தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

 தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனையில்ரூ.100 கோடி பணம்தங்கம் பறிமுதல்;

தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

பணம்-பரிசுப்பொருட்கள் வழங்க தடை

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பறக்கும் படை

இதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது.இதுதவிர ..எஸ். அதிகாரிகளை கொண்ட தேர்தல் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்களும் நியமிக்கப் பட்டனர். தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக 4,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பறக்கும் படையினர் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ரூ.100 கோடி பறிமுதல்

இதுவரை நடந்த சோதனையில்  பணம், தங்கம், வெள்ளி மற்றும் இதர உலோக பொருட்கள், சேலைகள், துணிமணிகள், மடிக்கணினி (லேப்-டாப்), குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12.3.2021  வரை நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 99 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம்- வெள்ளி பொருட்கள் மற்றும் இதர உலோக பொருட்கள், சேலை, துணிமணிகள், மடிக்கணினி, குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.11ஆம் தேதி வரை ரூ.51 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.48 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கம் அடங்கும்.

 மேற்கண்ட தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

காங்கிரஸ் வேட்பாளர்கள்

பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25-சட்டமன்ற தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்டமாக  21 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பொன்னேரி- துரை சந்திரசேகர்,

சிறீபெரும்புதூர்- கே செல்வபெருந்தகை

சோளிங்கர்-   முனிரத்தினம்

ஊற்றங்கரை- ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்

ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்

ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவெரா

உதகமண்டலம்- ஆர்.கணேஷ்

கோயம்புத்தூர் (தெற்கு) : மயூரா எஸ் ஜெயக்குமார்

உடுமலைப்பேட்டை- தென்னரசு

விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி-ராமச்சந்திரன்

காரைக்குடி- மங்குடி

மேலூர்- ரவிசந்திரன்

சிறீவல்லிபுத்தூர்- மாதவ ராவ்

சிவகாசி- அசோகன்

திருவாடனை- கருமாணிக்கம்

சிறீவைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ்

தென்காசி - பழனி

நாங்குநேரி- ரூபி மனோகரன்

கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் - விஜய் வசந்த்

பொது இடங்களில் விளம்பரங்கள்

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 14 பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதாக இருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

5 மாநில சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், பொது இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டண அடிப்படையில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கான சூழ்நிலை இருந்தால் அந்த வாய்ப்பு அனைத்து கட்சிகளுக்கும் சமமாக கிடைக்கிறதா? என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என கூறப்பட்டு உள்ளது.இந்த விஷயத்தில் எந்த கட்சியும் ஏகபோக உரிமை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

தனியாரிடம்

ஒப்புதல் கடிதம்

மேலும் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடந்த கால உத்தரவுகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

தனியார் சுவர்களில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது போன்றவற்றுக்கு தனியாரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் வாகனங்களில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதிலும் உரிய விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

5 மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இது தொடர்பான கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

Comments