அன்னை மணியம்மையாரின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

 நமது உரிமைக்காக - நமது விடுதலைக்காகநாம்தான் முன்வந்து பாடுபடவேண்டும்!

வைக்கம் பொன்விழாவில் அன்னையார் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 11  நமது  (பெண்கள்) உரிமைக்காக - நமது விடுதலைக்காக -நாம்தான் முன்வந்து பாடு படவேண்டும். நாம் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டு நமது  விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் வைக்கம் பொன்விழா கூட்டத்தில் (26.4.1975) உரையாற்றியதை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.

கருத்தரங்கம்

அன்னை மணியம்மையாரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (10.3.2021)  காலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்ற  தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய அருமை அன்னையார் அவர் களுடைய 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினையொட்டி ஒரு நல்ல கருத்தரங்கம் - ஏதோ நாம் மலர்வளையம் வைத்து அதோடு முடித்துவிட்டோம் என்று சொல்லாமல், யாருக்குப் பிறந்த நாள் விழாவை நாம் நடத்தினாலும் - நம்மைப் பொறுத்தவரையில் விழாக்கள் என்பது ஒரு சம் பிரதாய நிகழ்ச்சியல்ல. எந்த விழாவாக இருந்தாலும், அதனை கொள்கைப் பிரச்சார விழாவாக ஆக்கிக் கொள்ளக்கூடிய அந்தப் பக்குவத்தைத்தான், முறையைத்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தில் புகுத்தினார்கள்.

அந்த அடிப்படையில், இன்றைக்கும் அன்னையார் அவர்களின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாளினை யொட்டி, ஒரு நல்ல கருத்தரங்கம் - அறிவார்ந்த கருத்தரங்கம் - நம்முடைய சிந்தனைகளையெல்லாம் தூண்டிவிடக் கூடிய - விருந்து படைக்கக் கூடிய - அறிவுக்கு விருந்து பரிமாறக்கூடிய கருத்தரங்கமாக அமைந்த இந்தக் கருத்தரங்கத்திற்கு மிகச் சிறப்பான வகையில் வரவேற்புரையாற்றிய வழக்குரைஞரும், பெரியார் இலவச சட்ட மய்யத்தினுடைய பொறுப் பாளரும், புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சியின்மூலமாக பிரச்சாரப் பணியை செய்துவரக்கூடிய அருமைத் தோழர் வீரமர்த்தினி அவர்களே,

இந்நிகழ்வில் ‘‘திராவிட இயக்கமும் - மகளிரும்'' என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அன்பிற்குரிய அருமைத் தோழர் .அருள்மொழி அவர்களே,

‘‘மதங்களும்- மகளிரும்'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞரும், திராவிட மகளிர்  பாசறையின் மாநில செயலாளருமான பா.மணியம்மை அவர்களே,

லவ் ஜிகாத்'  என்ற தலைப்பில்  சிறப்பான வகையில் இங்கே கருத்துரையாற்றியுள்ள வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களே,

மகளிருக்குத் தேவை 50 சதவிகித இட ஒதுக்கீடு'' என்ற தலைப்பில் கருத்தரங்கத்தில் உரையாற்றிய தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே,

கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் மானமிகு குமரேசன் அவர்களே, மாவட்டக் கழக மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்  - இயக்கப் பொறுப்பாளர்களே, இருபால் தோழர்களே, கழகத் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய இயக்கம் போன்று  இந்தியாவிலேயேவேறு எங்கும் கிடையாது

நம்முடைய விழாக்கள், நிகழ்வுகள் என்று சொன்னாலும், நம்முடைய இயக்க வெளியீடு களை வெளியிடுகிறோம். இதுபோன்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா விலேயே வேறு எங்கும் கிடையாது. இவ்வளவு புத்தகங்களை வெளியிடுவதும், அதை வாங்கிப் படிக்கின்றவர்களும் அதிகம். வேடிக்கையோ, கேளிக்கையோ போன்ற நிகழ்ச்சி கிடையாது நம்முடைய நிகழ்ச்சிகள் அறிவுக்கு உணவு.

ஒரு நல்ல முயற்சியில், அருமையான ஒரு நூல் இன்றைக்கு இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது.  அன்னை மணியம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா - நூற்றியொன்று நிறைவு விழா - இதே அரங்கத்தில் ஓராண்டிற்கு முன்பாக மாநாடு போன்று நடந்தது.

இந்த ஆண்டு நாம் விளம்பரப்படுத்தி எல்லோ ரையும் அழைக்கவில்லை. காரணம் என்னவென்றால், இன்னமும் கரோனா தொற்று அச்சம் இருக்கிறது. நம்முடைய தோழர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், முகக்கவசம்  அணிவது மிகவும் முக்கியம். அதை அலட்சியமாக நினைக்கவேண்டாம். ஏனென்றால், நோய் வந்த பிறகு  எச்சரிக்கையாக இருப்பது முக்கியமல்ல; வருமுன் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.அதுதான் மிகவும் முக்கியம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!

இன்னமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ‘விடுதலை'யை இணையத்தில் படித்துவிட்டு  வெளி நாட்டவர்கள் கேட்கிறார்கள்,  ‘‘காணொலி கூட்டத்தில் நாங்கள் எல்லாம் பார்த்தோம்; நிறைய பேர் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்களே, இன்னும் சிறிது காலம் முகக்கவசம் அணியச் சொல்லுங்கள்'' என்கிறார்கள்.

இப்பொழுது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி போடுகிறார்கள். நம்முடைய தோழர்கள், நம்முடைய குடும்பங்களில் உள்ளவர்களுக்கு யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு நாம் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது.

ஒரு காலத்தில், அம்மை தடுப்பூசி போட வந்தால், ஊருக்குள் இருப்பவர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஊசி போடுபவர் ஊரை விட்டுச் சென்றால்தான், அவர்கள் ஊருக்குள் வருவார்கள். ஊசி போட வருவது நமக்காக என்று நாம் உணரவேண்டும்.

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தலைக்கவசம் அணிந்துதான் வாகனம் ஓட்டவேண்டும்; நம்முடைய தோழர்கள் பலரை தலைக்கவசம் அணியாததால், நாம் இழந் திருக்கிறோம். ஆகவே, நம்முடைய தோழர் களுக்கும், மற்றவர்களுக்கும் நான் சொல்லுவது என்னவென்றால், தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

நம்முடைய அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் நீலமேகம் அருமையான நல்ல செயல்வீரர். கட்டுப்பாடு உள்ள ஒரு தலைவர். அவர் மோட்டார் சைக்கிள் ஓட்டும்பொழுது, தலைக்கவசத்தை வண்டியின் பின்புறம் வைத்திருப்பார் என்று நம்முடைய தோழர்கள் என்னிடம் சொன்னார்கள். அவரை அழைத்து, ‘‘தலைக்கவசம் என்பது நம்முடைய பாதுகாப் புக்காக, ஆகவே அதனை அணிந்துதான் நீங்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும்'' என்று அவரிடம் சொன்னேன்.

இன்னும் சிலர் தலைக்கவசத்தை வண்டியின் முன்புறம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக் கிளை ஓட்டிச் செல்லுகிறார்கள். வண்டிக்கு அணிகலன் போன்று அதை வைத்துச் செல் கிறார்கள். அதுபோன்று இருக்கக் கூடாது.

முடியாதது என்பதே எதிலும் கிடையாது;அது இயற்கை நியதி

இருட்டு என்றால் முடிந்து விடியல் வரவேண்டும்.  எப்படி இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டிற்கு விடியல் வரப் போகிறதோ, அதுபோன்று இருட்டு என்றால் முடியும்; நோய் என்றாலும் முடியும்; முடி யாதது என்பதே எதிலும் கிடையாது. அது இயற்கை நியதி.

ஆகவேதான், இந்தக் கூட்டத்திற்குக் கூட நிறைய பேரை அழைக்கவில்லை. இந்நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் மிக அருமையாக ஏற்பாடு செய்திருக் கிறார்கள்.

இங்கே வெளியிடப்பட்ட நூலில், அன்னை மணியம்மையார் அவர்களின் உரையைத் தொகுத்து கொடுத்திருக்கிறோம். அவருடைய நூற்றாண்டு விழாவிலும் அவரது  உரையைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம். நம்முடைய தோழர்கள் கடுமையாக உழைத்து அன்னை மணியம்மையார் அவர்களின் விடுபட்ட உரைகளைக் கண்டுபிடித்து கொடுத்தார்கள்.

26.4.1975 ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகப் போராட்டப் பொன்விழாவிற்கு அம்மா அவர்கள் என்னையும் அழைத்துச் சென்றார். அப்பொழுது உடல்நலக் குறைவோடு இருந்தார்கள் அம்மா. அம்மா அவர்கள் உரையாற்றியதை, ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்துச் சொன்னேன்.

மகளிர் அரங்கு என்பதற்கு கேரளத்தில் வனிதா சம்மேளனம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்து வார்கள்.

வைக்கம் என்பது ஒரு நகராட்சி. அந்த நகராட்சித் தலைவராக சிறீதர் நாயர் என்பவர் இருந்தார். தமிழ்நாட்டிலிருந்து அம்மாவுடன், நான், என்னுடைய வாழ்விணையர், இன்னும் சிலரும் சென்றிருந்தோம்.

வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடந்த இடத்தைப் பார்க்கும்பொழுது உணர்ச்சிபூர்வமாக இருந்தது எங்களுக்கு.

உணவு, உடை முதற்கொண்டு கேரளத்து மக்கள் மிகவும் எளிமையானவர்கள்.  அந்தக் கேரளத்து மக்கள் மத்தியில் வனிதா சம்மேளனத்தைத் தொடங்கி வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் உரையாற்றினார்.

‘‘.வெ.இராமசாமி நாயக்கர் வளைவு''

வெள்ளி விழா கொண்டாடியபொழுது தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு இல்லை. ஆனால், பொன்விழாவைக் கொண்டாடிய பொழுது எங்களையெல்லாம் அழைத்தார்கள்.  வைக்கம் ஊரில் முதல் வளைவு யாருக்கு அமைத்தார்கள் என்றால், வைக்கம் பொன்விழா நினைவாக ‘‘.வெ.இராமசாமி நாயக்கர் வளைவு'' என்று அமைத்தார்கள்.

ஏனென்றால், அவர்களுக்குப் பெரியார் என்பதை விட, அந்தக் காலத்திலிருந்து தலைமுறை தலை முறையாக பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்றால், ‘.வெ.இராமசாமி நாயக்கர்' என்றுதான் சொன்னார்கள். நாயக்கர் என்பது ஒரு பெரிய பட்டமாக அங்கே இருந்தது. அங்கே அம்மா அவர்கள் ஆற்றிய உரையைத்தான் இங்கே வெளி யிடப்பட்ட நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  பெண்களுடைய வாக்குகளைத்தான் அரசியல் கட்சிகள் குறி வைக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொன்னவுடன், ஆளுங் கட்சியில் இருப்பவர் உடனே ரூ.1500 கொடுப்போம் என்கிறார்.

பதவிக்கு வராதவர், வந்தவுடன் கொடுப்போம் என்கிறார். ஆனால், பதவியில் இருந்தவர்கள், இப் பொழுது ரூ.1500 கொடுப்போம் என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது.

வைக்கம் பொன்விழாக் கூட்டத்தில்அன்னை மணிம்மையாரின் உரை

மகளிர் பிரச்சினை இன்னும் தீராமல் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், சுமார் 46 ஆண்டுகளுக்கு முன்பு  வைக்கம் பொன்விழாக் கூட்டத்தில் அம்மா அவர்கள் வனிதா சம்மேளனத்தில் உரையாற்றும்பொழுது,

‘‘நமது உரிமைக்காக - நமது விடுதலைக்காக -நாம்தான் முன்வந்து பாடுபடவேண்டும். நாம் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டு நமது  (பெண் கள்) விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடவேண்டும்.

இன்னும் அரசியல் துறையினை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்கள் எல்லாத் துறை யிலும் சமபங்கு பெறவேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகளாகட்டும், பெண்கள் தயவு இல்லாமல் அரசியல் வாழ்வை வாழவே முடி யாது. இன்றைக்குச் சட்டசபைக்கு ஆண்கள் செல்லவேண்டுமானாலும், மற்ற மற்ற பதவி களுக்குப் போகவேண்டுமானாலும், ஆண் களுக்கு இருக்கின்ற அளவுக்குச் சரிசமமான உரிமை பெண்களுக்கும் உண்டு. பெண்களும் ஓட்டுப் போட்டால்தான் ஆண்கள் சட்ட சபைக்குச் செல்ல முடியுமே தவிர, ஆண்கள் மட்டும் ஓட்டுப் போட்டுக் கொண்டு தங்கள் ஓட்டு மூலம் சட்டசபைக்குச் செல்ல முடியாது.

மற்றும், தேர்தல் சமயத்தில் பெண்கள் ஓட்டினை வாங்க அரசியல்வாதிகள் வீடு வீடாக ஏறி இறங்குகின்றார்கள். கெஞ்சுகின் றார்கள். எப்படியாவது ஓட்டு வேட்டையாடி சட்டசபைக்கோ, பார்லிமெண்டுக்கோ சென்றுவிடுகின்றார்கள்.

மக்கள் தொகையில் சமமாக உள்ள பெண்கள் சமுதாயத்துக்குச் சம அந்தஸ்து அளிக்க முன்வருகின்றார்களா என்றால் இல்லை. மாநாட்டில் உரையாற்றிய ரோசம்மா பொன்னூஸ் அம்மையார் அவர்கள்கூட சொன்னார்கள் - இந்தக் கேரளச் சட்டசபையில் இரண்டே பெண்கள்தாம் உறுப்பினர்களாக உள்ளனர் என்று. இது நமக்கு எவ்வளவு கேவ லம்? படித்த மக்கள் அதிகமாக உள்ள கேரளத் தில் - அதுவும் படித்த பெண்கள் மிகுதியாக உள்ள கேரளத்தில் - இரண்டு பெண்கள்தான் சட்டசபையில் இருக்கின்றார்கள் என்றால், பெண்களைப்பற்றி எவ்வளவு கேவலமாக அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்!

சட்டசபைகளிலும், பதவிகளிலும் 100-க்கு 50 சதவிகிதம் பெண்களுக்குக் கிடைக்க வேண் டும் என்று பெண்கள் போராட வேண்டும்.''

அன்னை மணியம்மையார் அன்றைக்கு சொன் னது, இன்றைக்கும் பொருந்துகிறது அல்லவா!  பெண் களுக்கு 50 சதவிகிதம் வேண்டாம்; மூன்றில் ஒரு பாகம் - 33 சதவிகிதமாவது நிறைவேற்றப்பட்டு இருக்கவேண்டாமா?

கிட்டத்தட்ட ஒரு ஆறு, ஏழு பிரதமரைப் பார்த்தாகி விட்டது. ஆனால், அந்த சட்டம் ஊறுகாய் ஜாடியில் ஊறுவதுபோன்று ஊறிக்கொண்டே இருக்கிறது.

50 விழுக்காடு இருக்கிறவர்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவிகிதம்கூட இல்லையே!

130 கோடி மக்கள் தொகையில், மகளிருடைய தொகை 65 கோடி. 50 விழுக்காடு இருக்கிறவர்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவிகிதம்கூட அவர்களுடைய உறுப்பினர்கள், பிரதிநிதிகள் இல்லையென்றால், அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றுதானே சொல்லவேண்டும்.

அந்த ஜாதிக்கு இடம் கொடுக்கவேண்டும்; இந்த ஜாதிக்கு இடம் கொடுக்கவேண்டும் என்று சொல் கிறார்களே, முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படவேண்டும். அதைத்தான் இங்கே அருள்மொழி அவர்கள் சொன்னார்கள்.

திராவிட இயக்கத்தினுடைய சிந்தனைகள்தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது; ஏன், உலக நாடுகளுக்கேகூட என்றுகூட சொல்லாம்.

திராவிட இயக்கம்தான் முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது!

மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே, திராவிட இயக்கம் - நீதிக்கட்சிதான் பெண்களுக்கு வாக்குரிமையை அளித்திருக் கிறது.

ஆகவே, அந்த பெண்களுடைய வாழ்வுரிமை என்பது மிகமிக முக்கியமாகும். ஓட்டுரிமை என்பது பிறகு - வாழ்வுரிமையே அவர்களுக்கு இல்லை. அதைத்தான் அன்னை மணியம்மையார் உரை யாற்றும் பொழுது சொன்னார்.

(தொடரும்)

Comments