வருமானக் குறைவுள்ள உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

 மத்திய அரசுக்கும், அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை, மார்ச் 11- இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத் துக்கு விரோதமாக அண்ணா பல்கலைக்கழகமும், மத்திய அரசும்  செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநிலஅரசின் உத்தரவை மீறி,  அண்ணா பல்கலைக்கழகம் தமிழக மக்களுக்கு எதிராக, எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்கள் வழங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறி விப்பு வெளியிட்டது.  இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் ஈடுபட்டு வருகின்றன என்று காட்டமாக தெரிவித்து உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு  பொதுப்பிரிவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில்,  மத்திய அரசின் நிதியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்.டெக். படிப்புகளில் 49.05 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதுடன்,  உயர்வகுப்பினருக்கான 10சதவிகித இடஒதுக்கீடு அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.  அதன் அடிப்படையில் எம்.டெக். உயிரிதொழில்நுட்பவியல் படிப்பில் உள்ள 25 இடங்களில் 3 இடங்கள் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அந்த 3 இடங்களும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர் களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால்,  இந்த இட ஒதுக்கீட்டை ஏற்க தமிழகஅரசு மறுத்து வருகிறது. தமிழக அரசுக்கு சொந்தமாக  உள்ள கல்வி மற்றும்வேலைவாய்ப்புகளில் உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஒதுக்கீட்டைப் பெற மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்னும் சான்றிதழைப் பெறவேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கான  பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் என்னும் சான்றிதழ் வழங்குவதை தமிழகஅரசு  நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால், தமிழக அரசின் அனுமதியின்றி,  அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக அதனை அமல்படுத்தி இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அண்ணா பல்கலைக்கழகத்தை கடுமையாக சாடினார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான தமிழகஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் விஜய்நாராயணன், தமிழகஅரசு உயர்வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக் கீட்டை ஏற்கவில்லை என்று தெரிவித்ததுடன்,  இந்த இட ஒதுக்கீடானது,  மத்திய அரசுப்பணிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கூறி அதற்கான மாநில அரசின் தீர்மானத்தையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி புகழேந்தி,  தமிழகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில், மத்திய அரசும்,  அண்ணா பல்கலைக்கழகமும் செயல்படுவதாக கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும்,  அண்ணா பல்கலைக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம்,  மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே .டபிள்யூ.எஸ். சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டதைப் போல 49.5% இட ஒதுக்கீட்டை ஏன் பின்பற்றவில்லை என்பதற்கும், இந்த ஆண்டு 10%  ஒதுக்கீடு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார். அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கொள்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments