி மீட்புப் பயணம் நடத்தினோம். எனவே கலைஞரைப் பார்த்து தஞ்சை மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார் என்று சொன்னால் இதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது.

மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமரைச் சந்தித்து போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து என்பதை பற்றி கொஞ்சம் கூட இங்கிருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை.

எனவே காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவ மனையில் உயிர் பிரிகிற வரையில் காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கலைஞர். தயவுசெய்து இப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேச கூடாது. 

சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர் நலன் அடிப்படையாக வைத்து அவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற உறுதிமொழிகள் எல்லாம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் - நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும்.

கலைஞர் பிறந்த மண் இந்த மண். கலைஞர் மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். எனவே அந்த வெற்றியை பெற்றுத்தருவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் .தி.மு.. ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும்?

கே.எஸ்.அழகிரி பட்டியலிட்டு விளக்கம்

தமிழகத்தில் .தி.மு.. ஆட்சி ஏன் அகற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், 20.3.2021 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். பிரசாரத்துக்கு ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தில் இருந்து சித்தராமையா உள்ளிட்டோரை அழைத்து இருக்கிறோம்.

இந்த தேர்தலின் முக்கியமான கருப்பொருளே, தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா, டில்லி ஆள வேண்டுமா என்பதுதான். மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழத்தை தமிழகம் ஆளும். மு..ஸ்டாலின் ஆளுவார். கூட்டணி கட்சிகள் துணை நிற்கும். இல்லை என்றால், தமிழகத்தை பா.ஜனதாதான் ஆளும், .தி.மு..வால் ஆள முடியாது.

தமிழகத்தில், .தி.மு..வை ஏன் அகற்ற வேண்டும் என்றால், முதல்கட்டமாக அவர்களால் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. மத்திய அரசிடம் இருந்து அவர்களால் எந்த உதவியையும், அனுமதியையும் பெற முடியவில்லை.

இரண்டாவதாக மொழி பிரச்சினை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்கிறது. அதற்கு .தி.மு.. அரசு துணை போகிறது. சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ரூ.300 கோடிக்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் செம்மொழியான தமிழுக்கு ஒதுக்கி இருக்கும் தொகை மிக மிக குறைவு. இதை தட்டிக்கேட்கும் துணிவு .தி.மு..வுக்கு இல்லை. காரணம் அவர்கள் மீது பல்வேறு விசாரணைகள் இருக்கின்றன. அதற்குப்பயந்து அவர்கள் மத்திய அரசை எதிர்ப்பது இல்லை.

அடுத்ததாக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாக தனியாருக்கு ஒதுக்கி வருகிறது. வங்கிகளை தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் இல்லை என்றால், ஜனநாயக சோசலிசத்தை பின்பற்றும் நாடாக இருக்க முடியாது.

இவற்றை எல்லாம் எதிர்க்க .தி.மு.. தயாராக இல்லாததால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதை வலியுறுத்தி எங்கள் பிரசாரத்தை மேற்கொள்வோம்.

பிரசாரத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்தல் வாக்குறுதி

மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சொத்துப்பட்டியலை வெளியிட வலியுறுத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (19.3.2021) நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், தேர்தல் அறிக்கை குழு தலைவர் சண்முகம், உறுப்பினர்கள் கண்ணன், தீபா, மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். கேரளாவை போன்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கவும், மதவழிபாட்டு நிகழ்ச்சிகளை தமிழில் நடத்தவும் வலியுறுத்துவோம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை தடுக்க பாடுபடுவோம்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,, அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க பாடுபடுவோம்.

முதல்-அமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தி வழக்கு தொடுக்க குரல் எழுப்புவோம். அனைத்து பணி நியமனங்களும் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வோம்.

தென்மாவட்டங்களில் எண்ணெய், பனை, தீப்பெட்டி, பட்டாசு போன்ற தொழில்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம். அரசிடம் இருந்து மக்களுக்கு தேவையான சேவையை விரைவாகவும், வெளிப்படையாகவும் பெறுவதற்கு சேவை பெறும் உரிமை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.

சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சி மற்றம் சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப வற்புறுத்துவோம்.

கடல்வழி போக்குவரத்து

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும், தமிழர்கள் 7 பேரை விடுவிக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.

சென்னை-புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் கடல்வழி போக்குவரத்திற்கு வற்புறுத்தப்படும். ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் இலவச வீட்டு மனை வழங்கவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையில் அரசு மூலம் வீட்டுமனை விற்பனை செய்யவும் வலியுறுத்துவோம்.

காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் உரிமை வழங்கிடவும், அவர்களுக்கு 8 மணி நேரம் மட்டும் பணி என்பதை உறுதி செய்யவும் குரல் கொடுப்போம்.

அனைத்து அரசுத்துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் வற்புறுத்துவோம்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணையதள வசதி செய்து கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கிடவும், சிறப்பு பிரிவினரான முதுகு தண்டுவடம், தசைச்சிதைவு, மனவளர்ச்சி பாதித்த கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத பராமரிப்பு உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் குரல் கொடுப்போம்.

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அயராது பாடுபடுவோம்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Comments