தேர்தல் களத்தில்..... : தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

புதுச்சேரியில் தி.மு.. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிசார்பில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளிலும், தி.மு.. 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டது. தி.மு.. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கியது.

காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதி வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வா‌‌ஷ்னிக் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஊசுடு-கார்த்திகேயன், கதிர்காமம்-செல்வநாதன், இந்திராநகர்-கண்ணன், காமராஜ் நகர்-‌ஷாஜகான், லாஸ்பேட்டை-வைத்தியநாதன், முத்தியால்பேட்டை-செந்தில் குமரன், அரியாங்குப்பம்-ஜெயமூர்த்தி, மணவெளி-அனந்தராமன், ஏம்பலம்-கந்தசாமி, நெட்டப்பாக்கம்-விஜயவேணி, நெடுங்காடு-மாரிமுத்து, திருநள்ளாறு-கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு-.வி.சுப்பிரமணியன், மாகி-ரமே‌‌ஷ் பிரேம்பாத். ஏனாம் தொகுதி வேட்பாளர் பட்டியல் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. உழவர்கரை தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெற்ற துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலனுக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. கடந்த முறை காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரானஷாஜகான் இந்த தேர்தலில் காமராஜ் நகர் தொகுதிக்கு மாறி உள்ளார். புதுச்சேரியில் குழப்பங்களுடன் பாஜக, அதிமுக, என்ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வு ரத்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் மொத்தம் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.அதன்படி,

விளவங்கோடு-எஸ். விஜயதரணி, வேளச்சேரி-ஜே.எம்.எச்.ஹாசன், மயிலாடுதுறை-எஸ்.ராஜகுமார், குளச்சல்-ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று (16.3.2021) வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,

புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை

கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவது

விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்

ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு

சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்

இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்களில், ஆகம விதிக்குட்பட்டு அர்ச்சகராகப்பாடசாலைகளில் பயின்று தேர்ச்சி பெற்ற இந்து மதத்தை சேர்ந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணிபுரியும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மார்ச் 29ஆம் தேதிக்குள்  தர வேண்டும்

 அஞ்சல் (தபால்) வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கரோனா பாதித்தவர்களுக்கும் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விடுதலை, ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது.  அந்த வகையில் அஞ்சல் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், மாற்றுத் திறனாளி வாக்களர்களின் தனி பட்டியலை வழங்க வேண்டும் . அப்போது தான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன் கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும் என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  அஞ்சல் வாக்கு பதிவு செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், இறுதி வேட் பாளர்  பட்டியல் வெளியிடப்பட்ட, ஒரு வாரத்துக்கு பின் பரிசீலிக்கப்பட்டு, வழங்கப்படும். மார்ச் 29ஆம் தேதி, இந்த பட்டியல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தொகுதி வாரியாக அஞ்சல் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை, மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாள் (ஏப்.6) பொது விடுமுறை தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம், பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நேற்று தொழிலாளர் நல ஆணையர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

அதில், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135பி-யின்அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்டநிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்.6ஆம் தேதி, அவர்கள் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று (16.3.2021) வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல் 6ஆம்தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையும் கருத்தில் கொண்டு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை வழங்குவதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என அரசியல் கட்சிகளும் விடுமுறைக்கு பரிந்துரைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments