அன்னை மணியம்மையாரின் 102ஆவது பிறந்த நாள் விழாசென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கம்

சென்னை, மார்ச் 14- அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்த நாள் விழா மகளிர் எழுச்சி கருத்தரங்கம், புத்தக வெளியீட்டு விழா 10.3.2021 அன்று காலை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நன்றிப்பெருக்குடன் அன்னை மணியம்மையார் 102ஆவது பிறந்த நாள் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், தந்தைபெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுதியேற்றனர்.

நூல் வெளியீட்டு விழா

தந்தைபெரியாரின் பெண்ணுரிமைப்போர்-வைக்கம் போராட்ட பொன்விழாவில் அன்னையார் ஆற்றிய உரைபுத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  வெளியிட மருத்துவர் மீனாம்பாள் பெற்றுக்கொண்டார். ஒரு புத்தகத்துக்கான நன்கொடை ரூ.20. ஆறு புத்தகங்கள்  நன்கொடை மதிப்பு ரூ.120. நூல் வெளியீட்டு விழாவில் தள்ளுபடிபோக  ரூ.100க்கு வழங்கப்பட்டது.

பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தாம்பரம் ப.முத் தையன், ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிசெல்வி,  வெ.ஞான சேகரன், செந்துறை இராஜேந்திரன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வி.வளர்மதி, அம்பத்தூர் நடராஜன், தகடூர் தமிழ்செல்வி, தி.செ.கணேசன், ஆ.வெங்கடேசன், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், ஆவடி இளவரசு, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தாம்பரம்

கோ.நாத்திகன், பசும்பொன்செந்தில்குமாரி, பூவை செல்வி உள்பட ஏராளமானவர்கள் புத்தகத்தை தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மகளிர் எழுச்சி கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் பெரியார் களம் இறைவி இணைப்பு ரையில் உலக நாத்திக அமைப்பாகிய திராவிடர் கழகத்தின் ஒப்பற்ற தலைமையை தந்தைபெரியாருக்குப்பிறகு ஏற்று வழிநடத்தி அன்னை மணியம்மையார், சரியான தலை மையையும் நமக்கு அடையாளம் காட்டிய அன்னையாரின் 102ஆவது பிறந்த நாளில் மகளிர் எழுச்சி கருத்தரங்கம்  நடைபெறுகிறது என்றார். கழக வழக்குரைஞரணி அமைப்பாளர், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர் வழக்குரைஞர் .வீரமர்த்தினி வரவேற்புரை ஆற்றினார்.

மதங்களும்,மகளிரும்-பா.மணியம்மை

மதங்களும்,மகளிரும் எனும் தலைப்பில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உரையாற்றினார். அனைத்து மதங்களிலும் பெண்களுக்கு கல்வி உரிமை அளிக்கப்படாமல், கட்டுப் படுத்தப்பட்டு மனிதத்தன்மை இல்லாமல் செய்தது மதம். மதங்களிலும் அடிமைப்படுத்தப்பட்டதாகவே பெண்களின் நிலை உள்ளது. பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த மலாலா பாகிஸ்தானில் மதஅடிப்படைவாதிகளின் துப்பாக்கிக்கு இலக்கு ஆகி, சிறு வயதிலேயே நோபல் பரிசு பெற்றார். இசுலாமிய மதத்தில் சில உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாக சொன்னாலும், நடைமுறையில் அப்படி உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். பிறக்கும் குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் நிலைபோய், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டு கருவிலிலேயே அழிக்கும் நிலைதான்  இந்து மதத்தில் உள்ளது. பெண் அதிகாரியிடமே பாலியல் முறைகேடு என்றால், நாம் போராடுகிறோம். ஆனால் ராமராஜ்யம் சொல்கின்ற .பி. மாநிலத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் போராடுகிறார்கள். 16 வயது மனிஷாவின் நிலை என்ன ஆனது? கையை வெட்டி, காலை வெட்டி, நாக்கை வெட்டி மிகக் கொடூரமாக கொலை செய்யும் நிலை உள்ளது. குற்றம் இழைத்தவர்களுக்குத் துணைபோவதையும் தாண்டி, அம்மாநிலத்தின் முதல்வர் சாமியார் என்ன கூறுகிறார்? சாதுக்கள் எல்லாம் ரத்தம் சூடானவர்கள் என்கிறார். மாட்டு மூத்திரத்தைக் குடிக்கின்ற நீ இரத்தம் சூடானவன் என்றால், மாட்டையே சூப் வைத்து குடிக்கின்ற மக்கள் எவ்வளவு சூடானவர்களாக இருப்பார்கள்? ஆனால், இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு காவல்நிலையம் போக முடியாது. காவல்துறையில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், மனுதர்மத்தையும் ஏற்று உத்தரவிடுகிறார். எனவே, பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றோம். அன்னை மணியம்மையார் பிறந்த இந்த நாளில் உறுதியேற்போம். நம்முடைய நாட்டையாவது நாம் காப்பாற்றிக்கொள்வோம். நம்முடைய உரிமையையாவது நாம் தக்க வைத்துக்கொள்வோம். அன்னை மணியம்மை யாரின் காலத்தில் கலைஞருக்கு சிலை எழுப்பிய அதே இடத்தில் மீண்டும் சிலையை எழுப்பி, திமுக தலைமையிலான ஆட்சி, வெற்றிக்கூட்டணியாக அமைந்து திராவிடம் வெல்லும், திராவிடம் வெல்லும், திராவிடமே வெல்லும் என்று இந்திய நாட்டுக்கே துணைகாட்டி நாம் நிற்போம் என்றார். 

லவ்ஜிகாத்?” - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனிலவ்ஜிகாத்?” எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழர்களுக்கு கிடைத்த அருட்கொடை தந்தை பெரியார் என்றால், தந்தைபெரியாருக்கே கிடைத்த அருட்கொடைதான் அன்னை மணியம்மையார். பெண் களுக்கு தாயாக கிடைத்தவர் தந்தைபெரியார் என்று சொன்னால்,தந்தைபெரியார் மறைந்த பிறகு தந்தையாக இருந்து இயக்கத்தையும் நம்மையும் காத்தவர்தான் அன்னை மணியம்மையார்.

லவ் ஜிகாத்?” என்று கேள்விக்குறியுடன் உள்ள இந்த தலைப்பிட்டுள்ளதன்மூலம் லவ் ஜிகாத் என்பது இல்லாத ஒன்று. தவறான வார்த்தை. இதை நடத்தக்கூடிய மத்திய பாஜக பாசிச அரசு மிகப்பெரிய வெறுப்பு அரசியலை உத்தரப்பிரதேசத்திலும் வடஇந்தியாவிலும் நடத்திக்கொண்டுள்ளது. அப்படி வெறுப்பு அரசியலை நடத்த முடியாமல் திண்டாடக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு மட்டும்தான் உள்ளது. இதை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்று காதல் மணங்களை, குறிப்பாக மத மறுப்புத்திருமணங்களை தடை செய்தார்கள். லவ் ஜிகாத் என்ற பெயரால் அவர்கள் சட்டம் கொண்டு வரவில்லை என்று விவாதிக்கிறார்கள். அந்த சட்டத்துக்கு மதமாற்றத் தடைச் சட்டம் என்றுதான் இருக்கிறது, குறிப்பாக கட்டாய மதமாற்றத்தைத்தான் தடுக்கிறோம் என்கிறார்கள். மதம் மாறி திருமணம் செய்துகொள்பவர்கள்மீது  உத்தரப்பிரதேசத்தில் மதமாற்றத் தடைச்சட்டம்2020இன்கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.  இங்கே ஜாதி மறுப்பு திருமணத்தை நாடகக்காதல் என்கிறார்கள். அங்கே மதமாற்றத்தடை என்கிற பெயரால் லவ்ஜிகாத் என்கிறார்கள். 

தந்தைபெரியார் 1937லேயே சொல்கிறார், ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம் முதலியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாம் நபர் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லியுள்ளார்.

தந்தைபெரியார்   கூறியுள்ளபடி, ஒருவரின் காதலைப் பற்றியோ, திருமணத்தைப்பற்றியோ நிர்ணயிப்பதற்கோ அல்லது நிர்ப்பந்திப்பதற்கோ மதவாத பாசிசக் கூட்டத்துக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது என்பதை உரக்கச்சொல்வதுதான், லவ் ஜிகாத் என்கிற பெயராலே மதமறுப்புத்திருமணங்களைத் தடைசெய்யக்கூடாது.

மற்றவர்களின் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்துகொண்டு தொட்டதற்கெல்லாம், இது காதல் அல்ல, அது காதலுக்கு விரோதம், அது காம இச்சை, இது விபச்சாரம்  என்பது போன்ற அதிகப்பிரசிங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்பும் இல்லாதவர்கள் எல்லாம் கூறுவதை, அப்படிப்பட்டவர்களின் கூற்றையும், கூறும் காதலையும் கற்றுக்கொள்ளாமல் விடலாம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஜாதி மறுப்புத் திரு மணங்களைத் தடைசெய்பவர்களை, உத்தரப்பிர தேசத்தில்  மதமறுப்புத் திருமணங்களைத் தடைசெய்ப வர்கள் அனைவரும் செய்யக்கூடிய செயல் அதிகப் பிரசிங்கித்தனமான, பொறுப்பில்லாத செயல் என்பதை தந்தைபெரியார் அன்றே கூறியிருக்கிறார்.

2018இல் கேரளாவில் ஹாதியா வழக்கில் மதம் மாறி செய்துகொண்ட திருமணத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. உச்சநீதிமன்றம் அந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளிக்கிறது. அதற்குப்பிறகு வந்த அனைத்து வழக்குகளிலுமே காதல் திருமணங்களை  நாடகக் காதல் என்றோ, லவ்ஜிகாத் என்றோ, நிர்ப்பந்தம் என்றோ பெயர்வைத்து, எந்த விதமான ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களையும் தடை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம்  சொன்னது.

ஒருவேளை உச்சநீதிமன்றத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் மதித்தால் லவ்ஜிகாத் என்ற வார்த்தைக்கு இடமிருக்காது.  அரசமைப்புச்சட்டம் அவர்களுக்கு சட்டம் கிடையாது. பாசிச பாஜகவுக்கும், ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் அவர்கள் வழியில் தமிழ்நாட்டிலுள்ள அடிமை ஆட்சியும் பின்தொடர்கிறது.  அதுதான் பெண் எஸ்பியின் வழக்கிலும் நடந்தது என்று உரையில் குறிப்பிட்டார்.

மகளிருக்கு தேவை 50 விழுக்காடு இடஒதுக்கீடு  

தகடூர் தமிழ்செல்வி

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்விமகளிருக்கு தேவை 50 விழுக்காடு இடஒதுக்கீடு  எனும் தலைப்பில் உரையாற்றினார். தந்தைபெரியாரைத் தொடர்ந்து அன்னை அணியம்மையார், தமிழர் தலைவர்  தலைமையில் இயக்கம் கண்ட களங்கள், மாநாடுகளில் பெண்களின் உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டி பேசினார். இயக்கத்தில் தலைமைச்செயற்குழு, பொதுக் குழுவில் மகளிர் அதிகம் உள்ளனர் என்பதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெருமையுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்கீழ் உள்ளாட்சிகளில் 33 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு, கலைஞர் ஆட்சியில் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட 30 விழுக்காடு இடஒதுக்கீடு. நாட்டிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்த ஒரே தலைவர் தமிழர் தலைவர்தான். 1929இல் செங்கற்பட்டு மாநாடு, 1944சேலம் மாநாடு, 1999இல் ஊற்றங்கரையில் பாலியல் நீதி மாநாடு, 2003இல் பட்டுக்கோட்டை மாநாடு, தலைமைச்செயற்குழுக் கூட்டத் தீர்மானம், திருப்பூர் திராவிடர் எழுச்சி மாநாடு, சென்னையில் சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பெண்களின் உரிமைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் காட்டி, பெண்களின் உரிமையை தட்டிக்கேட்கும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான் என்றார்.

திராவிட இயக்கமும் மகளிரும்

வழக்குரைஞர் .அருள்மொழி

திராவிட இயக்கமும் மகளிரும்எனும் தலைப்பில்  கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி உரையாற்றினார்.

சமுதாயப்புரட்சி வீராங்கனையும், உலகின் மிக அதி சயமான நாத்திக இயக்கத்தின் தலைவருமான அன்னை மணியம்மையார் 102ஆம் ஆண்டு பிறந்த நாள்  விழா இன்று. அன்னை மணியம்மையாரைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு மிகச் சுருக்கமான அறிமுகத்தை செய்ய வேண்டுமென்றால், அவர் பொதுவாழ்க்கையில் இணைந்த காலம், தன்னை முழுமையாக ஓர் இயக்கத்துக்கு ஒப் படைத்துக்கொண்ட 1943இல் அவருக்கு வயது 25. அப் பொழுது அரசியல்  கட்டுரைகள் எழுதுகிற ஓர் எழுத் தாளராகவும், பேச்சாளராகவும் அரசியல்மணியாக அவர் இருந்தார்.

25 வயதுவரையில் சென்ற நூற்றாண்டில் ஒரு கொள்கைக்காக, இயக்கப்பணிக்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு பெண் அன்னை மணியம்மையார். அவ்வளவு காலத்திற்கு அன்றைய சூழ்நிலையில் ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழ்வது என்பதே வாய்ப்பில்லாத சூழல். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக பிடிவாதமாக இருந்து அதை சாதிப்பது என்பதில் அவர் பெற்ற முதல் வெற்றி அது.

இரண்டாவது அவர் தன்னை இந்த இயக்கத்துக்கு ஒப்படைத்துக்கொண்டார். இந்த இயக்கத்தின் தலைவரான தந்தைபெரியார் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த இரண்டு காரியங்களுக்காக தன்னு டைய மீதி வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டார்.

அந்த செயல், அவருடைய முடிவு அந்த தீர்மானம் இன்றைக்கு வரை தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே ஒரு பெண் தன் வாழ்க்கையில் எடுத்த முடிவிற்காக இவ்வளவு மோசமாக தூற்றப்பட்டார் என்பதில் யாரை வைத்தாலும் அவர்கள் இரண்டாமிடத்தில்தான் இருப்பார்கள். அத்தகைய அவதூறுகளை, இழிசொற்களை தாங்கிக்கொண்டு தான் எடுத்த முடிவிலிருந்து ஒரு அடிகூட பின்வாங்காத ஒரு பெண் அன்னை மணியம்மையார்.

இராணுவ வீரரின் மகள் அமித் கவுருடைய தந்தை பாகிஸ்தானுடன் நடந்த ஒரு சண்டையில் இறந்துவிட்டார்.  தந்¬யை இழந்து தவிப்பவர். தன் தந்தையைக் கொன்றது போர் என்றார்.  போரினால் பாகிஸ்தானாக இருந்தாலும் இராணு வத்தினர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தினர் தவிப்பார்கள் என்றார். அப்படி நாட்டுக்காக உயிரை விட்ட இராணுவ வீரரின் மகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களின் கைகளில் ஆட்சி உள்ளது.

அன்னை மணியம்மையார் இன்றைக்கு வாழும் பெண்களுக்கு மன உறுதியை விட்டுச் சென்றுள்ளார். முன்னோடியாக உள்ளார். 1920லிருந்து பெண்கள் பொதுவாழ்வுக்கு வந்த வரலாறு உள்து. அதற்கு முன்பும் சிலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஓர் அமைப்பில் இணைந்து செய்லபட்டவர்கள் என்றால், நாட்டின் விடு தலைக்காக அதாவது வெள்ளைக்காரன் வெளியேற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இயக்கத்தில் பெண்கள் இருந்தனர். பொதுவுடைமை இயக்கத்தில் பெண்கள் அரசியல், பொருளாதார விடுதலைக்காக இணைந்து செயல்பட்டனர். 1925லிருந்து பெண்கள் திரண்ட அமைப்பு சுயமரியாதை இயக்கம். பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது சுயமரியாதை இயக்கம்.  குழந்தைகள் அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னது சுயமரியாதை இயக்கம்.

சொத்துரிமையில் 5 விழுக்காடு கூட பெண்களுக்கு கிடையாது. உழைப்பிலே பெரும்பங்கு பெண்களுடையது. கிறித்தவத்தில், இசுலாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. ஆனால், இந்து மதத்தில் மனுஸ்மிருதிகளில் பெண்களுக்கு என்ன உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது? பெண்களுக்கு ஜீவனாம்சம் என்றால், உண்ணும் உணவு, கட்டும் துணிதான் ஜீவனாம்சம்.

1929 ஆம் ஆண்டில் பெண்கள் சொத்துரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனுஸ்மிருதிகளை தூக்கி எறியுங்கள் என்று. இந்து பெண்கள் சொத்துரிமைக்காக டாக்டர் அம்பேத்கர் பதவியை துறந்தார்.

கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கான உரிமை சட்டம் வந்தது. சார்பு நீதிமன்ற பணிகளில் 30 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதனால் உயர்நீதிமன்றத்தில் நிதிபதிகள் பெண்கள் வந்தார்கள். இரண்டு பெண்கள் டிஜிபி ஆகி ஓய்வு பெற்றார்கள். 1925இல் தொடங்கிய பயணம் ஒரு நூற்றாண்டாக பெண் களின் உரிமைக்கான அடித்தளத்தை இந்த இயக்கம் போட்டுத்தந்துள்ளது. வரலாற்றை தெரிந்துகொள்வோம். பின்பற்றுவோம்.

இவ்வாறு உரையில் அவர் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு நரேந்திர தபோல்கர்' விருது

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மராட்டிய அறக்கட்டளை வழங்கியநரேந்திர தபோல்கர் நினைவு விருதுஇணையவழியில் காணொலியில் 6.3.2021 அன்று வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற மும்பை தோழர்கள் இரவிச்சந்திரன், கணேசன் விருதினை பெற்றுக்கொண்டனர்.

அவ்விருதினை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் கழகத் துணைத்தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர். விருதுடன் அளிக்கப்பட்ட பரிசு தொகை ரூ.ஒரு லட்சத்தை அந்த அறக்கட்டளைக்கே அளித்து பெருமை சேர்த்தார் கழகத் தலைவர்.

Comments