சொல்லாமல் சொல்லுதல்!
அரசின் இலவச ‘நீட்' வகுப்புக்கு மாணவர்கள் வருகை குறைவு.
‘நீட்'டுக்கு ஆதரவு இல்லை என்று மாணவர்களும், பெற்றோர்களும் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.
மூலத்தை விட்டுவிட்டு... வேறு எங்கோ பார்வையா?
ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு (40 ஆண்டுகள்வரை).
ஆசிரியர் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு என்ற தீக்கொள்ளி உள்ளவரை - ஆசிரியர்கள் நகர சுத்தி பணிகள்வரை மேற்கொள்ளும் நிலைமையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
தன்னம்பிக்கை இல்லை
தி.மு.க. கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் : - தமிழக பா.ஜ.க. தலைவர்.
அய்யோ உடையக் கூடாதா என்ற ஏக்கமும், ஆசையும் - அந்தோ பரிதாபம்!.
முதலிடம்
கோவில்களே!
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கவேண்டும் : - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
கோவில்கள்தான் இதில் முதலிடத்தில் இருக்கின்றன என்பது கவனத்தில் இருக்கட்டும் - சட்டத்துக்குமுன் அனைத்தும் சமம்தானே!.
இரசனையா - கொள்கையா?
நடிகர் ரஜினி மன்றத்தினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இரசிகத்தன்மையிலிருந்து விடுபட்டு கொள்கைத் தன்மைக்கு வருவது - வரவேற்கத்தக்கதே!
நடவடிக்கைகள் என்ன?
ஊரடங்கின்போது பெண்கள் உதவி எண்ணுக்கு இந்திய அளவில் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 24 புள்ளி 47 லட்சம் : - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
அவல நிலை இந்த இலட்சணத்தில் இருக்கிறது.... அது சரி, அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவாம்?
முழுக்க நனைந்த பின்!
தேவைப்பட்டால் வேளாண் சட்டங்கள் திருத்தம் : - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கொஞ்சம் இறங்கி வருகிறார்களோ! முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? முழுமையாக ரத்து செய்து தொலையுங்கள்!
யோசனை உண்டா?
கிராமக் கோவில் பூசாரிகள் இந்துக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் : - விசுவ ஹிந்து பரிஷத் அறிவிப்பு.
அப்படியே மல்லிப்பட்டினம் கோவில் பூசாரியை மயிலாப்பூர் கோவிலுக்கு மாற்ற யோசனை உண்டா?
அதில் என்ன
சந்தேகம்?
தானியம் பதுக்கலுக்கே மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் வழிவகுக்கும் : - ராகுல் காந்தி எம்.பி.,
அதில் என்ன சந்தேகம்? நாட்டு மக்களின் நலன் பேணவா கார்ப்பரேட்டுகள் இருக்கிறார்கள்?
பொருளாதாரத் தடை!
மியான்மா இராணுவத் தலைவர்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
சபாஷ், சரியான நடவடிக்கை! ஜனநாயகத்துக்கு கல்லறை எழுப்பி அதன்மீது இராணுவ அணிவகுப்பா?