அன்னை மணியம்மையார் நினைவுநாள் மார்ச் 16

 “அன்னை மணியம்மையாரின் வியத்தகு ஆளுமை!”

திராவிடர்களின் முகவரியாகவும், தமிழர்களின் மூச்சுக் காற்றாகவும் விளங்கிய -விளங்குகின்ற தந்தை பெரியார் எனும் இமயம் மறைந்த பிறகு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் (6.1.1974) தோழர்களின் வேண்டு கோளை ஏற்று கழகத் தலைவராக ஒருமன தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்னை மணியம்மையார் அவர்கள்.

கழகத் தலைவராக அன்னையார் பல்வேறு சரித்திரச் சாதனைகளை வார்த் தெடுத்தார். அவற்றில் முத்தாய்ப்பாக; இன இழிவு ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக முதற்கட்டமாக ஏப்ரல் 3 - அன்று அன்னை மணியம்மையார் தலைமையில் கழகத் தோழர்கள், பொதுமக்கள், இளை ஞர்கள் - மாணவர்கள், மகளிர் என ஏராள மானோர் அணி அணியாக அணிவகுத்து நின்று மத்திய அரசுக்கு எதிராக சென்னை அண்ணா சாலை அஞ்சலகம் அருகில் அறவழியில் மக்கள் பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட்டது.

இரண்டாவது கட்டமாக தமிழகம் வருகின்ற மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்துவது குறித்து அன்னை மணியம்மையார் விடுதலையில் (3.4.1974) 'அயரமாட்டோம் அயரமாட்டோம்' என்ற தலைப்பில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தலையங்கம் தீட்டினார்.

இதனையொட்டி அனைத்துச் ஜாதியி னரும் அர்ச்சகராகும் உரிமையை வழங்கத் தீர்மானம் கொண்டுவந்து முதல்வர் கலைஞர் அவர்களால் 15.04.1974 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இதனை எதிரொலிக்கும் விதமாக 16.04.1974 அன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது என்பது அன்னையாரின் அயராத முயற்சிக்கு ஓயாத உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளான (செப்-17,1974) அன்று பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் அவர்கள் 'பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகம்' ஆகியவற்றை திறந்துவைத்து தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினார்.

அய்யா அவர்கள் விட்டுச்சென்ற பணியினை, தொடர்ந்து தொய்வின்றி அம்மா அவர்கள் தனது ஆளுமையால் -ஆற்றலால் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து பெரியாரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு கழகத் தோழர்கள் மட்டுமன்றி தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், மகளிர் ஆகியோர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

தந்தை பெரியார் பிறந்த ஈரோடு இல்லத்திற்கு தந்தை - தனயன் இருவர் பெயரையும் இணைத்து 'பெரியார்-அண்ணா' நினைவகம் என்று பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற அன்னை மணியம்மையாரின் விருப்பத்திற்கேற்ப தமிழக அரசு அய்யாவின் 97ஆவது பிறந்த நாளான 17.9.1975 ஆம் ஆண்டு 'பெரியார் - அண்ணா' நினைவகம் என்று பெயர்சூட்டி முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு மக்கள் பார்வைக்குத் திறந்து வைத்து அகமகிழ்ந்தது.

மேலும், திராவிட இனத் தலைவர்களான இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இந்தியாவின் தலைநகரான டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் தசராப் பண்டிகையின்போது இராம லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்விழாவில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே இவ்விழாவினை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியும், கோரிக்கை விடுத்தும், தந்திகள் அனுப்பியும்  உரிய பதில் கிடைக்காத காரணத்தால் அன்னை மணியம்மையார் தலைமையில் 25.12.1974  அன்று காலை பெரியார் திடலில் 'இராவண லீலா '  நிகழ்ச்சி மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும், மிகுந்த எழுச்சியுடனும் துவங்கியது.

பெரியார் திடலில்  கருங்கடல்     சங்க மித்ததோ என்று வியக்கும் வகையில் காலை முதல் உணர்ச்சிப் பிழம்பாய் அலைகடலென திரண்டிருந்த கருஞ்சட்டைத் தோழர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள், பல்வேறு சமுதாயச் சீர்திருத்த இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் உள்ளிட் டோர் ஆர்வத்தோடு வெள்ளமென திரண்டிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் இரவு 07.00 மணி அளவில் தந்தை பெரியார் வாழ்க! இராவண லீலா வெல்க! இராமன் ஒழிக! என்று விண்ணைப் பிளக்கும் ஒலி முழக்கங்களுடன் ஆரிய ராமன், லட்சுமணன், சீதை ஆகிய உருவங்களுக்கு அன்னை மணியம்மையார்  'தீ' வைத்து எரித்தார். உருவ பொம்மைகள் எரிந்து வீழ்ந்தன. ஆம், வீழ்ந்தது ஆரியம்! வீறு கொண்டு எழுந்தது திராவிடம்!  வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இச்சரித்திரச் சாதனை அன்னை மணியம்மையாரின் வியத்தகு ஆளுமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கேரளா - வைக்கம் போராட்டப் பொன்விழா மாநாட்டில் (26.4.1975) அம்மா அவர்கள் கலந்துகொண்டு பெண்கள் மாநாட்டை துவக்கிவைத்து அனைவரும் வியக்கும் வகையில் உணர்ச்சிமிகு உரை ஆற்றினார். மேலும், தஞ்சைத் தரணியில் 1976 ஆம் ஆண்டு ஜனவரி 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள்  'சுயமரியாதை இயக்கப் பொன்விழா' மாநாட்டினை எழுச்சியோடு நடத்தி கழக வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கவைத்த பெருமை அன்னை மணியம்மையாரையே சாரும்.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ம் நாள் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்ட நிலையில், 31.01.1976 அன்று இரவு முதல் தமிழ்நாட்டில் நடைபெற்றுவந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் இரவோடு, இரவாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையில் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட -முடக்கப்பட்ட நிலையில் அன்னை மணியம்மையார் தன்னந்தனியாக களத்தில் நின்று கழகத்தைக் கட்டிக்காத்ததோடு மட்டுமன்றி, கழகக் குடும்பங்களையும் அரவணைத்து ஆதர வளித்தது நம் அன்னைக்கே உரிய தனிச் சிறப்பாகும்.

நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னல்கள் - இடையூறுகளுக்கு மத்தி யில் சென்னை பெரியார் திடல் முகப்பில் எழில்வாய்ந்த ஏழு அடுக்கு மாளிகையினை கட்டிமுடித்து அதற்கு 'பெரியார் பில்டிங்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் அன்னை மணியம்மையார். நெருக்கடி நிலை தகர்த்தெறியப்பட்ட பிறகு அன்னையின் தலைமையில் 20, 21.2.1977 ஆகிய இரு நாட்களில் 'பெரியார் பில்டிங்' திறப்பு விழா, மிசாவில் சிறை ஏகி மீண்ட கருஞ்சட்டைத் தோழர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.1977) விழா ஆகியவற்றைக் கோலாகலமாகக் கொண்டாடி சரித்திரச் சாதனை படைத்தார் அம்மா அவர்கள்.

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் ஆற்றிய சமுதாயப் தொண்டை தொய்வின்றி சிறப்புற ஆற்றிட, தன்னையே கருப்பு மெழுகுவத்தியாக உருக்கிக் கொண்டதோடு மட்டுமன்றி எஞ்சிய வாழ்நாளையும் தமிழ் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட தொண்டறத்தின் தூய உள்ளம், மனிதநேயத்தின் மறுவடிவம், அர்ப்பணிப்பின் அடையாளம் அம்மா அவர்கள் ஆவார்.

உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத் திற்குத் தலைமையேற்று காலத்தை விஞ்சி நிற்கும் வகையில் செயற்கரிய சாதனைகள் செய்த - ஆளுமை நிறைந்த முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையாரின் 102- ஆவது பிறந்தநாளை (மார்ச் -10, 2021) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கொண்டாடி மகிழ்ந்துள்ள இனிய தருணத்தில் தமிழ்கூறும் நல்லுலகம் அன்னையை வாயார மனதாரப் பாராட்டி மகிழ்கிறது, போற்றிப் புகழ்கிறது.

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

-சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

Comments